பிளாஸ்டிக் இல்லா திருப்பூர்: மாற்றத்தை நோக்கி!

சமீபத்தில் திருப்பூருக்கு அருகே உள்ள பல்லடத்தில் நடந்த சுரேந்தர் – நித்யா இணையரின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கண்ணில் பட்டது. மற்ற திருமணங்களுக்கும் அந்தத் திருமணத்துக்கும் சிறிய வித்தியாசம் தான். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர்கூட இன்று திருமணங்களை ஆடம்பரமாகச் செய்ய வேண்டுமென்று கருதத் தொடங்கியுள்ளனர். ஆடம்பரத் திருமணங்கள் யாவும் அவர்களின் விருப்பத்திற்குட்பட்டது என்பதைத் தாண்டி அந்தத் திருமணங்கள் உருவாக்குகிற கழிவுகளும், உணவுப் பொருள் வீணடிப்புகள் பற்றியும், திருமணத்திற்குப் பிறகு குவிகின்ற பிளாஸ்டிக் கழிவுகள் பற்றியும் விவாதிக்க வேண்டியத் தேவை உருவாகியுள்ளது.

திருமணங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், கோயில் திருவிழாக்கள் ஆகியன முடிந்த பிறகு அப்பகுதியைப் பார்த்தால் குப்பை மேடுகளே தேவலாம்போல் தோன்றும். அண்மையில்கூட மோடி ஒரு நிகழ்ச்சிக்கு வந்த சென்ற பிறகு அப்பகுதி சாலையில் குவிந்த குப்பைகள் படம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாய்ப் பரவியது. அந்த சாலையில் குவிந்த பிளாஸ்டிக் குப்பைகள் அவர்களின் தூய்மை இந்தியாவைக் கேள்விக்குள்ளாக்கியது.

இதுபோல ஒரே நாளில் ஆடம்பரத் திருமணங்களில் குவிகிற பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட திருமணங்களில் இருந்துதான் திருப்பூரில் நடந்த அந்தத் திருமணம் சற்று மாறுபட்டிருக்கிறது. பிளாஸ்டிக் என்பது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாதது. ஆனால், பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்படுத்த முடியாதது அல்ல. அதைத்தான் அந்த திருமணம் உணர்த்தியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சில்வர் டம்ளர்கள்தான் திருமணங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. நாகரிகம் என்ற பெயரில் சில்வர் டம்ளர்கள் புறக்கணிக்கப்பட்டு பிளாஸ்டிக் கப்புகள் வந்தன. அதற்குப் பிறகு காகிதங்களில் தயாரிக்கப்பட்ட கப்புகள் வந்தன. இந்தக் காகிதக் கப்புகள் தண்ணீரில் எளிதில் ஊறிவிடாமல் இருக்க அதன் உட்புறத்தில் வேதிப் பூச்சுகள் செய்யப்பட்டது.

இந்த அழிவுக்கான நாகரிக வளர்ச்சியில் இருந்து திரும்பி பாதுகாப்பான சில்வர் டம்ளர்களை மீண்டும் இந்தத் திருமணத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தத் தயங்குவோருக்கும் மாற்றாக சிறு சிறு மண் குவளைகள் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதுபோல மண் குவளைகளைப் பயன்படுத்தும் திருமணங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆங்காங்கே தமிழ்நாட்டில் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. ஒருவருக்குக்கூட இந்தத் திருமணத்தில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு மாற்றாக மண் குவளைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அந்த மண் குவளைகள் அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. சுரேந்தர் ‘நெகிழி இல்லா திருப்பூர்’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவுள்ளார்.

நெகிழி இல்லா திருப்பூர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமான திருப்பூரில் குவிந்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி குறைப்பதற்கான விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நந்தகுமாரை நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.

நெகிழி இல்லா திருப்பூர் என்ற இந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சுமார் 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய பின்னலாடை தொழில்களின் தாய் நகரம் என்றே திருப்பூரைச் சொல்லலாம். உலக அளவில் பின்னலாடை ஏற்றுமதியில் முக்கியப் பங்காற்றும் இந்த நகரில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிவது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றச் சமூக ஆர்வலர்கள் சிலர் ஒருங்கிணைந்து அவ்வப்போது ஒரு தன்னார்வ அமைப்பைத் தொடங்குவதும். பின்னர் ஏதேனும் காரணங்களால் அந்த அமைப்பு தொடராமல் அப்படியே நின்று விடுவதும் வாடிக்கையான ஒன்று. அப்படித் தொடங்கப்பட்டு செயல்படாமல் போன 14 தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த நெகிழி இல்லா திருப்பூர்

தொடங்கப்பட்டு ஓராண்டுகளைக் கடக்கப் போகும் இந்த அமைப்பு, தன்னால் இயன்ற அளவுக்கு திருப்பூர் மக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை குறைப்பதற்கான விழிப்புணர்வை அளித்து வருகிறது. “நாங்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இறந்ததை ஒட்டி அவர் நினைவாக ட்ரீம் 20 என்ற அமைப்பைத் தொடங்கினோம். 2020ஆம் ஆண்டுக்குள் திருப்பூரில் 20,000 மரக் கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என்ற இலக்கோடு இந்த அமைப்பைத் தொடங்கினோம்.

மரக்கன்று வைக்கக் குழி தோண்டும்போது அவ்வப்போது பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணுக்குள் இருந்துவரும், மரம் வைக்கச் செல்லும் பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும். மரக்கன்று வைப்பதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் மாநகராட்சி அலுவலர்களைச் சந்திக்கும்போது அவர்களும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டியதன் அவசியம் குறித்து எங்களிடம் பேசினார்கள். இதையடுத்துதான் நெகிழி இல்லா திருப்பூர் என்ற அமைப்பைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கினோம்” என்கிறார் நந்தகுமார்.

ட்ரீம் 20 அமைப்பின் மூலமாக இதுவரையில் 18,000க்கும் அதிகமான மரக்கன்றுகளை திருப்பூர் மாவட்டத்தில் நட்டுள்ளனர். “வனத்துக்குள் திருப்பூர் என்ற அமைப்பு எங்களுக்கு மரக்கன்றுகளை அளித்து உதவியது. நட்டு வைக்கப்பட்ட மரக் கன்றுகளில் இப்போது 15,862 மரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அவற்றைத் தொடர்ச்சியாக பராமரித்து வருகிறோம்” என்கிறார் நந்தகுமார். மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களைத் தொடர்புகொண்டு எந்தப் பகுதியில் மரம் இல்லையோ அந்தப் பகுதிகளில் தொடர்ந்து மரம் வைத்து வருகின்றனர். மரம் நடும் அதேவேளையில் மண்ணை நஞ்சாக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும் இவர்கள் மேற்கொள்கிறார்கள்.

நெகிழி இல்லா திருப்பூர் அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு இவர்களுடைய பணி இரண்டு விதமாகப் பிரிந்தது. ஒருபக்கம் களத்திற்குச் சென்று பிளாஸ்டிக்கை அகற்றுவது, மற்றொரு பக்கம் மக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது. “பிளாஸ்டிக் இல்லா பள்ளிகள் என்ற முழக்கத்தை முன்வைத்து திருப்பூரில் உள்ள 34 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினோம். பிளாஸ்டிக்கின் தீங்குகள், அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள், அவற்றுக்கான மாற்றுகள் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சியளித்தோம். பள்ளிகளைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினோம்.

இப்போது இந்த 34 பள்ளிகளும் பிளாஸ்டிக் இல்லா பள்ளிகளாக உள்ளன” என்று கூறுகிறார் நந்தகுமார். மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களை பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிக்கும் ஊக்கப்படுத்துகிறது இந்த அமைப்பு. பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து அளிக்கும் மாணவர்களுக்கு மாதமொரு முறை பருத்தித் துணியால் நெய்யப்பட்ட பைகள், இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட பென்சில்கள், ரப்பர்கள் போன்றவற்றை பரிசாக வழங்குகிறது.

இதுவரையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், நீர்நிலைகள் உட்படப் பல்வேறு பகுதிகளிலிருந்து 8,000 கிலோ அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை இந்த அமைப்பு அகற்றியிருக்கிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தச் செல்லும்போதெல்லாம் மக்கள் திரும்பத் திரும்ப கேட்பது தினசரி வாழ்க்கையில் கலந்துவிட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மாற்று என்ன என்பதுதான், இதனால் மக்களுக்கு இதற்கான மாற்று என்ன என்பதைக் காட்ட ஒரு கண்காட்சியை நடத்த முடிவு செய்தோம் என்கிறார் நந்தகுமார்.

இதன்படி திருப்பூரில் உள்ள தெற்கு ரோட்டரி சங்க திருமண மண்டபத்தில் மார்ச் 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் வாங்க மாறலாம் என்ற பெயரில் இந்த விழிப்புணர்வுக் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். 36 ஸ்டால்கள் இந்தக் கண்காட்சியில் பங்கு பெற்றிருந்தது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று, அன்றாடப் பயன்பாட்டில் இருக்கிற பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று, அவரவர் குப்பையை அவரவரே உரமாக்குவது குறித்து பயிற்சியளிக்கும் ஸ்டால், வீடுகளைத் தூய்மை செய்யப் பயன்படுத்தும் இயற்கையான பொருட்களுக்கான ஸ்டால் எனப் பலவிதமான ஸ்டால்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றது.

இரண்டு நாள் கண்காட்சியை 18,000 பேர் பார்த்து சென்றுள்ளனர். இதில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களும் நிர்வாகத்தால் அழைத்து வரப்பட்டுள்ளனர். இரண்டு நாள்கள் கண்காட்சிக்கான இடத்திற்கு ஆன செலவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுள்ளது. இதர செலவுகளை நெகிழி இல்லா திருப்பூர் அமைப்பின் உறுப்பினர்களும், அவர்களுடைய நண்பர்களுமே ஏற்றுக் கொண்டதாகவும் நந்தகுமார் கூறுகிறார்.

பின்னலாடை துணியால் நெய்யப்பட்ட பைகள், பயன்படுத்திய பின்னர் தண்ணீரில் கரையும் மக்காச்சோள பைகள், பருத்தி துணிகளால் நெய்யப்பட்ட சுகாதாரமான அணையாடைகள், காய்கறிகள் கழிவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பைகள், மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு மாற்று எனப் பலவிதமான மாற்று முன்முயற்சிகளை இந்தக் கண்காட்சி மக்களுக்குக் காட்டியது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்டாலில் பங்கேற்ற நிறுவனங்களிடம் அவர்கள் முன்வைத்த மாற்றுப் பொருட்களை நேரடியாக மக்களே அந்நிறுவனங்களிடம் வாங்கத் தொடங்கியிருப்பதாகவும் நந்தகுமார் கூறுகிறார்.

இதற்குப் பின்னர் இவர்களுடைய முன்முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகியுள்ளது. இந்தத் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் வீட்டுத் திருமண நிகழ்வுகளில் பிளாஸ்டிக் டம்ளர்களை தவிர்த்து சில்வர் தம்ளர்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அதேபோல திருமண நிகழ்வுகளில் வைக்கும் பதாகைகளுக்கு பிளாஸ்டிக்கைத் தவிர்த்து துணிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஈரோட்டில் பருத்தித் துணியால் ஆன

பதாகைகளை அச்சிடும் பணியில் ஜேசிஐ அமைப்பைச் சேர்ந்த ராஜ் என்பவர் ஈடுபட்டிருக்கிறார். இப்போது திருப்பூரில் பலர் பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட பதாகைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். “இவ்வாறாகத் தான் சுரேந்திரனின் திருமணத்தில் மண் குவளைகள், சில்வர் டம்ளர்கள் மற்றும் பருத்தித் துணியால் செய்யப்பட்ட பதாகைகளைப் பயன்படுத்தினோம். இந்த முயற்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஐஸ்க்ரீம், பழ வகைகள் கொடுக்கக் கூட மக்காச்சோள கழிவு மற்றும் கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய கப்புகளைத் தான் பயன்படுத்தினோம். வழக்கமான செலவை விட மண் குவளைகள் பயன்படுத்த 20,000 ரூபாய்தான் கூடுதலாக செலவானது. மொத்தமாக இந்தத் திருமணத்திற்கு ரூ.40,000 வரை கூடுதலாகச் செலவாகியிருக்கும்.

இன்றைய நாளில் இவற்றின் பயன்பாடு மிகக் குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமாக இருக்கிறது. பயன்பாடு அதிகரித்துவிட்டால் இவற்றின் உற்பத்தியும் அதிகரித்துவிடும், விலையும் குறைந்துவிடும்” என்கிறார் நந்தகுமார். சுரேந்தர் – நித்யா இணையரின் திருமண நிகழ்வில் வழக்கமான திருமணத்தில் பயன்படுத்தும் எளிதில் தவிர்க்க முடிகிற 80 விழுக்காடு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்துவிட்டோம் என்றும் மகிழ்வோடு நம்மிடம் பகிர்கிறார் அவர்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அமைப்பின் 20 பேராவது ஒருங்கிணைந்து களப் பணிகளிலும், விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அடுத்தகட்ட நகர்வாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளது நெகிழி இல்லா திருப்பூர். இதற்காக மாவட்ட ஆட்சியரை, மாநகராட்சி நிர்வாகத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் தொடங்கியுள்ளார்கள்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 100 விழுக்காடு தடை விதிக்கப் பசுமைத் தீர்ப்பாயத்தை வலியுறுத்தி மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் அடுத்த மாதத்தில் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் கூட்டம் ஒன்றும் நடக்கவுள்ளதாகக் கூறுகிறார் நந்தகுமார். நெகிழி இல்லா திருப்பூர் அமைப்பின் முன்முயற்சியை நாமும் வாழ்த்திப் பாராட்டுவோம்.

Dhakshina Kannan

(Shared from POOVULAGIN NANBARGAL)