“அரசியலுக்கு வந்தாலும் துளசிமதி முருகேசன் நிச்சயம் முதலிடத்தில் இருப்பார்!” – முதல்வர் ஸ்டாலின்

‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இளம் வெற்றியாளர் துளசிமதி முருகேசன், விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, அரசியல் துறைக்கு வந்தாலும், அவர் முதல் இடத்தில் இருப்பார்” எனப் பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் விதமாக ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ எனும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது;

“இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு சிறப்பு விருந்தினர்களை அழைத்துள்ளோம். ஒருவர் சமூக சேவகியான ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், தன் 100 வயதில் நிறை வாழ்க்கை வாழ்ந்து பொது வாழ்வில் வெற்றி பெற்றவர். மற்றொருவர் இளம் வெற்றியாளர் துளசிமதி முருகேசன். விளையாட்டுத்துறையில் மட்டுமல்ல அரசியல் துறைக்கு வந்தாலும், அவர் முதல் இடத்தில் இருப்பார். அவ்வளவு சிறப்பாக பேசினார்.

நாம் வாழும் சமூகம் சாதி, மதம், இனம், மொழி, பாலின பாகுபாடு என இல்லாமல், எல்லாருக்கும் எல்லாம் எனும் சமத்துவ சமுதாயமாக இயங்க வேண்டும் என்பதுதான் நமது லட்சியம்.

மக்கள் நலத் திட்டங்களை இலவசம் என கொச்சைப்படுத்துவோரும் தமிழ்நாட்டின் திட்டங்களை பின்பற்றுகின்றனர். மகளிர் உரிமைத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி, இன்று இது இந்தியாவின் பல மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ரூ. 1,000 என்பது ஒரு தொடக்கம் மட்டும்தான். தலைநிமிரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத் தொகையும் உயரும்; அடுத்து பெண்களின் உரிமையும் உயரும்.

எதிர்காலத்தில் வரலாற்றை எழுதும்போது மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம், ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கியது என்று எழுதுவார்கள்.”

இவ்வாறு அவர் பேசினார்.