டூரிஸ்ட் ஃபேமிலி – விமர்சனம்

நடிப்பு: எம்.சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் (எ) பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலட்சுமி மற்றும் பலர்

எழுத்து, இயக்கம்: அபிஷன் ஜீவிந்த்

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

படத்தொகுப்பு: பரத் விக்ரமன்

இசை: ஷான் ரோல்டன்

தயாரிப்பு: மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட்

தயாரிப்பாளர்கள்: பசிலியான் நசரேத், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

இலங்கையிலிருந்து கள்ளத்தனமாக சென்னை வந்து சேரும் ஈழத்தமிழ் குடும்பம் ஒன்று, இங்கு எதிர்கொள்ளும் சவால்கள் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம்.

இலங்கையின் சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ்க்கை நடத்த இயலாமல், ஈழத்தமிழரான தர்மதாஸ் (எம்.சசிகுமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), மகன்கள் நிதுஷன் (மிதுன் ஜெய்சங்கர்), முள்ளி (கமலேஷ் ஜெகன்) ஆகியோர் கடல் வழியாக கள்ளத்தோணியில் தமிழ்நாட்டு கடற்கரைக்கு வந்து சேருகிறார்கள். சென்னையில் வசிக்கும் வசந்தியின் தம்பி பிரகாஷ் (யோகி பாபு), அக்காவின் குடும்பத்துக்கு உதவுவதாக உறுதி அளித்திருப்பதால், தமிழக கடற்கரைக்கு வந்து சேரும் அவர்கள், போலீசில் சிக்கிக் கொள்கிறார்கள். என்றாலும் அவர்களின் நல்ல குணங்களைப் புரிந்துகொள்ளும் ஏட்டு பைரவன் (ரமேஷ் திலக்), அவர்களை காவல் நிலையம் செல்லும் வழியிலேயே விடுவித்து அனுப்பிவிடுகிறார்.

சென்னை வரும் அவர்களுக்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராகவனுக்கு (பக்ஸ் என்ற பகவதி பெருமாள்) சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு ஒரு வீடு பிடித்துக் கொடுக்கிறார் பிரகாஷ். அவர்களை “கேரளாவைச் சேர்ந்தவர்கள்” என்று பொய் சொல்லி தங்க வைக்கிறார். மேலும், அவர்கள் வாழ்க்கை நடத்தத் தேவையான ஆதார் கார்டு, வாக்காளர் ஐடி உள்ளிட்ட சகலத்தையும் கள்ளத்தனமாக பெற்றுத் தருகிறார். குடும்பத் தலைவரான தர்மதாஸ், டிரைவர் வேலையில் சேருகிறார்.

அவர்கள் வசிக்கும் குடியிருப்பில் உள்ள அத்தனை குடும்பங்களும் ஒன்றோடொன்று தொடர்பு வைத்துக்கொள்ளாமல் தனிமைப்பட்டு கிடக்கின்றன. அக்குடும்பங்களில் உள்ள யாருடனும், எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று பிரகாஷ் எச்சரித்தும், அவர்களுடன் தர்மதாஸ் குடும்பத்தினர் இணக்கத்தை ஏற்படுத்தி அன்பைப் பெறுகிறார்கள். அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் பிடித்த குடும்பமாக தர்மதாஸ் குடும்பம் மாறுகிறது.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் யாரோ வைத்த வெடிகுண்டு வெடிக்க, போலீஸ் உயர் அதிகாரியின் சந்தேகப் பார்வை, அனுதினமும் இலங்கையிலிருந்து வந்து சேரும் ஈழத்தமிழர்கள் மீது விழுகிறது. அதே நேரத்தில், தர்மதாஸ் குடும்பம் தான் இதைச் செய்திருக்கும் என்று சந்தர்ப்ப சாட்சியங்கள் அடிப்படையில் ஏட்டு பைரவன் சந்தேகப்படுகிறார். தர்மதாஸின் குடும்பத்தை போலீஸ் தீவிரமாக தேடத் தொடங்குகிறது. இதற்கிடையே, அவர்கள் கேரளாக்காரர்கள் அல்ல; ஈழத்தமிழர்கள் என்ற உண்மை குடியிருப்புவாசிகளுக்குத் தெரியவருகிறது.

அதன்பின் என்ன நடந்தது? தர்மதாஸும், அவரது குடும்பத்தினரும் போலீசிடம் சிக்கினார்களா? அல்லது தப்பித்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

ஈழத்தமிழ் குடும்பத்தின் தலைவராக, இரண்டு மகன்களின் தந்தை தர்மதாஸாக எம்.சசிகுமார் நடித்திருக்கிறார். இயல்பிலேயே நல்லவரான சசிகுமார், திரையில் நல்லவராக வருவதில் வியப்பு ஏதும் இல்லை. செயற்கையான ஹீரோயிசம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல், கதைக்குள் முதன்மைக் கதாபாத்திரமாக கனகச்சிதமாகப் பொருந்தி, யதார்த்தமாக, சிறப்பாக நடித்திருக்கிறார்.

தர்மதாஸின் மனைவி வசந்தியாக சிம்ரன் நடித்திருக்கிறார். அடக்க ஒடுக்கமாக, புடவை கட்டிய பொறுப்புள்ள குடும்பத் தலைவியாக, இரண்டு மகன்களின் அம்மாவாக அளவோடு நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.

இவர்களின் மூத்த மகன் நிதுஷனாக மிதுன் ஜெய்சங்கரும், இளைய மகன் முள்ளியாக கமலேஷ் ஜெகனும் அருமையாக நடித்திருக்கிறார்கள். மூத்தவனின் கதாபாத்திரம் கொஞ்சம் சீரியஸ் டைப் என்பதால் அதற்கேற்ற நடிப்பையும், இளையவனின் கதாபாத்திரம் ’நக்கல் மன்னன்’ என்பதால் அதற்கேற்ற காமெடி நடிப்பையும் வழங்கி அசத்தியிருக்கிறார்கள்.

வசந்தியின் தம்பி பிரகாஷாக யோகி பாபு நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளே வந்தாலும், நகைச்சுவையை நிறைவாகத் தூவி விட்டிருக்கிறார்.

ஏட்டு பைரவனாக வரும் ரமேஷ் திலக், இன்ஸ்பெக்டர் ராகவனாக வரும் பக்ஸ் (எ) பகவதி பெருமாள், ரிச்சர்ட்டாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், குணசேகராக வரும் இளங்கோ குமரவேல், மங்கையர்க்கரசியாக வரும் ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். தனது முதல் படத்திலேயே இப்படியொரு கதையைத் தேர்வு செய்து, திரையில் தீட்டிக் காட்டியதற்காக இயக்குநரை பாராட்டலாம். கொஞ்சம் தப்பாக எடுத்தால் கூட பல பாதக விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடிய கதைக்களத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். படம் முழுக்கவே காமெடியையும், எமோஷனையும் சரிவிகிதத்தில் கலந்து, சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். படம் முடிந்து வெளியே வரும்போது, ஒரு நல்ல படம் பார்த்த உணர்வை, திருப்தியை, பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறார். ’விளையும் பயிர் முளையில் தெரியும்’ என்பது போல, இந்த இயக்குநர் எதிர்காலத்தில் பல நல்ல படங்களைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கின்றன. அரவிந்த் விஸ்வநாதனின் இயல்பு மீறாத ஒளிப்பதிவு சிறப்பு. படம் 128 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் படத்தைத் தொகுத்து விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன்.

’டூரிஸ்ட் ஃபேமிலி’ – இயக்குநர் ராதாமோகன் பாணியிலான ஃபீல்குட் மூவி! பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3/5