கிங்டம் – விமர்சனம்

நடிப்பு: விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ், வெங்கடேஷ் வி.பி, அய்யப்பா பி.சர்மா, போசானி கிருஷ்ண முரளி, கோபராஜு ரமணா, மினிஷ் சௌத்ரி, பாபுராஜ், சுதர்சன், ரோனித் கம்ரா, கோத்தலா பானுபிரகாஷ், மகேஷ் அச்சந்தா, ராஜ்குமார் காசிரெட்டி, அஜித்கோஷி, ஸ்வரன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: கவுதம் தின்னனூரி

ஒளிப்பதிவு: கிரிஷ் கங்காதரன் & ஜோமன் டி ஜான்

படத்தொகுப்பு: நவீன் நூலி

இசை: அனிருத் ரவிச்சந்தர்

தயாரிப்பு: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

தயாரிப்பாளர்கள்: நாக வம்சி & சாய் சௌஜன்யா

வழங்கல்: ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘ஜெர்சி’ என்ற சூப்பர் எமோஷனல் வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் கௌதம் தின்னனூரியும், காதல் காமெடி படங்களில் வெற்றி முத்திரையைப் பதித்துவிட்டு, அதிரடி ஆக்‌ஷன் படங்களில் அதிரி-புதிரியான மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்று சில காலமாகவே காத்திருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கைகோர்த்திருக்கும் திரைப்படம் தான் ‘ஸ்பை அதிரடி ஆக்‌ஷன்’ ஜானரைச் சேர்ந்த இந்த ‘கிங்டம்’. இவர்கள் இருவரும் இணைந்ததால் ஏற்பட்டுள்ள பெரும் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

1920ஆம் ஆண்டு. ஆங்கிலேயருக்கு இந்தியா அடிமைப்பட்டிருந்த அக்காலத்தில், தங்கத்தை முன்னிட்டு, ஆந்திராவில் உள்ள ஒரு பழங்குடியின மக்களுக்கும், ஆங்கிலேய ராணுவத்தினருக்கும் இடையே கடும் போர் நடக்கிறது. இதில் பழங்குடியின மக்களில் பெரும்பாலோர் அழிக்கப்படுகிறார்கள். தமது மக்கள் வெற்றிபெற வாய்ப்பில்லை என்ற நிலையில் அந்த பழங்குடியின மக்களின் ‘அரசர்’ என்று கருதப்படும் தலைவர், அங்கிருந்து தப்பிச் செல்லுமாறு தமது மக்களுக்கு உத்தரவிட்டுவிட்டு உயிரிழக்கிறார். அவரது உத்தரவை ஏற்று பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சிலர் மட்டும் தப்பித்து, இலங்கைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தீவில் தஞ்சம் அடைகிறார்கள். அதன்பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்ப இயலாமல் அல்லாடும் அம்மக்கள், தங்களது ’அரசர்’ மீண்டும் வந்து தங்களை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். காலம் உருண்டோடுகிறது…

1991ஆம் ஆண்டு. துணிச்சல், புத்திசாலித்தனம், சாதுரியம் என அனைத்தும் ஒருங்கே பெற்ற சூரி (விஜய் தேவரகொண்டா) போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். சிறுவயதில், தன் அப்பா குடித்துவிட்டு வந்து, போதையில் தன் அம்மாவை அடித்துத் துன்புறுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், சிறுவனான தன் அண்ணன் சிவா (சத்யதேவ்) அரிவாளால் அப்பாவை வெட்டிக்கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டான். அன்றிலிருந்து அவனைத் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் கான்ஸ்டபிள் சூரி. ஒருநாள், தவறு செய்யும் தன் உயரதிகாரியை சூரி ஓங்கி அறைந்ததால், ஒரு சவாலான அண்டர்கவர் ஆபரேஷனுக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார். இலங்கை அருகே உள்ள தீவில் பெரிய மாஃபியா தலைவனாக இருக்கும் அண்ணன் சிவாவை கண்டுபிடிப்பது, அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுடன் கலந்து அவர்களைக் கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தும் கடத்தல் கும்பலைக் கண்டறிவது ஆகிய பொறுப்புகளைக் கொண்ட இந்த அண்டர்கவர் ஆபரேஷனை ஏற்று ஒரு கைதி போல இலங்கை செல்கிறார் சூரி.

தன் அண்ணன் செல்வாவை சூரி கண்டுபிடித்தாரா? கடத்தல் கும்பலை அடையாளம் கண்டாரா? பழங்குடியின மக்களை மீட்கப்போகும் அவர்களது ‘அரசர்’ யார்? அவர் வந்தாரா? அவர்களை மீட்டாரா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அதிரடி ஆக்‌ஷனுடன் விடை அளிக்கிறது ‘கிங்டம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் சூரியாக விஜய் தேவரகொண்டா நடித்திருக்கிறார். முதலில் கான்ஸ்டபிளாகவும், பின்னர் கைதி எனும் போர்வையில் உளவாளியாகவும் இருவேறு கெட்டப்களில் தோன்றியிருக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் பம்பரமாய் சுழன்று எதிரிகளை அந்தரத்தில் பறக்கவிடுவது, அண்ணன், அம்மா பற்றிய செண்டிமெண்ட் காட்சிகளில் உள்ளம் கசிந்து உருகுவது என ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான சூழலில் வித்தியாசமாக நடித்து, முழு உழைப்பையும் கொட்டி பார்வையாளர்களின் மனதை ஈர்த்திருக்கிறார். அவரது திரைப் பயணத்தில் நடிப்புக்கு பேர் சொல்லும் படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சூரியின் அண்ணன் சிவாவாக சத்யதேவ் நடித்திருக்கிறார். தம்பி மீது அளவற்ற பாசம் கொண்ட அண்ணனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அப்பாவைக் கொன்றது யார் என்பதாகட்டும், தம்பியை எதிரிகள் கொன்று விடுவார்களோ என்று பரிதவிப்பதிலாகட்டும், மரணிக்கும் தருவாயிலும் தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி போராடுவதிலாகட்டும், பார்வையாளர்களின் இதயங்களைப் பிசைந்து கண்களில் நீர் வரச் செய்துவிட்டார்.

சூரியின் காதலி டாக்டர் அனுவாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்திருக்கிறார். அவருக்கு படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேலை எதுவும் இல்லை. கொடுத்த வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்.

வில்லன் முருகனாக வெங்கடேஷ் வி.பி நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு நம்மூர் சூர்யா போல இருக்கிறார். நடை, உடை, பாவனையிலும் சூர்யாவை நினைவுபடுத்துகிறார். கொடூர வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

சிறுவயது சூரியாக வரும் ரோனித் கம்ரா, சிறுவயது சிவாவாக வரும் கோத்தலா பானுபிரகாஷ், சுவாமிஜியாக வரும் அய்யப்பா பி.சர்மா, போலீஸ் கமிஷனராக வரும் போசானி கிருஷ்ண முரளி, சூரியின் சகா கான்ஸ்டபிள் ராஜண்ணாவாக வரும் கோபராஜு ரமணா, இலங்கையில் சூரியின் உளவாளி விஷ்வா சிங்காக வரும் மனிஷ் சௌத்ரி, திலீப் நாயராக வரும் பாபுராஜ், அஸ்வினாக வரும் சுதர்ஷன், மற்றும் மகேஷ் அச்சந்தா, ராஜ்குமார் காசிரெட்டி, அஜித் கோஷி, ஸ்வரன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி கொடுத்திருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கௌதம் தின்னனூரி. விஜய் தேவரகொண்டாவை அவரது ரசிகர்களுக்கு இன்னும் கூடுதலாகப் பிடிக்கும் வகையில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸாகக் காட்டியிருக்கிறார். விறுவிறுப்பு காரணமாக முதல் பாதி ஓடி முடிந்ததே தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு, அதீத வன்முறையைக் குறைத்து, இரண்டாம் பாதியையையும் கவனமாகவும், கூர்மையாகவும் உருவாக்கியிருந்தால், படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம். சூர்யாவின் ‘ரெட்ரோ’, பிரபாஸின் ‘சலார்’ போன்ற படங்கள் இரண்டாம் பாதியில் ஞாபகத்துக்கு வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. புதுசா யோசிங்க கௌதம் தின்னனூரி!

பாடலிசையிலும், பின்னணி இசையிலும் இசையமைப்பாளர் அனிருத்தின் வெற்றிக்கொடி உயர்ந்தோங்கிப் பறக்கிறது. பாராட்டுகள் அனிருத்.

ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்தைக் கூட்டியிருக்கிறது.

‘கிங்டம்’ – விஜய் தேவரகொண்டாவின் மாஸான நடிப்புக்காகவும், தொழில்நுட்பக் கலைஞர்களின் தரமான பங்களிப்பிற்காகவும் பார்த்து மகிழலாம்!

ரேட்டிங்: 3/5