டென் ஹவர்ஸ் – விமர்சனம்

நடிப்பு: சிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, ’ஆடுகளம்’ முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, சாருமிஷா, நிரஞ்சனா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: இளையராஜா கலியபெருமாள்
ஒளிப்பதிவு: ஜெய் கார்த்திக்
படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்
இசை: கே.எஸ்.சுந்தரமூர்த்தி
தயாரிப்பு: ’டுவின் ஸ்டூடியோஸ்’ லதா பாலு, துர்க்காயினி வினோத்
தமிழ்நாடு ரிலீஸ்: ‘ஃபைவ் ஸ்டார்’ செந்தில்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
சென்னை ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இரவு 8 மணிக்கு ‘ஐம்பொன் டிராவல்ஸ்’ ஆம்னி பேருந்து ஒன்று கோவைக்கு புறப்பட்டுப் போகிறது…
அதே நேரம், சேலம் ஆத்தூர் காவல் நிலையத்துக்குப் பதறியடித்து ஓடிவரும் ஒரு கணவனும் மனைவியும், தங்களது மகளைக் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார்கள்…
ஆத்தூர் காவல் நிலையத்தில் காஸ்ட்ரோ (சிபி சத்யராஜ்) இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவர் நெற்றி நிறைய விபூதி பூசி, ஐயப்பனுக்கு விரதம் இருந்து, மாலை அணிந்து, பக்திப்பழமாக காட்சி தருகிறார். விடிந்தவுடன் – அதாவது இன்னும் பத்து மணி நேரத்தில் – அவர் சபரிமலைக்குக் கிளம்ப திட்டமிட்டிருக்கிறார். அதனால், அடுத்த பத்து மணி நேரத்துக்குள் அந்த பெற்றோரின் மகளை கண்டுபிடித்து, வழக்கை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கிறார். இதற்கான புலனாய்வில் தனக்கு உதவுவதற்காக சப்-இன்ஸ்பெக்டர் மணியை (கஜராஜ்) தன் டீமில் சேர்த்துக்கொண்டு விசாரணையைத் துவக்குகிறார்.

விசாரணையில், அந்த பெண் கடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளும் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ, அந்தப் பெண்ணை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது, சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருக்கும் ‘ஐம்பொன் டிராவல்ஸ்’ ஆம்னி பேருந்தில் இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்படுவதாகவும், அந்த பேருந்து கள்ளக்குறிச்சி டோல்கேட்டுக்கு ஐந்து கிலோ மீட்டருக்கு முன்னால் போய் கொண்டிருப்பதாகவும் ஜீவா (ராஜ் அய்யப்பா) என்ற ஆணின் குரல் பதட்டத்துடன் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கிறது.
உடனே தனது போலீஸ் டீமை உஷார்படுத்தும் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ, அந்த ஆம்னி பேருந்தை மடக்கி, நிறுத்தி, சோதனை செய்யும்போது, காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்த இளைஞர் ஜீவா, பேருந்துக்குள் கழுத்து அறுபட்டு, ரத்தக்காயத்துடன் இறந்துகிடக்கிறார்.
பேருந்தில் பயணித்த ஒருவர் தான் இந்த கொலையைச் செய்திருக்க வேண்டும் என்பதால் அந்த பேருந்தை காவல் நிலையத்துக்குக் கொண்டு வருகிறார் காஸ்ட்ரோ. பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் என அனைவரையும் காவல் நிலையத்தில் உட்கார வைத்து ஒருவர் பின் ஒருவராக விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
பெண்ணைக் கடத்தியது யார்? ஓடும் பேருந்தில் பெண்ணை சித்திரவதை செய்தது யார்? அது பற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்த இளைஞர் ஜீவாவை, ஓடும் பேருந்துக்குள்ளேயே வைத்து, கழுத்தறுத்துக் கொன்றது யார்? இக்குற்றச்செயல்களின் பின்னணி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோவாக சிபி சத்யராஜ் நடித்திருக்கிறார். நல்ல உயரமும், கூர்மையான பார்வையும் கொண்ட அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கும் அதே வேளை, தனது கதாபாத்திரம் பக்திப்பழம் என்பதைக் காட்டிக்கொள்ள, விசாரணைக்குப் புறப்படுவதற்கு முன் தன் நெற்றில் விபூதி பூசி கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். அவருக்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும், அறிவுக்கு வேலை கொடுக்கும் புலனாய்வுக் காட்சிகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் துடிப்புடன் நடித்து, பார்வையாளர்கள் ரசிக்கும்படி செய்திருக்கிறார்.
சப்-இன்ஸ்பெக்டர் மணியாக கஜராஜ் நடித்திருக்கிறார். படம் முழுக்க வரும் அவர், கதை நாயகனுக்கு தோளோடு தோள் நின்று பலம் சேர்த்திருக்கிறார்.
மருத்துவராக வரும் ஜீவா ரவி, பேருந்துக்குள் கொலை செய்யப்படும் இளைஞர் ஜீவாவாக வரும் ராஜ் அய்யப்பா, மாரியாக வரும் ‘ஆடுகளம்’ முருகதாஸ், மெய்யப்பனாக வரும் திலீபன், மற்றும் உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, சாருமிஷா, நிரஞ்சனா உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை குறைவில்லாமல் நிறைவாக செய்திருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள். ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த இடத்திலும் தொய்வில்லாமலும் போரடிக்காமலும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார். குற்றவாளி யார்? இரண்டு குற்றச்சம்பவங்களும் இடையே தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கான பதில்களை பார்வையாளர்கள் யூகிக்க முடியாதவாறு திரைக்கதையையும், முடிச்சுகளையும் இறுக்கமாக அமைத்து சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார். ரசிப்புக்குரிய கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றால் அது ‘டென் ஹவர்ஸ்’ போல இருக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு சிறப்பாக இயக்கியிருக்கிறார். பாராட்டுகள் இளையராஜா கலியபெருமாள்.
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை, ஜெய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு, லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் படத்தின் நேர்த்திக்கும், இயக்குநரின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.
‘டென் ஹவர்ஸ்’ – எதிர்பாராத திருப்பங்களுக்காக கண்டு களிக்கலாம்!
ரேட்டிங்: 4/5.