எரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…
எரிந்து கொண்டே இருக்கிறது
ஈராயிரம் ஆண்டுகளாக…
எது நடந்தாலும்
பற்றி எரிவது என்னவோ
சேரிகள் தான்.
இன்று நேற்றல்ல
இரண்டாயிரம் ஆண்டுகளாய்.
அரக்கு மாளிகையில்
பாண்டவர்களுக்காக
வைத்த தீயில்
பாண்டவர்கள் சாகவில்லை.
ஐந்து பஞ்சமர்களே
பலியானார்கள்
இது மகாபாரதம்.
குரங்கு வைத்த தீயில்
எரிந்தது எல்லாம் எது?
ஈழத்துச் சேரிகள் தான்
இது இராமாயணம்.
உயிரோடு எரிக்கப்பட்ட
கழுமரத்தில் கொல்லப்பட்ட
பௌத்தர்களும்
சமணர்களும் யார்?
தாழ்த்தப்பட்டவர்களே
இது சைவ வரலாறு.
காஞ்சியிலும்
திருப்பெரும்புதூரிலும்
எரிக்கப்பட்ட ஏழைகள் யார்?
இராமானுஜரால்
பார்ப்பனராக்கப்பட்ட
பறையர்களே.
இது வடகலை வைணவம்.
கண்ணகி மூட்டிய
மதுரைத் தீயில்
கருகிப்போன
தீத்திறத்தார் யார்?
சேரி மக்களே.
இது சிலப்பதிகாரம்.
நந்தன்
ஏன்
நாயனார் ஆனார்?
அது அந்தணர் இட்ட தீ
இது பெரியபுராணம்.
ஈராயிரம் ஆண்டுகளாக
கொலைகளைச் செய்து கொண்டும்
கொல்லாமைப் பேசிக் கொண்டும்
பயணப்படுகிறது ஆதிக்கத்திமிர்.
ஆதிக்க வெறிக்கு
வர்ணங்கள் உண்டு
வர்க்க வேறுபாடுகள் உண்டு.
அவர்ணர்களுக்கு அது ஏது?
அவர்ணங்களா?
ஆம்.
வர்ணமற்றவர்கள்.
சம்புகன்
ஏகலைவன்
நந்தன்
வெண்மணி
மேட்டுப்பாளையம்
தொடர்கிறது.
அடைகாத்த
ஆதிக்கத்திமிர் அகற்றிட
அணிவகுக்கும் காலம்
அருகில் தான்.
அயர்ந்து விடாதீர்கள்.
எரியிடை மூழ்கி அல்ல
எரிதழல் ஏந்தி.