சிறை – விமர்சனம்

நடிப்பு: விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார், ஆனந்தா தம்பிராஜா, மூணார் ரமேஷ், பி.எல்.தேனப்பன் மற்றும் பலர்

இயக்கம்: சுரேஷ் ராஜகுமாரி

கதை: தமிழ்

திரைக்கதை: தமிழ், சுரேஷ் ராஜகுமாரி

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

படத்தொகுப்பு: பிலோமின் ராஜ்

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

நடன அமைப்பு: லீலாவதி குமார்

சண்டை அமைப்பு: பிசி ஸ்டண்ட்ஸ்

தயாரிப்பு: ‘செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ எஸ்.எஸ்.லலித் குமார்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

தமிழில், பெரிய பெரிய நட்சத்திரங்களின் ’ஸ்டஃப்’ இல்லாத திரைப்படங்களெல்லாம் தோல்வியில் துவண்டு விழுந்து நஷ்டத்தைக் கவ்விக்கொண்டிருக்கையில், புதுமையான கதையும், பார்வையாளர்களை நாற்காலியோடு கட்டிப்போட்டு ரசிக்க வைக்கும் வலிமையான திரைக்கதையும் உள்ள சின்ன பட்ஜெட் படங்கள், குடும்பங்களின் பேராதரவுடன் வெற்றிகளைக் குவித்து, லாபம் ஈட்டிவருவது இன்றைய நிதர்சனம். அத்தகைய அற்புதமான மாயாஜாலம் புரிந்த சின்ன பட்ஜெட் படங்களாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ’குடும்பஸ்தனும்’, ஆண்டின் மத்தியில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யும் வந்தன என்றால், இந்த ஆண்டின் இறுதியில் வந்திருக்கிறது ‘செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள ‘சிறை’. இப்படம் பார்க்கும் ஒவ்வொருவரது மனச்சிறையிலும் இந்தப்படம் நிறைவாக வந்தமர்ந்து, நல்ல நினைவாக பலநாள் நிச்சயம் தங்கியிருக்கும் என்று பந்தயம் கட்டிச் சொல்லலாம். இதில் துளியளவும் மிகை இல்லை.

இப்படத்தின் கதை சிவகங்கை, வேலூர், விக்கிரவாண்டி மற்றும் இந்த ஊர்களுக்கு இடையிலான நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்தவர் இளைஞர் அப்துல் ரௌஃப் (எல்.கே.அக்ஷய் குமார்). ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாக மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், அச்சிறையில் இருந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு வாய்தாவின்போதும், ‘Armed Reserve Police’ எனப்படும் ’ஆயுதப் படை பிரிவு’ போலீசார் அவரை கைவிலங்கிட்டு வேலூர் சிறையிலிருந்து பாதுகாப்புடன் பஸ்ஸில் அழைத்து வந்து, சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மறுவாய்தாவுக்கான தேதியைப் பெற்றுக்கொண்ட பின்னர், மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்று ஒப்படைப்பது வழக்கம். தனக்கு வாதாட ஒரு வக்கீல் வைக்கக்கூட வசதி வாய்ப்பில்லாத அப்துல் ரௌஃப், இப்படி வாய்தா… வாய்தா… என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக சிவகங்கைக்கும் வேலூருக்குமாக அலைக்கழிக்கப்படுகிறாரே தவிர, அவருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை தொடங்கியபாடில்லை.

ஆயுதப்படை போலீசில் தலைமைக் காவலராக இருக்கிறார் கதிரவன் (விக்ரம் பிரபு). அவரது காதல் மனைவியான மரியமும் (ஆனந்தா தம்பிராஜா) பெண் போலீசாகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.

ஒருநாள். விசாரணைக் கைதியான அப்துல் ரௌஃபை வேலூர் சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்து வரும் பொறுப்பு தலைமைக் காவலரான கதிரவன் மற்றும் இரு காவலர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அதன்படி, கதிரவன் தலைமையிலான காவலர் குழு, துப்பாக்கி சகிதம் பாதுகாப்பாக அப்துல் ரௌஃபை கைவிலங்கிட்டு, பஸ்ஸில் அழைத்துச் செல்கிறது.

வழியில், இரவு உணவுக்காக விக்ரவாண்டியில் பஸ் நிற்கும்போது, அப்துல் ரௌஃப் திடீரென போலீஸ் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி, இருளுக்குள் மறைந்துவிடுகிறார். இது தெரிந்து பதறும் கதிரவனும், இரு காவலர்களும் அப்துல் ரௌஃபைத் தேடி அலைகிறார்கள். இதனிடையே, தப்பி ஓடிய அப்துல் ரௌஃப், மறுசிந்தனைக்கு உட்பட்டவராக தனது தவறை உணர்ந்து, வருந்தி, விக்ரவாண்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைகிறார். அப்துல் ரௌஃப் குறித்து புகார் கொடுப்பதற்காக விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு வரும் கதிரவனும் இரு காவலர்களும் அங்கு அப்துல் ரௌஃப் இருப்பதைப் பார்த்ததும் ஆசுவாசம் அடைகிறார்கள்.

சரண் அடைந்த அப்துல் ரௌஃப் ஒப்படைத்திருந்த போலீஸ் துப்பாக்கியை எடுத்துப் பார்க்கும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (மூணார் ரமேஷ்), அதில் முன்னெச்சரிக்கையுடன் தோட்டா நிரப்பப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இது குறித்து அவர் கேள்வி எழுப்ப, “அவன் முஸ்லிம் சார்… அதனால் தான்…” என்று இவர்கள் பதில் சொல்ல, ஆவேசப்படும் இன்ஸ்பெக்டர், “நானும் முஸ்லிம் தான்யா; என்னையும் சுடுவீங்களா?” என்று கேட்க, ‘காதர் பாட்சா’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட பட்டை அவரது காக்கிச் சட்டையில் பொருத்தப்பட்டிருப்பது பார்வையில் படுகிறது. மேலும், “இவனுக்கு வச்சிருக்கிற அப்துல் ரௌஃப் என்ற பேர்க்காரன் யாரு தெரியுமா? ஈழத்தமிழர்களுக்காக தீக்குளிச்சு செத்த தமிழண்டா” என்று அவர் விளக்கம் அளிக்க, தலைமைக் காவலர் கதிரவன் சவுக்கால் அடிப்பட்டவர் போல் தவித்து மனம் மாறுகிறார். கைதி அப்துல் ரௌஃப் மீதான அவரது அணுகுமுறையும் மனிதாபிமானம் மிக்கதாக மாறுகிறது.

விக்கிரவாண்டியிலிருந்து சிவகங்கைக்கு லாரியில் பயணிக்கும்போது, அப்துல் ரௌஃப் பற்றி அவரிடம் கருணையுடன் விசாரிக்கிறார் கதிரவன். அப்துல் ரௌஃப் மனம் திறந்து தனது வாழ்க்கைக் கதையை ஃபிளாஷ் பேக்காக விவரிக்கிறார். கணவனை இழந்த தனது ஏழைத் தாய் பற்றி, பால்ய சினேகிதியாக இருந்து உயிருக்குயிரான காதலியாக மாறிய கலையரசி (அனிஷ்மா அனில்குமார்) பற்றி, ஆவேசத்தில் எதிர்பாராமல் விபத்துப் போல் நிகழ்ந்த ஒரு மரணம் தன்னை கொலைக் குற்றவாளி ஆக்கியிருப்பது பற்றி, ஒவ்வொரு வாய்தாவின்போதும் தன் காதலி கலையரசி தவறாமல் நீதிமன்றத்துக்கு வந்து தன்னைப் பார்ப்பது பற்றி எல்லாம் அப்துல் ரௌஃப் உள்ளம் உருக சொல்லக் கேட்டு நெகிழ்ந்து போகிறார் கதிரவன்.

அப்துல் ரௌஃப்க்கு உதவ நினைக்கும் கதிரவன் எடுக்கும் முடிவு என்ன? அதன்பிறகு அவர் என்ன செய்கிறார்? வழக்கு என்ன ஆனது? இறுதியில், காதலர்களான அப்துல் ரௌஃப்பும், கலையரசியும் வாழ்க்கையில் இணைந்தார்களா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் எமோஷனலாக அட்டகாசமாக கிளைமாக்சுடன் விடை அளிக்கிறது ‘சிறை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

விசாரணைக் கைதி அப்துல் ரௌஃப் கதாபாத்திரத்தில் எல்.கே.அக்ஷய் குமார் நடித்திருக்கிறார். அவர் புதுமுகம் போல் இல்லாமல், அனுபவம் வாய்ந்த நடிகர் போல் தேர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தாய் மீது பாசம், பால்ய சினேகிதி மீது காதல், தாயைத் தாக்கியவன் மீது ஆக்ரோஷம் என அனைத்து உணர்ச்சிகளையும் தெளிவாக உள்வாங்கி, அவற்றை பக்காவாக பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். ஏறக்குறைய படம் முழுக்க கைவிலங்கிட்ட நிலையில், தன்னை காவலர்கள் தரக்குறைவாக நடத்தியபோதிலும் அதை சகித்துக்கொள்ளும் அவர், நீதிமன்றத்திற்கு தன்னைப் பார்க்க வரும் காதலி முன் தனக்கு கைவிலங்கு வேண்டாம் என்று தலைமைக் காவலர் கதிரவனிடம் கெஞ்சும் காட்சியில் உள்ளத்தை உருக்கிவிடுகிறார். மொத்தத்தில் தமிழ் சினிமாவுக்கு மற்றுமோர் திறமையான இளம் ஹீரோ கிடைத்துவிட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம். வாழ்த்துகள் அக்ஷய் குமார்.

தலைமைக் காவலர் கதிரவனாக விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். வழக்கமான ஹீரோயிஸமோ, சினிமாத்தனமோ இல்லாமல், யதார்த்தமான தலைமைக் காவலர் கதாபாத்திரத்தில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் தொடங்கிய மூன்றாவது நிமிடம் இவர் நடத்தும் தடாலடியான துப்பாக்கி சூடு, பார்வையாளர்களைத் திடுக்கிடச் செய்து, நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆரம்பத்தில் முஸ்லிம்கள் பற்றிய பொதுபுத்தியுடன் இளக்காரமாக இருப்பது, விக்ரவாண்டி இன்ஸ்பெக்டர் காதர் பாட்சாவின் பேச்சைக் கேட்ட பின் அப்துல் ரௌஃபிடம் இணக்கமாக நடந்துகொள்ளத் தொடங்குவது என்ற முக்கியமான குணநலன் மாற்றத்தை மிகச் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். ‘கும்கி’ போல, ‘டாணாக்காரன்’ போல, விக்ரம் பிரபுவின் திரையுலக வாழ்வின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘சிறை’ அவருக்கு நிச்சயம் பெயர் பெற்றுத் தரும்.

அப்துல் ரெளஃபின் காதலி கலையரசியாக அனிஷ்மா அனில்குமார் நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். அற்புதமாக நடித்திருக்கிறார். அவரது பெரிய கண்களும், புன்னகையும் வசீகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் கண் கலங்கும்போது பார்வையாளர்களையும் சேர்த்து கண் கலங்கச் செய்து விடுகிறார். விரைவில் தமிழ்த்திரையில் தனக்கென்றோர் தனி இடம் பிடித்து பிரகாசமாக வலம் வருவார் என்று நம்பலாம்.

தலைமைக் காவலர் கதிரவனின் மனைவியாக, பெண் போலீஸ் மரியமாக ஆனந்தா தம்பிராஜா நடித்திருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை குறைவின்றி நிறைவாகச் செய்திருக்கிறார்.

விக்ரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் பாட்சாவாக வரும் மூணார் ரமேஷ், சிவகங்கை நீதிமன்ற நீதிபதியாக வரும் பி.எல்.தேனப்பன், அப்துல் ரௌஃபின் ஏழைத் தாயாக வரும் நடிகை, கலையரசியின் மூர்க்கமான மாமாவாக வரும் நடிகர் உள்ளிட்ட ஏனைய உறுதுணை நடிப்புக் கலைஞர்களும் தமக்குக் கிடைத்த அருமையான கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தின் புதுமையான கதையை நடிகரும் ‘டாணாக்காரன்’ வெற்றிப்பட இயக்குநருமான தமிழ் எழுதியிருக்கிறார். வெற்றி மாறனிடம் நீண்ட காலம் இணை இயக்குநராக பணியாற்றி அனுபவம் பெற்ற சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தை இயக்கி, தனது முதல் படத்திலேயே ‘ நட்சத்திர இயக்குநர்’ என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். இயக்குநர் தமிழும், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியும் இணைந்து இப்படத்தின் வலிமையான திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். வித்தியாசமான ஒரு போலீஸ் ஸ்டோரியில் உள்ளத்தைத் தொடும் ஒரு காதல் கதையைக் கலந்து, மத நல்லிணக்கம், தமிழினப் பற்று, மனிதநேயம் சார்ந்து ஓர் அழகான, பிரமிப்பூட்டும் திரைக்காவியத்தை இவ்விரு இயக்குநர்களும் படைத்தளித்திருக்கிறார்கள். பதட்டத்தில் பார்வையாளர்களின் மூச்சே நின்றுபோகும் வகையில் கிளைமாக்ஸ் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள்.

ஜஸ்டின் பிரபாகரனின் பொருத்தமான இசையமைப்பு, மாதேஷ் மாணிக்கத்தின் அருமையான ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் கச்சிதமான படத்தொகுப்பு உள்ளிட்ட நேர்த்தியான தொழில்நுட்பங்கள் இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘சிறை’ – அனைத்துத் தரப்பினரும் அவசியம் பார்த்து, ரசித்து, தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய அற்புதமான படம்.

ரேட்டிங்: 4.5/5.