டிடி நெக்ஸ்ட் லெவல் – விமர்சனம்

நடிப்பு: சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் மற்றும் பலர்
இயக்கம்: எஸ்.பிரேம் ஆனந்த்
ஒளிப்பதிவு: தீபக் குமார் பதி
படத்தொகுப்பு: பாரத் விக்ரமன்
இசை: ஆஃப்ரோ
தயாரிப்பு: நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்
வழங்குபவர்: ’தி ஷோ பீப்பிள்’ ஆர்யா
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
சந்தானம் நடிப்பில், ‘டிடி’ பட வரிசையில், இந்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ நான்காவது படம். இதற்குமுன் வெளியான மூன்று திரைப்படங்களுமே ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்தன. அதுபோல் இந்த நான்காவது படமும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, மகத்தான வெற்றி பெறுமா? பார்ப்போம்…

இக்கால சமூகஊடக வளர்ச்சியின் அடையாளமாகத் திகழும் யூடியூபில், புதிய திரைப்படங்களைத் தாறுமாறாக விமர்சனமும் கேலியும் செய்து வருபவர் கிஸா 47 (சந்தானம்). இதன்மூலம் எக்கச்சக்கமான ஆதரவாளர்களையும், அதே அளவு வெறுப்பாளர்களையும் சம்பாதித்து வைத்திருப்பதால் அவர் பிரபல யூடியூபராகவும் திகழ்கிறார்.
இத்தகைய திரை விமர்சகர்கள் மீது கடும் கோபம் கொண்டிருக்கும் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) என்ற பேய், அவர்களை தன்னுடைய பாழடைந்த திரையரங்குக்கு வரவழைத்து படுகொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இதன்படி, முன்னணி திரை விமர்சகரான கிஸா 47-ஐயும், அவரது குடும்பத்தினரான அப்பா மெக்டொனால்டு (நிழல்கள் ரவி), அம்மா ஷில்பா (கஸ்தூரி), மற்றும் மாயா (யாஷிகா ஆனந்த்) ஆகியோரையும் படம் பார்க்க தன்னுடைய திரையரங்குக்கு வருமாறு தந்திரமாக அழைப்பு விடுக்கிறது ஹிட்ச்காக் இருதயராஜ் பேய். ஆனால் கெடுவாய்ப்பாக, கிஸா 47-க்கு முன்பாகவே அவரது குடும்பத்தினர் அத்திரையரங்குக்குச் சென்று மாட்டிக் கொள்கிறார்கள்.
அங்கு விரையும் கிஸா 47-ம், அவரது நண்பரும் (மொட்டை ராஜேந்திரன்) திரைக்குள் இழுக்கப்பட்டு, அதில் ஓடும் திரைப்படத்துக்குள் நுழைக்கப்படுகிறார்கள். அத்திரைப்படத்துக்குள் சென்று பார்க்கும்போது தான், தன் குடும்பத்தினரே அதில் நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது கிஸா 47-க்கு தெரிய வருகிறது. அதிர்ச்சி அடைகிறார்.
திரைப்படத்துக்குள் கிஸா 47-ன் குடும்பத்தினரைக் கொலை செய்ய ஒரு கும்பல் தீவிரமாக அலைந்துகொண்டிருக்கிறது. படம் முடிவதற்குள் அந்த கும்பலைக் கொன்றொழித்தால் தான் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் கிஸா 47 போராடுகிறார். இதனிடையே, அவரது காதலி ஆசை ஹர்ஷினி (கீதிகா திவாரி) பேயாக மாற, அவரைக் காப்பாற்ற வழி தெரியாமல் தவிக்கிறார்.
படம் முடிவதற்குள் கிஸா 47 அந்த கும்பலைக் கொன்று, தன் குடும்பத்தினரை திரைக்கு வெளியே கொண்டுவந்து காப்பாற்றினாரா, இல்லையா? அவரது காதலி ஏன் பேயாக மாறினார்? அந்த காதலியின் கதி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு திகிலும், காமெடியும் கலந்து விடை அளிக்கிறது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, திரை விமர்சனம் செய்யும் யூடியூபர் கிஸா 47-ஆக சந்தானம் நடித்திருக்கிறார். மொக்கையான திரைப்படங்களையும், பொறுப்பில்லாத சினிமா பார்வையாளர்களையும் செமையாக கலாய்த்து சிரிக்க வைத்திருக்கிறார். அவர் பேயோடு மோதும் காட்சிகளில் விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நடித்திருக்கிறார். அவரது வழக்கமான டைமிங் மற்றும் ரைமிங் காமெடி ரசனைக்கு உரியவையாக உள்ளன.
நாயகி ஆசை ஹர்ஷினியாக கீதிகா திவாரி நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். அளவாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
மெயின் வில்லனாக, ஹிட்ச்காக் இருதயராஜ் என்ற பேயாக வரும் செல்வராகவன், அலட்டிக்கொள்ளாமல் நாற்காலியில் அமர்ந்தவாறே கொடூரங்கள் செய்து மிரட்டியிருக்கிறார்.
படம் முழுக்க நாயகனுடன் வரும் மொட்டை ராஜேந்திரன், மற்றும் லொள்ளுசபா மாறன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் காமெடிக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
விசாரணை அதிகாரி ராகவனாக வரும் கௌதம் வாசுதேவ் மேனன், கப்பல் கேப்டனாக வரும் நிழல்கள் ரவி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஷில்பாவாக வரும் கஸ்தூரியும் மாயாவாக வரும் யாஷிகா ஆனந்தும் தாங்கள் வரும் காட்சிகளில் மென்கவர்ச்சியைத் தூவியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த். ஒரு திகில் காமெடி ஜானருக்கான கச்சிதமான கதையை தேர்வு செய்திருக்கிறார். வழக்கமான பேய் கதைகளுக்கு உரிய இலக்கணத்தை மாற்றி, வித்தியாசமான கதைக்களத்தில், சினிமா விமர்சகர்களை பழிவாங்கும் பேய், திரைக்குள் சென்று மாட்டிக் கொள்ளும் பிரதான கதாபாத்திரங்கள் என சுவாரஸ்யமான ஒன்லைனரை எடுத்துக்கொண்டு தமிழில் நல்லதொரு ஸ்பூஃப் வகை திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். சந்தானம் பேசும் டயலாக் டெலிவரி பல இடங்களில் கைகொடுக்கிறது. ‘ப்ரோ’ என்று சொல்லி அவர் பேசும் மாடுலேஷன் புன்னகையை வரவழைக்கிறது. மொட்டை ராஜேந்திரன் – சந்தானம் கூட்டணியில் பல ‘குபீர்’ தருணங்கள் உள்ளன. சப்டைட்டில் தொடர்பாக வரும் காட்சி, கவுதம் வாசுதேவ் மேனனின் ‘உயிரின் உயிரே’ என்ற ‘காக்க காக்க’ படப் பாடலின் மீளுருவாக்கம் உள்ளிட்ட காட்சிகளில் திரையரங்கு கைதட்டலில் அதிர்கிறது. ‘டிடி’ வரிசையில் 5-வது படத்துக்கான தலைப்பை படத்தின் இறுதியில் சொல்லி, அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஆஃப்ரோவின் பாடலிசை மற்றும் பின்னணி இசை ஓ.கே ரகம். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாய் ஈர்க்கின்றன.
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ – சந்தானத்தின் நெக்ஸ்ட் லெவல் காமெடி கலாட்டா!
ரேட்டிங்: 3/5.