பொங்கல் போட்டி: விஜய்யின் ’ஜனநாயகனுடன்’ முன்கூட்டியே மோதுகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’!

விஜய்யின் ’ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதே பொங்கல் ரேஸில் குதிக்க இருக்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம், ‘ஜனநாயகன்’ வெளியான ஐந்து நாட்களுக்குப் பிறகு – அதாவது ஜனவரி 14ஆம் தேதி – வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

இதன் தயாரிப்பு நிறுவனமான Dawn Pictures, ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி (அதாவது, ‘ஜனநாயகன்’ வெளியான மறுநாளே) வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி தான் தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் ’பராசக்தி’ படத்தை ரிலீஸ் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், திமுக-வை கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் நிலையில், ‘பராசக்தி’ ரிலீஸ் தேதியை மாற்றி முன்கூட்டியே வெளியிட இருப்பது திரைத்துறையில் மட்டுமல்ல, அரசியல் துறையிலும் பரபரப்பான பேசுபொருள் ஆகியிருக்கிறது.