வீரவணக்கம் – விமர்சனம்

நடிப்பு: சமுத்திரகனி, பரத், பரணி, தேவன், சாதனா, ரித்தேஷ், பிரேம்குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே.மேதினி, ஆதர்ஷ், சித்தாங்கனா, ஐஸ்விகா, அரிஸ்டோ சுரேஷ், சித்திக் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: அனில் வி.நாகேந்திரன்
ஒளிப்பதிவு: கவியரசு, சினு சித்தார்த்
படத்தொகுப்பு: பி.அஜித்குமார், அப்பு பட்டத்திரி
கலை இயக்கம்: கே.கிருஷ்ணன் குட்டி
சண்டை அமைப்பு: மாஃபியா சசி
இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. ரவீ ந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன் & அஞ்சல் உதயகுமார்
பாடல்கள்: நவீன் பாரதி
பாடகர்கள்: டிஎம்எஸ் செல்வகுமார், சி.ஜே.குட்டப்பன், யாஸின் நிஸார், ரவிசங்கர், சோனியா
தயாரிப்பு: விஷாரத் கிரியேஷன்ஸ்
பத்திரிகை தொடர்பு: குணா, சதீஷ், சிவா (எய்ம்)
’வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ என்பது 2014ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். இதை எழுதி இயக்கி, தயாரித்தவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐஎம்) ஆதரவாளரான அனில் வி.நாகேந்திரன்.
இந்த படம், ஒரு கிராமத்தில் ஏற்படும் அரசியல் அமைதியின்மையையும், கேரளாவில், சுதந்திரத்துக்கு முந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மூன்று முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களான பி.கிருஷ்ண பிள்ளை, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன் ஆகியோரின் எழுச்சியையும் மையமாகக் கொண்டது. இதில் பி.கிருஷ்ண பிள்ளையாக சமுத்திரக்கனியும், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடாக சுதீஷும், ஏ.கே.கோபாலனாக பைஜு வி.கே-யும், புரட்சிப் பாடகி பி.கே.மேதினியாகவே பி.கே.மேதினியும் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தை அடித்தளமாக வைத்து, தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்ப, நீக்க வேண்டியதை நீக்கி, புதிதாக சேர்க்க வேண்டியதை சேர்த்து, தமிழ்ப்படுத்தி, பதினோரு ஆண்டுகளுக்குப்பின் ‘வீர வணக்கம்’ என்ற தமிழ்ப்படமாக இப்போது வெளியிட்டிருக்கிறார் அனல் வி.நாகேந்திரன்.

’வீரவணக்கம்’ படக்கதை என்னவென்றால், தற்காலத்தில், தமிழ்நாட்டின் தென்கோடியில், கேரள எல்லையோரம் இருக்கும் தமிழ் கிராமம் ஒன்றில் பெரிய மனிதராக வாழ்ந்துவரும் செல்வந்தர் பரத். ஆதிக்க சாதியில் பிறந்தபோதிலும், கீழ்சாதி – மேல்சாதி, ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடு எதையும் பார்க்காமல் அனைவரையும் அன்பாக, சமமாக நடத்தும் இயல்பு கொண்ட பரத், ஊருக்கு பல்வேறு நற்காரியங்களையும், ஊர்மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.
பரத்துக்கு ஒரு மகள். அவர் கல்லூரியில் படிக்கிறார். அவர் சீனியர் மாணவரை ஒருதலையாய் காதலிக்கிறார். சீனியர் மாணவரோ, தான் ஏழை, தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அப்பெண்ணின் காதலை ஏற்க மறுக்கிறார். மாணவி வந்து சீனியர் மாணவரிடம் பேசிவிட்டுச் செல்வதைப் பார்க்கும் ஆதிக்க சாதி இளைஞர்கள் சிலர், ஆத்திரத்துடன் வந்து, “எங்க சாதிப் பொண்ணுகிட்ட உனக்கு என்னடா பேச்சு?” என்று சொல்லி சீனியர் மாணவரை நையப்புடைத்து, காயப்படுத்திவிட்டுச் செல்கிறார்கள். மகன் தாக்கப்பட்டதை அறிந்து கொந்தளிக்கும் சீனியர் மாணவரின் தந்தை, தனது சகாக்கள் சிலருடன் போய், மகனை தாக்கிய ஆதிக்க சாதி இளைஞர்களை அடித்து நொறுக்கிவிட்டு வருகிறார். அவரது குடிசைக்கு அவரைத் தேடி வரும் ஆதிக்க சாதியினர், சீனியர் மாணவரின் தந்தையை தாக்குகிறார்கள்…
இந்த ’சாதி மோதல்’ விவகாரம் ஊர் பெரிய மனிதரான பரத்தின் பார்வைக்கு வருகிறது. எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயத்தின் பக்கம் நிற்கும் பரத், அவர்கள் துணிந்து நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார். மேலும், அவர்கள் பாடம் கற்று உத்வேகம் பெற வேண்டும் என்பதற்காக அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று, 96 வயதான முதுபெரும் கம்யூனிசப் போராளியும், புரட்சிப் பாடல்கள் பாடுபவருமான பி.கே.மேதினியை சந்திக்க வைக்கிறார். பி.கே.மேதினி, தன் ஞாபகங்களிலிருந்து, 1940களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த தோழர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும், சாதிய மேலாதிக்கத்தையும் எதிர்த்து, அவர் மக்களைத் திரட்டி நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களையும், ஆங்கிலேயர் மற்றும் மேல்சாதியினரின் அடக்குமுறைகளை அவர் எதிர்கொண்ட விதங்களையும் – கேட்போர் மயிர் கூச்செறியும் வண்ணம் – சுவைபட விவரிக்கிறார்.
பரத்துடன் சென்றவர்கள், ஃபிளாஷ்பேக்கில் சொல்லப்படும் தோழர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கைக் கதையைக் கேட்டு, கற்றதும் பெற்றதும் என்ன? சீனியர் மாணவரை ஒருதலையாய் காதலித்த பரத்தின் மகளது காதல் கைகூடியதா? என்பன போன்ற கேள்விகளுக்கு நெஞ்சுரத்துடன் விடை அளிக்கிறது ‘வீர வணக்கம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான தோழர் பி.கிருஷ்ண பிள்ளையாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அவர் நடித்திருக்கிறார் என்பதை விட பி.கிருஷ்ண பிள்ளையாகவே திரையில் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். உழைக்கும் மக்களுக்காக அவர் போராடுவதும், வாதாடுவதும் நிஜம் போலவே இருப்பது இப்படத்துக்கு மிகப்பெரிய பலம்.
பி.கிருஷ்ணபிள்ளையின் காதல் மனைவியாக சுரபி லட்சுமி நடித்திருக்கிறார். ஆச்சாரமான புரோகித குடும்பத்தில் பிறந்து, கிருஷ்ண பிள்ளையின் புரட்சிகர கருத்துகளால் கவரப்பட்டு, காதல் கொண்டு, கொண்ட காதலில் உறுதியுடன் நின்று, காதலரை கரம் பிடிக்கும் கதாபாத்திரத்தில் சுரபி லட்சுமி தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
தமிழ் கிராமத்தின் பெரிய மனிதராக பரத் நடித்திருக்கிறார். அவரது வயதுக்கு மிஞ்சிய வேடம்; என்ற போதிலும், கதாபாத்திரத்தின் கனத்தைப் புரிந்துகொண்டு இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னை ”கம்யூனிஸ்ட்” என்று சொல்லிக்கொள்ளும் இந்த கதாபாத்திரத்துக்கு நெற்றிப்பொட்டு, கிடாமீசை வைத்துவிட்டிருப்பதன் மூலம் இயக்குநர் என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்பது புரியவில்லை.
முதுபெரும் கம்யூனிசப் போராளியும் புரட்சிப் பாடகியுமான பி.கே.மேதினி, பி.கே.மேதினியாகவே திரையில் தோன்றி, பி.கிருஷ்ணபிள்ளையின் கதையை விவரித்திருப்பது சிறப்பு.
தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடாக சுதீஷும், தோழர் ஏ.கே.கோபாலனாக வி.கே.பைஜுவும் படத்தில் சிறிது நேரமே வந்தாலும், பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்கள்.
பரணி, தேவன், சாதனா, ரித்தேஷ், பிரேம்குமார், ரமேஷ் பிஷாரடி, ஆதர்ஷ், சித்தாங்கனா, ஐஸ்விகா, அரிஸ்டோ சுரேஷ், சித்திக் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்திருக்கிறார் அனில் வி.நாகேந்திரன். ஆரம்பகால இந்திய கம்யூனிஸ்டுகளும், ஆரம்ப காலத்தில் இந்திய கம்யூனிஸ்டுகளும் எந்த அளவுக்கு புரட்சிகர வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை உணர்வுபூர்வமாக இன்றைய இளம்தலைமுறை பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். மேலும், தற்காலத்தை விட அக்காலத்தில், தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள், ஆதிக்க சாதி ஆண்டைகளால் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக, கொடூரமாக நடத்தப்பட்டார்கள் என்பதை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, எந்த பண்ணையடிமைக்கு கல்யாணம் ஆனாலும், அவரது புது மனைவியுடன் முதலிரவை அனுபவிக்கும் உரிமை பண்ணையாருக்கு மட்டுமே உண்டு; கட்டிய கணவனுக்கு கிடையாது என்பன போன்ற துயரங்களை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை பதைபதைக்கச் செய்திருக்கிறார். நாடகத்தனமாக கதை சொல்வதைத் தவிர்த்து, நவீன தொழில்நுட்ப உத்திகளுடன் திரைக்கதையை இன்னும் சிறப்பாக செழுமைப்படுத்தியிருந்தால், படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
‘வீர வணக்கம்’ – சுரண்டலும், ஒடுக்குமுறையும் இல்லாத சமத்துவ சமுதாயம் காண விழையும் ஒவ்வொருவரும் அவசியம் கண்டு களிக்க வேண்டிய படம்!
ரேட்டிங்: 4/5