ஹவுஸ் மேட்ஸ் – விமர்சனம்

நடிப்பு: தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி வைத்தியநாதன், தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக், கவிதா பாரதி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: டி.ராஜவேல்
ஒளிப்பதிவு: எம்.எஸ்.சதீஷ்
படத்தொகுப்பு: ஏ.நிஷார்
இசை: ராஜேஷ் முருகேசன் ஷரேஃப்
தயாரிப்பு: சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், பிளே ஸ்மித் ஸ்டுடியோஸ் & சௌத் ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்கள்: சிவகார்த்திகேயன், எஸ்.விஜயபிரகாஷ்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, திரு
சென்னையில், ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார், ஐடி நிறுவன ஊழியரும் கதையின் நாயகனுமான கார்த்திக் (தர்ஷன்). அந்த வீட்டு சொந்தக்காரரின் (கவிதா பாரதி) மகள் அனு (அர்ஷா சாந்தினி பைஜூ). அவரும் கார்த்திக்கும் காதலர்கள் ஆகிவிடுகிறார்கள். திருமணத்துக்கு சம்மதம் கேட்கப் போக, டென்ஷன் ஆகும் வீட்டு சொந்தக்காரர், “என் மகளை கல்யாணம் பண்ண உனக்கு என்ன தகுதி இருக்கு? உனக்குன்னு ஒரு சொந்த வீடு இருக்கா?” என்று கார்த்திக்கை ஏளனம் செய்து, எள்ளி நகையாடி, வீட்டைவிட்டு விரட்டி விடுகிறார். இதனால் மனக்காயம் அடையும் கார்த்திக், எப்படியாவது அனுவை கரம் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் அங்கும் இங்கும் ஓடியாடி, உருண்டு புரண்டு, பணம் புரட்டி, 45 லட்சம் ரூபாய்க்கு வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள ’எஃப் 1’ என்ற ‘செகண்ட் ஹேண்ட்’ வீட்டை வாங்கி, கிரையப் பத்திரம் பதிவு செய்து முடித்தபின், தன் காதலி அனுவின் அப்பா முன் போய் நிற்கிறார். “நான் சொன்னதுக்காக வீடு வாங்கினாயாக்கும்…? இப்பவும் சொல்றேன்… உனக்கு என் மகளைத் தர மாட்டேன்” என்று சொல்லிவிடுகிறார் அனுவின் அப்பா. எனினும், அனு துணிந்து வீட்டைவிட்டு வெளியேறி வர, அவரும், கார்த்திக்கும் திருமணம் செய்துகொண்டு, புதுமணத் தம்பதியராக, புதிதாக வாங்கிய ‘செகண்ட் ஹேண்ட்’ வீட்டில் குடியேறுகிறார்கள்.
கார்த்திக் வேலைக்குச் சென்ற பிறகு, அந்த வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதற்கான அறிகுறிகளை கவனிக்கிறார் அனு. கதவு தானாக திறந்து மூடுவது, குழாய் தானாகத் திறந்து தண்ணீர் கொட்டுவது, சுவரில் திடீரென கோணல் மாணலாக, குழந்தைத்தனமான ஓவியம் வரையப்படுவது, தானாக ‘ஆன்’ ஆகும் டிவியில் கார்ட்டூன் படம் ஓடுவது என்பன போன்ற அமானுஷ்ய விஷயங்கள் நிகழ்வதைப் பார்த்து அதிர்ந்து அச்சப்படும் அனு, இது குறித்து கணவர் கார்த்திக்கிடம் சொல்லுகிறார். முதலில் நம்ப மறுக்கும் கார்த்திக், பின்னர் தன் கண்ணால் பார்த்து நம்பத் தொடங்கிவிடுகிறார். ஒவ்வொரு மதச் சாமியாரையும் அழைத்து வந்து பேயோட்ட ஏற்பாடு செய்கிறார். ஆனால், அமானுஷ்ய செயல்பாடுகள் நிற்பதாக இல்லை.
எனவே, இது பேய் சமாச்சாரம் இல்லை என்ற முடிவுக்கு கார்த்திக் வரும்போது, “ நீங்க யாரு?” என்ற எழுத்துகள் ஒவ்வொன்றாக சுவரில் தானாக எழுதப்படுகின்றன. அதற்கான பதிலை கார்த்திக்கும் சுவரில் எழுத, “இது எங்க வீடு. எங்க வீட்ல நீங்க என்ன செய்யிறீங்க?” என்ற கேள்வி எழுதப்பட, அதற்கு கார்த்திக் பதில் எழுத, இப்படியான எழுத்து வடிவ உரையாடலின் ஊடாகத் தான், இதே வீட்டில் ரவி (காளி வெங்கட்), அவரது மனைவி விஜி (வினோதினி வைத்தியநாதன்), அவர்களது மகன் (மாஸ்டர் ஹென்ரிக்) ஆகியோர் அடங்கிய இன்னொரு குடும்பம் 2012ஆம் வருடத்திய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது என்பதும், ஒரு குடும்பத்தினர் இன்னொரு குடும்பத்தினரைப் பார்க்க இயலாது என்பதும் தெரிய வருகிறது.

இதன் பிறகு இரு குடும்பத்தினரையும் சுற்றி நடக்கும் வினோத சம்பவங்கள் என்னென்ன? இதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன? ஒரு குடும்பத்தினரின் கண்களுக்கு மற்றொரு குடும்பத்தினர் தென்படாமல் ஒரே வீட்டில் வாழும் நிலை ஏன் ஏற்பட்டது? இறுதியில் இப்பிரச்சனை எப்படி தீர்ந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு பரபரப்பாக விடை அளிக்கிறது ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கார்த்திக்காக தர்ஷன், அவரது காதல் மனைவி அனுவாக அர்ஷா சாந்தினி பைஜூ, ரவியாக காளி வெங்கட், அவரது மனைவி விஜியாக வினோதினி வைத்தியநாதன், அவரது மகனாக மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவையான அளவு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கார்த்திக்கின் நண்பராக வரும் தீனா, வீட்டு சொந்தக்காரராக வரும் கவிதா பாரதி, அலுவலக சீனியராக வரும் அப்துல் லீ உள்ளிட்டோர் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் டி.ராஜவேலு. படக்கதையை முதலில் காதல் கதையாகத் தொடங்கி, அடுத்து அமானுஷ்யக் கதை போல் வளர்த்தெடுத்து, அதன் பிறகு ‘டெசராக்ட்’ என்ற நம்ப முடியாத, கற்பனைக்கும் எட்டாத, ‘ நான்காவது பரிமாணம் மற்றும் கால மோதல்’ என்ற அதீத கற்பனை நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். ’டைம் டிராவல்’, ’டைம் லூப்’ என்பன போல் உலக சினிமாக்களில் கொட்டிக் கிடக்கும் இந்த ‘டெசராக்ட்’ கண்டெண்ட்டை ”புதுமை” என்ற பெயரில் இறக்குமதி செய்து, அதை பார்வையாளர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்ல முயற்சித்திருப்பதற்காகவும், ஒருவேளை புரியாவிட்டாலும் பார்வையாளர்கள் ஓரளவு ரசித்துவிட்டுப் போகும்படியாக இப்படத்தை படைத்தளித்ததற்காகவும் இயக்குநர் டி.ராஜவேலுவுக்கு கோடானுகோடி நமஸ்காரம்!
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் ஷரேஃப், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ், படத்தொகுப்பாளர் ஏ.நிஷார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குநரின் புதுமையான முயற்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
’ஹவுஸ் மேட்ஸ்’ – தமிழ்சினிமாவை மேலும் ஓர் அங்குலம் உயரே எடுத்துச் செல்வதற்கான புதுமைப் படைப்பு! வரவேற்கலாம்!
ரேட்டிங்: 3/5.