தலைவன் தலைவி – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, தீபா சங்கர், ஜானகி சுரேஷ், பேபி மகிழினி, அருள்தாஸ், வினோத் சாகர், ரோஷினி ஹரிபிரியன், முத்துக்குமார், செண்ட்ராயன், கிச்சா ரவி, ரோஹன், ஆதித்யா கதிர் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: பாண்டிராஜ்
ஒளிப்பதிவு: எம்.சுகுமார்
படத்தொகுப்பு: பிரதீப் இ ராகவ்
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: சத்யஜோதி ஃபிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள்: செந்தில் தியாகராஜன் & அர்ஜுன் தியாகராஜன்
வழங்கல்: டிஜி தியாகராஜன்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
‘ஃபேமிலி டிராமா’ ஜானரில் ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ போன்ற வெற்றிப்படங்களைப் படைத்தளித்த இயக்குநர் பாண்டிராஜ், மீண்டும் அதே ஜானரில் எடுத்துள்ள திரைப்படம்; போட்டி போட்டு நடிக்கக் கூடிய விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் திரைப்படம்; பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்திருக்கும் “பொட்டல முட்டாயே” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும் திரைப்படம்; டிரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ள திரைப்படம் போன்ற காரணங்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘தலைவன் தலைவி’. தற்போது திரைக்கு வந்திருக்கும் இத்திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
மதுரை ஒத்தக்கடையில், பரோட்டாவுக்கு பெயர் பெற்ற சிறிய உணவகம் ஒன்றை நடத்திவருகிறார் கதையின் நாயகன் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி). அவரது தங்கை ராகவர்த்தினியின் (ரோஷினி ஹரிபிரியன்) பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த உணவகத்தை, அப்பா செம்பையா (சரவணன்), அம்மா பொட்டு (தீபா சங்கர்) உள்ளிட்ட மொத்தக் குடும்பமும் உழைப்பைக் கொட்டி லாபகரமாக நடத்தி வருகிறது.
ஒத்தக்கடையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஊர் வளநாடு. இங்கு வசிக்கும் அரசாங்கம் (செம்பன் வினோத்) – ஆவர்ணம் (ஜானகி சுரேஷ்) தம்பதியின் மகள் பேரரசி ( நித்யா மேனன்). எம்.ஏ படித்துள்ள பேரரசியை, பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள ஆகாச வீரனும், அவரது குடும்பத்தாரும் பெண் பார்க்க வருகிறார்கள். தன் தங்கையை ஆகாச வீரனுக்குக் கட்டிக்கொடுக்க அண்ணன் பொற்செல்வனுக்கு (ஆர்.கே.சுரேஷ்) துளியும் விருப்பமில்லை. ஆனால், ஆகாச வீரனுக்கு வகை வகையாக பரோட்டா போடும் திறமை இருப்பதை அறிந்து, அதன்பால் ஈர்க்கப்படும் பேரரசியோ, ஆகாச வீரனை மணக்க சம்மதம் தெரிவித்து விடுகிறார். இதனால் அவருக்கும் ஆகாச வீரனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆகாச வீரனும், பேரரசியும் ’ஈருடல் ஓர் உயிர்’ ஆகி காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
இந்நிலையில், ஆகாச வீரனின் குடும்பம் கடந்த காலத்தில் ரவுடித்தனத்தைப் பின்னணியாகக் கொண்டது என்பது தெரிய வர, பேரரசியின் குடும்பத்தார் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். அதுபோல், பேரரசியைத் திருமணம் செய்து வைத்தால், அவர் எதிர்காலத்தில் ஆகாச வீரனை கைக்குள் போட்டுக்கொண்டு அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தாரை ஒதுக்கி வைத்துவிடுவார் என்று ஜோசியர் சொல்வதை நம்பும் மாப்பிள்ளை வீட்டாரும் இந்த திருமணத்தை நிறுத்திவிட நினைக்கிறார்கள். ஆனால், இரு குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி பேரரசியை தன் வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்கிறார் ஆகாச வீரன்.

இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடங்கிய சில மாதங்களில், ஆகாச வீரன், தன் தங்கையின் பெயர் கொண்ட ‘ராகவர்த்தினி உணவகம்’ என்ற பெயர்பலகையைக் கழற்றிவிட்டு, ‘பேரரசி உணவகம்’ என்ற பெயர்பலகையை மாட்ட, தங்கை ராகவர்த்தினி அண்ணி பேரரசி மீது காண்டாகிறார். அதுபோல், மாமனார் செம்பையா, உணவகக் கல்லாவுக்குப் பொறுப்பாக இருந்த தன் மனைவி பொட்டுவை எழுப்பிவிட்டு, அவருக்குப் பதிலாக மருமகள் பேரரசியை அமர வைக்க, பேரரசி மீது மாமியார் பொட்டுவும் கடுப்பாகிறார். இதனால் மாமியார் பொட்டு மற்றும் நாத்தனார் ராகவர்த்தினிக்கும், பேரரசிக்கும் இடையே உரசலும், வாக்குவாதமும் ஏற்படுகிறது. அது வளர்ந்து ஆகாச வீரன் – பேரரசிக்கு இடையே கணவன் – மனைவி சண்டையாய் வெடிக்கிறது. விளைவாக, கோபித்துக்கொண்டு பேரரசி தன் பிறந்தகத்துக்குப் போவதும், ஆகாச வீரன் போய் கெஞ்சி, சமாதானப்படுத்தி அழைத்து வருவதும் வாடிக்கையாகி விடுகிறது.
இதற்கிடையில், பேரரசிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அதற்கு ‘மகிழினி’ (பேபி மகிழினி) என்று பெயர் சூட்டுகிறார்கள். இதன்பிறகும் கணவன் – மனைவி இடையே முட்டல் – மோதல் ஓய்ந்தபாடில்லை. இதில் சலிப்படையும் ஆகாச வீரனின் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் இன்னொரு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். இது தெரிந்து, பேரரசி சண்டை போட்டுவிட்டு, குழந்தையுடன் தன் தாய்வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். ஆகாச வீரனை அவரது குடும்பத்தார் அதட்டி, “அவ வேண்டாம்; மீண்டும் போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வராதே” என்று கறாராக சொல்லிவிடுகிறார்கள். மனைவியையும், குழந்தையையும் பிரிந்து தனிமையில் வாடுகிறார் ஆகாச வீரன்.
பிரிந்து வந்து மூன்று மாதமாகியும் ஆகாச வீரன் வராததால் கோபம் கொள்ளும் பேரரசி, கணவனுக்குச் சொல்லாமலே, தன் குழந்தை மகிழினிக்கு மொட்டை அடிக்கும் வைபவத்தை குலதெய்வக் கோயிலில் நடத்த ஏற்பாடு செய்கிறார். இது தெரிந்து கொந்தளிக்கும் ஆகாச வீரன், “எனக்குத் தெரியாமல் என் பிள்ளைக்கு மொட்டை போடுவதா?” என்று ஆத்திரத்துடன் குலதெய்வக் கோயிலுக்கு வந்து தகராறு செய்ய, பாதி மொட்டைத் தலையோடு குழந்தை மகிழினி இருக்க, அதன் பிறகு என்ன நடந்தது? ஆகாச வீரனும் பேரரசியும் மீண்டும் இணைந்தார்களா? அல்லது நிரந்தரமாகப் பிரிந்தார்களா? குழந்தைக்கு மொட்டை அடிக்கும் வைபவம் என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு காரசார வாய்ச்சண்டை மற்றும் கைகலப்பினூடே விடை அளிக்கிறது ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் ஆகாச வீரனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அசல் பரோட்டா மாஸ்டராகவே திரையில் வாழ்ந்திருக்கிறார். மனைவியை அடிக்கடி கோபிப்பது, பின்னர் அடுத்த நிமிடமே சரணடைவது ரசிக்கத் தக்கது. வழக்கம் போல் அதிரடி ஆக்சன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆனால், காட்சிக்குக் காட்சி அவரது ஓவர் ஆக்டிங்கும், காட்டுக் கத்தலும் பார்வையாளர்களிடம் அதிர்ச்சியை உண்டாக்கி ‘இது விஜய் சேதுபதி தானா?’ என்ற கேள்வியையே எழுப்பிவிடுகிறது.
நாயகனின் காதல் மனைவி பேரரசியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியோடு போட்டி போட்டு பன்முக நடிப்பை வழங்கியிருக்கிறார். கோபத்தில் அடிக்கடி கணவரைப் பிரிந்து கட்டைப்பையைத் தூக்கிக்கொண்டு தாய்வீடு செல்வது, பின்னர் பிரிவு தாங்காமல் தவிப்பது என திறம்பட நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். விஜய் சேதுபதி அளவுக்கு உச்ச ஸ்தாயியில் இல்லாவிட்டாலும் தன் பங்குக்கு அவரும் கத்திக்கொண்டே இருக்கிறார்.
நாயகனின் அப்பா செம்பையாவாக வரும் சரவணன், அம்மா பொட்டுவாக வரும் தீபா சங்கர், தங்கை ராகவர்த்தினியாக வரும் ரோஷினி ஹரிபிரியன், நாயகியின் அப்பா அரசாங்கமாக வரும் செம்பன் வினோத், அம்மா ஆவர்ணமாக வரும் ஜானகி சுரேஷ், அண்ணன் பொற்செல்வனாக வரும் ஆர்.கே.சுரேஷ், பல்லியின் ’அருள்வாக்கு’ கேட்டு களவாடச் செல்லும் திருடர் சித்திரையாக வரும் யோகி பாபு, மகனின் பிறந்தநாளில் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்கு சாமி கும்பிட வந்து, நாயகன் – நாயகி குடும்பச் சண்டையில் சிக்கி சின்னாபின்னமாகும் அமர சிகாமணியாக வரும் காளி வெங்கட், இவரது மனைவி நயினாவதியாக வரும் மைனா நந்தினி, மற்றும் பாரிவே ந்தனாக வரும் அருள்தாஸ், நாகபாம்புவாக வரும் வினோத் சாகர், சங்கத் தலைவராக வரும் முத்துக்குமார், சோமனாக வரும் செண்ட்ராயன், மடப்புலியாக வரும் கிச்சா ரவி, தம்பிகண்ணாவாக வரும் ரோஹன், ஒத்தாசையாக வரும் ஆதித்யா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இயக்குநர் கத்தச் சொன்னால் இவர்களும் கத்தத் தவறியதில்லை.
இந்த படத்தில் கத்தவே கத்தாத ஒரே நட்சத்திரம் பேபி மகிழினி மட்டும் தான். நாயகன் – நாயகியின் பெண் குழந்தையாக பாதி மொட்டைத் தலையுடன் படம் முழுக்க வரும் மகிழினி ரொம்ப க்யூட். குழந்தை மிகவும் அழகு. அதன் திரை இருப்பு மேலும் அழகு. பார்த்துக்கொண்டே இருக்கலாம். அன்பு முத்தங்கள் மகிழினி!
சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகங்கள். கமர்ஷியல் படம் என்றாலும் தனித்துவமான பின்னணி இசை பார்வையாளர்களின் கவனத்தை சட்டென்று ஈர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். குறுகிய தெருக்களில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் அவரது கேமரா மாயாஜாலம் செய்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜன். ஸ்கிரிப்ட் ஓ.கே. முழுக்கதையும் குலதெய்வக் கோயிலில் நடப்பது போல் வடிவமைத்து, தேவையான இடங்களில் ஃபிளாஷ்பேக் சீக்வன்ஸ்களை இன்சர்ட் பண்ணியிருப்பது புத்திசாலித்தனம். ஆனால், ஸ்கிரிப்ட்டை பக்காவாகத் தயாரித்துக்கொண்ட இயக்குநர் பாண்டிராஜ், அதை எக்ஸ்கியூட் பண்ணுவதில் கோட்டை விட்டுவிட்டார். நடிப்புக் கலைஞர்கள் எல்லோரையும் காட்டுக் கத்தாக கத்தவிட்டு, மனம்போன போக்கில் படமாக்கியிருக்கும் இயக்குநர், பார்வையாளர்களின் காதுகளைக் கிழித்து ரத்தம் வழியச் செய்துவிட்டார். கூடுதலாக விஜய் சேதுபதியை ஓவர் ஆக்ட்டிங் பண்ண வைத்து, பார்வையாளர்களைச் சோர்ந்து விழ வைத்து விட்டார்.
மேலும், சட்டபூர்வ விவாகரத்து பற்றிய புரிதல் இயக்குநருக்கு இல்லை என்பது பெரும் சோகம். சின்னச் சின்ன சண்டைக்கெல்லாம் விவாகரத்து கோரி தம்பதியர் குடும்ப நீதிமன்றத்துக்குச் செல்வதில்லை. அப்படியே அவர்கள் வந்தாலும், “பிடிங்க விவாகரத்து” என்று நீதிபதிகள் தூக்கிக் கொடுத்துவிடுவதும் இல்லை. தம்பதியரிடையே இணக்கத்தையும், சமரசத்தையும் ஏற்படுத்த அவர்களை முதலில் ’கவுன்சிலிங்’க்கு அனுப்புவார்கள். அங்கு பல கட்ட சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவற்றில் சமரசம் ஏற்படாதபோது, தம்பதியர் இனி சேர்ந்து வாழவே இயலாது என்பது தெரியவரும்போது, கட்டாயப்படுத்தி சேர்த்து வைத்தால் கணவன், மனைவி, குழந்தைகள் என மொத்த குடும்பத்தினரது வாழ்க்கையும் நரகமாகிவிடும் என்பது தெளிவாய் புரியும்போது தான் நீதிபதிகள் விவாகரத்து வழங்குவார்கள். அப்படியிருக்கும்போது சட்டபூர்வ விவாகரத்தை ’குருட்டுப் புனிதம்’ பேணும் இயக்குநர் பாண்டிராஜ் போகிற போக்கில் விமர்சித்திருப்பது சரியல்ல. கண்டிக்கத் தக்கது.
‘தலைவன் தலைவி’ – சுவாரஸ்யமான டிவி சீரியல்!
‘ரேட்டிங்’ – 2/5.