மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு! பதவி விலகு பழனிச்சாமி!!

தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவியுமான வளர்மதி, கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வளர்மதியின் தந்தை மாதையன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 5-ம் தேதி) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தந்தை மாதையன் தாக்கல் செய்த மனுவில், “காவல்துறை அனுமதி பெற்று, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட எனது மகளை, அரசியல் காரணங்களுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

“ஒருவர் மீது குண்டர் சட்டத்தை அமல்படுத்த சில சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், அந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. மேலும், வளர்மதி கைது செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை அவரது பெற்றோருக்கு முறையாக தெரிவிக்கவில்லை. ஆலோசனைக் குழுவின் பதில் மனுவும் தாமதமாகவே தாக்கல் செய்யப்பட்டது. எனவே, மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சில வாரங்களுக்குமுன் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே வளர்மதி இயற்கை பாதுகாப்புக் குழு சார்பில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை மாணவிகள், பொதுமக்களிடம் விநியோகம் செய்தார்.

அந்த துண்டு பிரசுரத்தில் ‘மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக புதுக்கோட்டையில் நெடுவாசல் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு துணை நிற்போம். மத்திய, மாநில அரசுகளே கதிராமங்கலத்தில் இருந்து காவல்துறையை வெளியேற்று, ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து வளர்மதியையும், அவருடன் இருந்த ஜெயந்தி(48) என்ற பெண்ணையும் சேலம் கன்னங்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். சேலம் வீராணத்தை அடுத்த வீமனூரைச் சேர்ந்தவரான வளர்மதி, பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்ஏ இதழியல் படித்து வருபவர் என தெரியவந்தது. அவர் மீது, அரசுக்கு எதிராக கலகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மாணவியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், “வளர்மதி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதற்காவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு மாணவர் கிளர்ச்சியை ஏற்படுத்தியதற்காகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், அவர் தன்னை மாற்றிக் கொள்ளாமல், தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சேலம் மாநகர காவல் ஆணையாளர் வளர்மதியை 17.7.2017 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த வளர்மதி, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, எடுத்த உடனே யார் மீதும் குண்டர் சட்டம் போடவில்லை. எவ்வளவு வழக்கு, ஜனநாயகம் என்று ஆறு ஏழு முறை போராட்டம் வெளியே நடத்திக் கொண்டு இருந்தால் மாநில சட்ட ஒழுங்கை எப்படி பேணிக் காக்க முடியும். ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை உண்டு. ஆனால் மக்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றபோது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் அராஜகத்தை தோலுரிக்கும் வண்ணம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அவர் முதல்வர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.

அவரா ராஜினாமா செய்வார்….?!?