தடை அதை உடை – விமர்சனம்
நடிப்பு: அங்காடி தெரு மகேஷ், திருக்குறள் குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது, நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம் கௌதமி, சுபாஸ்ரீ, சூரியப்ரதாபன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: அறிவழகன் முருகேசன்
ஒளிப்பதிவு: தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன்
படத்தொகுப்பு: டாய்சி
கலை: சிவகுமார், மணி
ஸ்டண்ட்: அசோக் குமார்
இசை: சாய் சுந்தர்
தயாரிப்பு: ’காந்திமதி பிக்சர்ஸ்’ அறிவழகன் முருகேசன்
பத்திரிகை தொடர்பு: புவன் செல்வராஜ்
திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் மூன்று இளைஞர்களின் லட்சியப் பயணத்தை கதைக்கருவாக வைத்துக் கொண்டு, பல வருடங்களுக்கு முன்பு கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து தனது அடுத்த தலைமுறையை மீட்டெடுக்க தனி நபராக ஒருவர் நடத்திய புரட்சியையும், தற்போதைய காலகட்டத்தில் சோசியல் மீடியாக்கள் மூலம் நடக்கும் சமூக சீர்கேடு பற்றியும் வித்தியாசமான கதை சொல்லல் மூலம் பேசுவது தான் ‘தடை அதை உடை’.

கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து தனது அடுத்த தலைமுறையை மீட்டெடுக்க போராடும் நபர், அதில் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்ற உண்மை சம்பவத்தை குறும்படமாக எடுக்கும் இளைஞர்கள் அதன் மூலம் தங்களுக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அந்த படம் தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போய்விடுவதால், தங்களது கனவு சிதைந்து விட்டதாக நினைக்கிறார்கள். அந்த சமயத்தில், அவர்களுக்கு புதிய யோசனை ஒன்று தோன்றுகிறது, அந்த யோசனையின்படி மீண்டும் ஒரு குறும்படம் எடுக்கிறார்கள். அது என்ன படம்? அதன் மூலம் அவர்களுக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததா, இல்லையா? என்பதை இயக்குநர் அறிவழகன் முருகேசன், சுவாரஸ்யமாக மட்டும் இன்றி, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு மற்றும் கதை சொல்லலில் புதிய பாணியை கையாண்டு ரசிக்க வைத்திருக்கிறார்.
சிவனாக வரும் அங்காடி தெரு மகேஷ், சதீஷாக வரும் திருக்குறள் குணா பாபு, கம்பனாக வரும் கே.எம்.பாரிவள்ளல், கார்த்திக்காக வரும் திருவாரூர் கணேஷ், வினோத்தாக வரும் மஹாதீர் முகமது என முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் ஒரு சிலர் சில படங்களில் நடித்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் புதுமுகங்களாகவே இருக்கிறார்கள். ஆனால், அந்த அடையாளம் தெரியாதபடி அனைவரும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
சிலுக்கு மணியாக வரும் எம்.கே.ராதாகிருஷ்ணன், தலைமை ஆசிரியராக வரும் வேல்முருகன், தேவியாக வரும் சுபாஸ்ரீ மற்றும்
நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், காத்து கருப்பு கலை, பாக்கியம் கெளதமி, சூரியப்ரதாபன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை வசனம், எழுதி இயக்கியிருப்பதோடு, தயாரிக்கவும் செய்திருக்கும் அறிவழகன் முருகேசன், உண்மை சம்பவம் ஒன்றை சொல்வதற்காக வித்தியாசமான கதை சொல்லல் மற்றும் திரைக்கதையை கையாண்டிருப்பது பாராட்டும்படி உள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் சமூக சீர்கேடுகள் மற்றும் அதன் பேராபத்துகளை சொல்லி எச்சரிக்கும் இயக்குநர், அதனை சிரிக்கும்படியும் சொல்லியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால், படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இசையமைப்பாளர் சாய் சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர்கள் தங்கபாண்டியன் மற்றும் சோட்டா மணிகண்டன் ஆகியோரது கேமரா பழைய காலகட்டத்தையும், தற்போதைய காலகட்டத்தையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
‘தடை அதை உடை’ – பார்க்கலாம்!
ரேட்டிங்: 2.75/5
