சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் – விமர்சனம்

நடிப்பு: வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, மகேஷ் தாஸ் மற்றும் பலர்
இயக்கம்: அனிஷ் அஷ்ரப்
ஒளிப்பதிவு: அரவிந்த்
படத்தொகுப்பு: விஷால்
இசை: ஏஜேஆர்
தயாரிப்பு: மகேஸ்வரன் தேவதாஸ், சின்னதம்பி புரொடக்ஷன்
இணை தயாரிப்பு: சாண்டி ரவிச்சந்திரன்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
தமிழ்வாணன், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் போல பிரபல கிரைம் கதாசிரியராகத் திகழ்ந்தவர் ஜீவன்குமார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை பத்து அத்தியாயங்கள் கொண்ட தொடராக எழுதி வெளியிட விரும்புகிறது, சென்னையிலிருந்து வெளியாகும் ‘மனிதம்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழு. அவர்கள் மதுரைக்குச் சென்று ஜீவன்குமாரின் மகன் பிரபாகரனை (வெற்றி) சந்தித்து, உரிய அனுமதி பெறுவதோடு, ஜீவன்குமார் வாழ்க்கைத் தொடரை எழுதவிருக்கும் பெண் கட்டுரையாளர் ஸ்வாதிக்கு (ஷில்பா மஞ்சுநாத்), ஜீவன்குமார் வாழ்க்கை பற்றிய தகவல்களை விவரிக்க சென்னை வருமாறு கேட்டுக் கொள்கிறார்கள். இந்த அழைப்பை ஏற்று சென்னை செல்கிறார் பிரபாகரன்.
சென்னையில் தற்செயலாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையாவின் (தம்பி ராமையா) அறிமுகம் பிரபாகரனுக்குக் கிடைக்கிறது. அப்பாவின் கிரைம் கதைகளைப் படித்து புலனாய்வு அறிவையும், திறமையையும் வளர்த்து வைத்திருக்கும் பிரபாகரன், ஒரு கொலை கேஸ் முடிச்சை அவிழ்க்க இன்ஸ்பெக்டர் ராமையாவுக்கு உதவியாக இருக்கிறார். பிரபாகரனின் துப்புத் துலக்கும் திறன் கண்டு வியக்கும் ராமையா, அவரை தனக்கு உதவியாக தன்னுடனே வைத்துக்கொள்கிறார்.
இந்நிலையில், தொலைக்காட்சி பெண் நிருபர் ஒருவர் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலர் ஒருவர்பின் ஒருவராக அடுத்தடுத்து ஒரே மாதிரியாக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த தொடர் கொலைகளின் பின்னணியையும், இதற்கு காரணமான சைக்கோ கொலையாளியையும் கண்டுபிடிக்க பிரபாகரனும், இன்ஸ்பெக்டர் ராமையாவும் களத்தில் குதிக்கிறார்கள். கொலையாளியை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும்போது, ராமையாவின் வாழ்க்கையில் பேரதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. போட்டித் தேர்வுக்கு படித்துவந்த ராமையாவின் மகள், மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழக்கிறார்.
ராமையாவின் மகளின் இறப்பு கொலையா, தற்கொலையா? கொலை என்றால் செய்தது யார்? தற்கொலை என்றால் காரணம் என்ன? சைக்கோ கொலையாளி யார்? அவர் தொடர் கொலைகள் செய்ய காரணம் என்ன? அவரது பின்னணி என்ன? கொலையாளிக்கு / கொலையாளிகளுக்குக் கிடைத்த தண்டனை என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை பிரபாகரன் சாமர்த்தியமாக கண்டுபிடிப்பது வெளிப்படுத்துவதே ‘சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, பிரபல கிரைம் கதாசிரியரின் மகன் பிரபாகரனாக வெற்றி நடித்திருக்கிறார். அவருக்கு ’கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்’ ஜானர் படங்களில் நடிப்பது புதிதல்ல; என்றாலும், காக்கி சீருடை அணிந்த போலீசாக புலனாய்வு செய்வது என்பதிலிருந்து மாறி, கிரைம் கதைகளை வாசித்துப் பெற்ற அறிவைக் கொண்டு ஒரு சாமானியனாக புலனாய்வு செய்வது என்பது புதுமையான கதாபாத்திரம் தான். அதை நன்றாக புரிந்துகொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடி, டான்ஸ், சீரியஸான புலன் விசாரணை என அனைத்தும் கலந்து கட்டி வருவதால், நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
நாயகியாக, பத்திரிகையில் எழுதும் பெண் கட்டுரையாளர் ஸ்வாதியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார். அவருக்கு கதையின் ஆரம்பத்திலும் கிளைமாக்சிலும் இருக்கும் முக்கியத்துவம் இடையில் இல்லாமல் போன போதிலும், கொடுத்த வேலையைக் குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையாவாக தம்பி ராமையா நடித்திருக்கிறார். வழக்கமான உடல்மொழியும், வசன உச்சரிப்புமாக காமெடி பண்ணினாலும், மகளின் மரணத்திற்குப் பிறகு வரும் காட்சிகளில் உருக்கமாக நடித்து பார்வையாளர்களை கண் கலங்க வைத்துவிடுகிறார்.
தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளியாக அறிமுக நடிகர் மகேஷ் தாஸ் நடித்திருக்கிறார். பாதி தீய்ந்த முகமும், முன்னால் முகத்தில் விழும் முடியுமாய், அச்சம் தரும் தோற்றத்துடன், கொடூர பார்வையுடன் பயங்கர வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடும் மின்னல் ராஜாவாக வரும் ரெடின் கிங்ஸ்லி, பார்வையாளர்களை சிரிக்க வைக்க படாதபாடு படுகிறார். சிரிப்பு தான் வர மறுக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் அனிஷ் அஷ்ரப். ‘OPEN PUZZLE’ என்ற வகையைச் சேர்ந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில், அடுத்து என்ன நடக்கும் என்று அச்சத்துடன் எதிர்பார்க்கும் விதமாக பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். மேலிடத்து இளைஞர்களின் வக்கிர புத்தியையும், அவர்கள் பெண்களுக்கு எதிராக செய்யும் பாலியல் வன்கொடுமைகளையும் இயக்குநர் தோலுரித்துக் காட்டியிருப்பது சிறப்பு.
இசையமைப்பாளர் ஏ.ஜே.ஆரின் பின்னணி இசை, அரவிந்தின் ஒளிப்பதிவு, விஷாலின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன.
‘சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்’ – கிரைம் மற்றும் புலனாய்வுக் கதை விரும்பிகளுக்குப் பிடிக்கும்!
ரேட்டிங்: 3/5.