‘பராசக்தி’-க்கு U/A சான்றிதழ்; அறிவித்த தேதியில் ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் ஏற்கெனவே அறிவித்தபடி நாளை (ஜனவரி 10) படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
இப்படத்தினைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி அறிவுறுத்தினர். 1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லியிருந்தனர். இந்நிலையில், படக்குழு மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தது.
இதனைத் தொடர்ந்து இப்படத்துக்கு தற்போது U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நாளை (ஜனவரி 10) படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டான் பிக்சர்ஸ் சார்பில் பகிரப்பட்ட ட்வீட்டில், “‘பராசக்தி’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நாளை ரிலீஸ் ஆகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
