யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் உளவாளியாக மாறியது எப்படி?

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் உளவாளிகளாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் குசாலா, யமீன், தேவிந்தர் அர்மான் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா என்பவர் உளவாளி கும்பலின் தலைவராக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஹரியானா போலீஸார் கூறியதாவது:
ஹரியானாவின் ஹிசார் பகுதியை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவரது தந்தை ஹரிஷ் மல்ஹோத்ரா தச்சு தொழிலாளி ஆவார். மிகச் சிறிய வீட்டில் ஏழ்மையான சூழலில் வளர்ந்த ஜோதி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார். ஹிசாரில் பிஏ பட்டம் பெற்ற அவர் வேலை தேடி டெல்லி சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் கிடைத்தது. கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் வேலையிழந்தார்.
இதன்காரணமாக அவர் மீண்டும் ஹரியானாவின் ஹிசாருக்கு திரும்பினார். அப்போதுதான் அவர் சமூக வலைதள பக்கங்கள் மீது கவனம் செலுத்தினார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூபில் கவர்ச்சிகரமான உடைகளில் தோன்றினார். மிக குறுகிய காலத்தில் அவர் பிரபல யூடியூபராக மாறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு சுற்றுலா விசா பெற ஜோதி சென்றார். அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஸ் என்ற எஹ்சான் உர் ரஹீமின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் நெருக்கமாக பழகினர். இதன்பிறகு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் மிக முக்கிய உளவாளியாக ஜோதி மல்ஹோத்ரா மாறினார்.
கடந்த 2023-ம் ஆண்டில் 10 நாள் சுற்றுலா விசாவில் அவர் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் மூத்த அதிகாரிகள் ஷாகீர், ராணா ஷெபாஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்தியாவுக்கு திரும்பிய பிறகு ஐஎஸ்ஐ அதிகாரிகளோடு தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஜோதி தொடர்பில் இருந்தார். ஐஎஸ்ஐ அதிகாரி ஷாகீர் என்பவரின் செல்போன் எண்ணை தனது செல்போனில் ஜாட் ரந்த்வா என்ற பெயரில் அவர் பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு சென்றபோது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகளும் அந்த நாட்டின் பஞ்சாப் மாகாண முதல்வருமான மரியம் நவாஸை, ஜோதி சந்தித்துப் பேசியிருக்கிறார். பலமுறை அவர் சீனாவுக்கும் சுற்றுலா சென்று உள்ளார். பாகிஸ்தான், சீனாவுக்கு செல்ல அவருக்கு மிக எளிதாக விசா கிடைத்திருக்கிறது. அதோடு பாகிஸ்தானின் மூத்த அரசியல் தலைவர்களை மிக எளிதாக சந்தித்து பேசியிருக்கிறார். இது இந்திய உளவுத் துறைக்கு சந்தேகத்தை எழுப்பியது.
அவரை மீக நீண்ட நாட்களாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். தற்போது வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் மட்டுமன்றி சீனாவுக்கும் அவர் உளவாளியாக செயல்பட்டிருக்கிறார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒடிசா யூடியூபர்:
ஒடிசாவை சேர்ந்த பிரபல யூடியூபர் பிரியங்கா சேனாபதி என்பவரை ஜோதி அடிக்கடி சந்தித்து பேசியிருக்கிறார். இருவரும் இணைந்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர். பிரியங்கா சேனாபதியும் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
எனவே யூடியூபர் பிரியங்காவும் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன்பேரில் அவரது வீட்டில் இந்திய உளவுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரும் கைது செய்யப்படலாம்.
மேலும் நாடு முழுவதும் பல்வேறு யூடியூபர்களிடம் ஜோதி தொடர்பில் இருந்துள்ளார். அவர்களிடமும் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் மேலும் பல யூடியூபர்கள் கைது செய்யப்படலாம்.
இவ்வாறு ஹரியானா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஹிசார் எஸ்பி சஷாங்க் குமார் சவான் கூறியதாவது:
இந்தியாவை சேர்ந்த சமூக வலைதள பிரபலங்களை, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தங்களின் உளவாளிகளாக மாற்றியிருக்கிறது. இதற்காக இந்திய யூடியூபர்களுக்கு பெரும் தொகை வாரியிறைக்கப்பட்டு உள்ளது.
ஒன்றிய உளவுத் துறையின் தகவலின்பேரில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். முதல் வகுப்பு விமான பயணம், நட்சத்திர ஓட்டல்கள், ஹிசாரில் சொகுசு வீடு என அவர் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார். எந்தெந்த வகைகளில் அவருக்கு பணம் வந்தது. யார் யாருடன் அவர் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு எஸ்பி சஷாங்க் குமார் சவான் தெரிவித்தார்.