செல்ஃபி – விமர்சனம்

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ்குமார், வர்ஷா பொலம்மா, கௌதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர் மற்றும் பலர்

இயக்கம்: மதிமாறன்

தயாரிப்பு: ’டிஜி பிலிம் கம்பெனி’ டி.சபரீஷ்

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: விஷ்ணு ரங்கசாமி

மக்கள் தொடர்பு: குமரேசன்

தனியாருக்குச் சொந்தமான பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சீட் ஒதுக்குவதில் நடைபெறும் முறைகேடுகளை, கொள்ளைகளை, தோலுரித்துக் காட்டி அம்பலப்படுத்தும் சமூகப் பொறுப்புணர்வுடன் திரைக்கு வந்திருக்கிறது ‘செல்ஃபி’ திரைப்படம்.

கடலூரைச் சேர்ந்தவர் நாயகன் கனல் (ஜி.வி.பிரகாஷ்குமார்). ”பிசினஸ்மேன் ஆக வேண்டும். அதற்கேற்ற படிப்பு படிக்க வேண்டும்” என்று விரும்புகிறவர். ஆனால், அவரது அப்பா சக்ரவர்த்தி (வாகை சந்திரசேகர்) தன் மகன் என்ஜினியரிங் படித்து என்ஜினியர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார். அவரது நிர்பந்தம் காரணமாக, கனல் விருப்பமின்றி, சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், ரூ.2லட்சம் கட்டாய நன்கொடை கொடுத்து சேருகிறார். அக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக ஆள் பிடிக்கிறார்கள் என்பது அங்கு வந்தபிறகுதான் கனலுக்கு தெரிகிறது. தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் கனல் தன் நண்பர்களுடன் சேர்ந்து மாணவர் சேர்க்கைக்கான புரோக்கராக மாறி, மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி ஆள் பிடிக்கிறார்.

கனல் போலவே, தனியார் மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டாவிற்கு ஆள் பிடிக்கும் ஏஜெண்டாக ரவி வர்மா (கெளதம் வாசுதேவ் மேனன்) இருக்கிறார். கந்துவட்டிக்காரர் ஒருவரின் மகனுக்கு மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரவி வர்மா டீமுக்குத் தெரியாமல் அதிக பணம் பெற்றுக்கொண்டு சீட் பிடித்துக் கொடுக்கிறார் கனல். ஆனால், அது விபரீதத்தில் முடிய கனலுக்கும் அவரது நண்பர்களுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடியால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் கொள்ளையடிக்கும் கல்வி நிறுவனங்கள், ஏஜெண்டுகளை அம்பலப்படுத்த கனல் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என்பனவற்றை பரபரப்பாய் சொல்லுகிறது மீதிக்கதை.

கதையின் நாயகன் கனலாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார். நட்பு, அப்பா பாசம், காதல், சண்டைக்காட்சி என நடிப்பில் பளிச்சிடுகிறார். அப்பாவிடம் கோபித்துக் கொள்வது, பின்னர் அவரைப் பற்றி தெரிந்தவுடன் வருந்துவது என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். இறந்து போன நண்பனின் அம்மாவிடம் கலங்கி நிற்கும்போது, கைதட்டல் பெறுகிறார்.

கல்லூரியில் சீட்  வாங்கித்தரும் ஏஜெண்ட் ரவி வர்மா கதாபாத்திரத்தில் வரும் கௌதம் வாசுதேவ் மேனன், அசத்தலான வில்லன் வேடத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் வித்யாவும் அலட்டல் இல்லாமல் நடித்து கவனம் பெறுகிறார்.

நாயகி மாதவியாக வரும் வர்ஷா பொல்லம்மா, நாயகனுக்கு உறுதுணையாக நடித்து, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகனின் நண்பர் நசீர் பாத்திரத்தில் வரும் டி.ஜி.குணாநிதி, நடிப்பில் கண்கலங்க வைத்திருக்கிறார். நசீரின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா யதார்த்தமான நடிப்பை கொடுத்து மனதில் இடம் பிடிக்கிறார்.

கல்லூரி சேர்மன் ஈஸ்வரமூர்த்தியாக வரும் சங்கிலி முருகன், அவரது மருமகன் குமரனாக வரும் சாம் பால் நல்ல தேர்வு.  நாயகனின் தந்தை சக்ரவர்த்தியாக வரும் வாகை சந்திரசேகர் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். தங்கதுரை, நாயகம், ஜெய்சங்கர் உள்ளிட்டோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மதி மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். தனியார் கல்லூரிகளில் சீட் ஒதுக்குவதற்கு புரோக்கர்கள் மூலம் நடக்கும் அயோக்கியத்தனங்களை, தமிழ் திரையுலக வரலாற்றில் முதல்முறையாக, தைரியமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். பாராட்டுகள்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு கை கொடுத்திருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு காட்சிகளை அழுத்தமாக பதிய வைக்க உதவியுள்ளது.

‘செல்ஃபி’ – கல்வி மாஃபியாக்களின் முகமூடி கிழிவதை கண்டு களிக்கலாம்!.