ராஜபுத்திரன் – விமர்சனம்

நடிப்பு: பிரபு, வெற்றி, கிருஷ்ணபிரியா, மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், கோமல்குமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை மற்றும் பலர்
இயக்கம்: மகா கந்தன்
ஒளிப்பதிவு: ஆலிவர் டெனி
படத்தொகுப்பு: கமலக்கண்ணன்
இசை: நௌஃபல் ராஜா
தயாரிப்பு: கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்: கே.எம்.சபி
பத்திரிகை தொடர்பு: டைமண்ட் பாபு
1990களின் தொடக்கத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படக்கதை நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆழமான கிணற்றுக்குள் சுகமாக நீரில் மூழ்கி குளித்துக் கொண்டிருக்கும் ஓர் ஆடவனை இளம்பெண் ஒருத்தி கத்தியால் குத்தி கொலை செய்கிற காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது.
கொலை செய்யும் பெண் யார்? கொல்லப்படும் நபர் யார்? எதற்காக கொலை? என்பன போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் ஃபிளாஷ்பேக்கில் விடை சொல்வது தான் மொத்தப்படமும்.

கிராமத்தில் நல்ல பெயருடன் கௌரவமாக வாழ்ந்துவருபவர் செல்லையா (பிரபு). மனைவியை இழந்த அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் பட்டமுத்து (வெற்றி) மீது செல்லையாவுக்கு அதீத பாசம். பட்டமுத்து இளைஞன் ஆனபிறகும், அவரை எந்த வேலைக்கும் அனுப்பாமல் கண்ணின் இமை போல் பாதுகாத்து வருகிறார் செல்லையா.
ஒருநாள் திரையரங்கில் நாயகி பூச்செண்டை (கிருஷ்ணபிரியா) பார்க்கக் கூடாத இடத்தில் பார்த்த பட்டமுத்துவுக்கு காதல் அரும்ப, அதன்பின் வாக்காளர்கள் பெயரை சரிபார்க்கும் வேலை செய்யும் பூச்செண்டும், பட்டமுத்துவும் சிற்சில சமயங்களில் சந்தித்துக்கொள்ள, இருவரும் காதலர்கள் ஆகிறார்கள்.
இந்நிலையில், வானம் பொய்த்துப்போனதால் விவசாயமும் பொய்த்துப்போய்விட, குடும்பச் செலவுகளுக்கு செல்லையா வட்டிக்குக் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. அப்பாவின் கஷ்டத்தை நினைத்து கவலைப்படும் பட்டமுத்து, அவருக்குத் தெரியாமல் ஏதாவதொரு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க முடிவு செய்கிறார். அவருக்கு நண்பனின் உதவியால் தாதா லிங்காவிடம் (கோமல்குமார்) வேலை கிடைக்கிறது.
மிகப் பெரிய நெட்வொர்க் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றி, சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்வது தான் தாதா லிங்காவின் தொழில். இந்த நெட்வொர்க்கில் இணைக்கப்படும் பட்டமுத்து, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்கள் குடும்பத்திற்கு அனுப்பும் பணத்தை – வரி ஏதும் செலுத்தாமல், முறையற்ற முறையில் – நேரடியாக கொண்டு சென்று அவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.
எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்துவரும் பட்டமுத்து, ஒருநாள் ஒரு குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய பணம் அவரிடம் இருந்து திருடு போனதால் அதிர்ச்சி அடைகிறார். உண்மையைச் சொன்னபோதும் அதை ஏற்காத தாதா லிங்கா, பட்டமுத்துவை அடித்துத் துவைக்க முற்படும்போது, அப்பா செல்லையா தன் வீட்டுப் பத்திரத்தைக் கொண்டுவந்து கொடுத்து மகனைக் காப்பாற்றுகிறார்.
பட்டமுத்துவிடமிருந்து பணத்தை திருடியது யார்? அந்த திருடரை பட்டமுத்து கண்டுபிடித்தாரா? செல்லையாவின் வீட்டுப்பத்திரம் மீட்கப்பட்டதா? காதலர்களான பட்டமுத்துவும் பூச்செண்டும் திருமணத்தில் ஒன்று சேர்ந்தார்களா? படத்தின் ஆரம்பத்தில் கிணற்றுக்குள் கொல்லப்பட்ட ஆடவர் யார்? அவரை கொன்ற இளம்பெண் யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது ‘ராஜபுத்திரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் பட்டமுத்துவாக வெற்றி நடித்திருக்கிறார். கதைகளைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பவர் என பெயர் பெற்றிருக்கும் வெற்றி, அதே கவனத்துடன் இந்த அப்பா – மகன் பாசக்கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். ஒரு கிராமத்து இளைஞராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், பாசம், ஆக்ஷன் என அனைத்திலும் தேர்ந்த நடிகராக சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
நாயகனின் அப்பா செல்லையாவாக பிரபு நடித்திருக்கிறார். பாசமிகு தந்தையாக கணீர் குரல், அதிரடி சண்டை ஆகியவற்றுடன் கூடிய அனுபவ நடிப்பால் அவர் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகி பூச்செண்டாக கிருஷ்ணபிரியா நடித்திருக்கிறார். காதலுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதன்மை வில்லன் லிங்காவாக வரும் கோமல்குமார், துணை வில்லன்களாக வரும் லிவிங்ஸ்டன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான் ஆகியோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சுந்தரமாக வரும் இமான் அண்ணாச்சியும், குவைத் குமரேசனாக வரும் தங்கதுரையும் காமெடி பண்ணி, பார்வையாளர்களை அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.
அப்பா – மகன் பாசத்தை மையமாகக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுத்து, காதல், வில்லன், ஆக்ஷன் என ஜனரஞ்சகமான அம்சங்களை உள்ளடக்கி திரைக்கதை அமைத்து, குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும்படியாக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் மகா கந்தன்.
இசையமைப்பாளர் நௌஃபல் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் .
‘ராஜபுத்திரன்’ – குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்!
ரேட்டிங்: 3.5 / 5