‘கூலி’க்கு கோப எழுச்சி கொண்ட யாருமே ’வேட்டையனு’க்கு ஆனந்த எழுச்சி கொள்ளவில்லை!

கூலி படத்தின் லாஜிக்கல் ஓட்டைகள் பலராலும் கழுவி ஊற்றப்பட்டு வருகின்றன. அதையெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு விஷயம் புரியவில்லை: என்னவோ ரஜினி தொடர்ந்து கேவலமாகவே படங்கள் எடுத்து வருவது போல கொடுக்கப்படும் பிம்பங்கள். ‘இனிமேலாவது அவர் நல்ல கருத்துள்ள படங்களில் நடித்து தனது legacyயைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்,’ என்றும் சில பதிவுகள் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது.
கூலிக்கு முந்தைய ரஜினி படம் வேட்டையன். என்கவுண்டர் கொலைகள், தனியார் கல்வி நிறுவனங்களின் ஏமாற்று வேலைகள், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உருவாக்கும் சமத்துவமின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்தெல்லாம் பெரும் கவலையுடனும் தார்மீகக் கோபத்துடனும் பேசிய படம். அதே நேரம் அந்தப் பிரச்சினைகளை ஆவணப் படம் போலக் காட்டாமல் ஒரு த்ரில்லர் கதையின் ஊடாகக் காட்டிய படம். வழக்கமாக இடைவேளைக் காட்சியில் ரஜினி பாத்திரம் வில்லனுக்கு எதிராக ஒரு பெரும் வெற்றியை ஈட்டும் ஹைலைட்டுடன் இன்டர்வல் அறிவிப்பு வரும். வேட்டையனில் ரஜினி பாத்திரம் ஒரு மாபெரும் தவறை செய்து விட்டதை உணர்ந்து பெரும் அதிர்ச்சி கொள்ளும். இன்டர்வல் அறிவிப்பு வரும். படம் முழுவதும் ரஜினி பேசும் பன்ச் லைனை படத்தின் க்ளைமேக்ஸில் ரஜினியே உடைத்துக் கலாய்த்திருப்பார்.
இப்படிப் பல்வேறு வகைகளில் ரஜினியின் டெம்ப்ளேட்டை உடைத்து சமூகக் கவலைகளைப் பகிர்ந்த வேட்டையனை மக்கள் கொண்டாடினார்களா? படத்தின் ஒட்டு மொத்த வசூல் 255 கோடி. அதாவது கூலி இரண்டே நாட்களில் வசூலித்த தொகை! கூலிக்கு கோப எழுச்சி கொண்ட யாருமே வேட்டையனுக்கு ஆனந்த எழுச்சி கொள்ளவில்லை. காரணம், அவர்கள் யாரும் அந்தப் படத்தைப் பார்க்கவே இல்லை! படம் வெளியான போது அது ஏன் கொண்டாடப் பட வேண்டும் என்று சேப்பியனில் ஒரு வீடியோ பதிந்தோம். (லின்க் கமெண்டில்.)
வேட்டையனுக்கு மூன்று படங்கள் முன்பு ரஜினி நடித்த படம் காலா. விளிம்பு நிலை மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதை அழுத்தமாகப் பேசிய படம். இந்துத்துவ வன்முறையை அப்பட்டமாககக் காட்டிய படம். எனக்குத் தெரிந்து ராமாயணத்தை இந்த அளவு நேரடியாக விமர்சித்த இந்தியப் படம் வேறு இல்லை. இந்தியாவின் ஆதி நிறமான கறுப்பைக் கொண்டாடிய படம். இதிலும் ரஜினி தனது முந்தைய டெம்ப்ளேட்டுகளை எல்லாம் உடைத்திருப்பார். பேரன் பேத்திகள் கொண்ட ஒரு தாத்தாவாக நடித்திருப்பார். வில்லனிடம் அனைத்தையும் இழந்து, தனது போராட்டத்தில் தோற்று, இறுதியில் இறந்தும் போவார்.
இந்தப் படத்தை மக்கள் கொண்டாடினார்களா? காலாவின் ஒட்டு மொத்த வசூலே 160 கோடிதான். அதாவது கூலியின் முதல் நாள் வசூலை விடக் குறைவு!
பார்வையற்ற ஓர் இசைக் கலைஞனின் வாழ்வைப் பேசும் அழகியல் மிக்க ராஜபார்வை படம் எடுத்த கமல் அதில் 14 லட்சம் நட்டம் வந்து தன் வீட்டை அடமானம் வைக்க வேண்டி வந்தது, அந்தக் கடனில் இருந்து அவரை மீட்டது படு மோசமான மசாலாப் படமான சகலகலா வல்லவன்! இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
இதெல்லாம் ரஜினிக்குத் தெரியும். கூலியின் ஓட்டைகள் பற்றியும் தெரிந்திருக்கும். கூடவே அந்தப் படத்தின் வணிக சாத்தியங்கள் குறித்தும் முழுமையான புரிதல் கொண்டிருப்பார் என்றுதான் நம்புகிறேன். வேட்டையன் பட விழாவில், அதன் இயக்குநர் த செ ஞானவேலை அணுகியபோது அவர் , தான் ஒரு வணிகப் பட இயக்குநர் அல்ல, என்னை ஏன் அணுகுகிறீர்கள் என்று கேட்டதாகவும் அதற்கு ‘எனக்கு வணிகம் வேண்டுமெனில் லோகேஷ், நெல்சன் போன்றோரிடம் போவேன். எனக்கு நல்ல படம் வேண்டும். எனவேதான் உங்களிடம் வந்தேன்,’ என்றும் ரஜினி பேசி இருந்தார். காலாவில் நடித்ததற்கும் இதே சிந்தனைதான் காரணமாக இருந்திருக்கும்.
ஆகவே, அவரது முடிவுகளில் அவர் தெளிவாகவே இருக்கிறார். இதோ, நான்கே நாட்களில் கூலி 400 கோடியைத் தாண்டி விட்டது. இந்த வார இறுதிக்குள் 500ஐத் தாண்டி விடும். ஓடிடி, சாட்டிலைட் என்று 600-700ஐத் தொட்டு விடும். தயாரிப்பாளர், இயக்குநர் முதல் ரஜினி வரை அனைவரும் ஹேப்பி.
75 வயதிலும் தனது தேர்வுகளில் ரஜினி தெளிவாகவே இருக்கிறார். புதிய இளைஞர்களுடன் இணைந்து தொடர்ந்து இயங்கி தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். இப்படி 50 ஆண்டுகளாக நாயகன் பாத்திரத்திலேயே தொடர்ந்து கொண்டு, கூடவே தனது வணிக சந்தையையும் விரிவாக்கிக் கொண்டே வரும் வேறு நடிகர் இந்த உலகிலேயே இல்லை.
எனவே ரொம்பவும் அனத்தாமல் சற்று சும்மா இருக்கவும்.
-ஸ்ரீதர் சுப்ரமணியம்