ஓஹோ எந்தன் பேபி – விமர்சனம்

நடிப்பு: ருத்ரா, மிதிலா பால்கர், விஷ்ணு விஷால், மிஷ்கின், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, நவீன் பிள்ளை, நிவாஷினி, வைபவி, கஸ்தூரி, விஜயசாரதி மற்றும் பலர்
இயக்கம்: கிருஷ்ணகுமார் ராமகுமார்
ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்
படத்தொகுப்பு: பிரணவ்
இசை: ஜென் மார்ட்டின்
தயாரிப்பு: விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்
தமிழ்நாடு வெளியீடு: ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
சிறுவயது முதல், அப்பாவுக்கும் (விஜயசாரதி), அம்மாவுக்கும் (கஸ்தூரி) இடையே நடக்கும் ஓய்வில்லாத சண்டை – சச்சரவுகளை மட்டுமே பார்த்து பதட்டத்துடன் வளர்ந்து வந்த நாயகன் அஸ்வின் (ருத்ரா), இந்த பதட்டத்திலிருந்து தப்பிக்க நிறைய திரைப்படங்கள் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்துக்கொண்டு ‘சினிமா பிரியர்’ ஆகிவிடுகிறார். இளைஞர் ஆன பின், திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்துக்கொள்ளும் அவர், இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக சேர்ந்து பணியாற்றுகிறார்.

பிரபல நடிகர் விஷ்ணு விஷாலை நாயகனாக வைத்து படம் இயக்கும் எண்ணத்தில், அவருக்கு கதை சொல்வதற்காக, அவரது மேனேஜர் (ரெடின் கிங்ஸ்லி) மூலம் அப்பாயின்மெண்ட் வாங்கி, விஷ்ணு விஷாலை சந்திக்கிறார் அஸ்வின். அவர் சொல்லும் இரண்டு கதைகளும் கிளிக் ஆகவில்லை. “எல்லாம் ஸ்பூஃப் கதை மாதிரி இருக்கு. என்னை மிர்ச்சி சிவானு நெனைச்சியா? ஒரு லவ் ஸ்டோரி இருந்தால் சொல்லு. பண்ணலாம்” என்கிறார் விஷ்ணு விஷால். புதிதாக ஒரு கதை பண்ண அவகாசம் எடுத்துக்கொள்ளாத அஸ்வின், தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சொந்தக் காதல்களையே கதையாக சொல்லுகிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, அடுத்தடுத்து மூன்று காதல்களில் விழுந்து எழுந்தவர் அஸ்வின்!
முதல் காதல் பள்ளிப் பருவத்தில். தன்னை விட வயதில் மூத்த பக்கத்துவீட்டு மாணவி (வைபவி) மீது ஈர்ப்புக் கொள்கிறார் அஸ்வின். அதே ஈர்ப்பு அந்த மாணவிக்கும் ஏற்பட, ஓரிரவு அஸ்வினை மொட்டை மாடிக்கு வரவழைத்து வாயோடு வாய் வைத்து கிஸ் அடிக்கிறார். கிறங்கிப் போகிறார் அஸ்வின். மகள் ஒரு மார்க்கமாகத் திரிவதை வைத்து துப்புத் துலக்கிவிடும் மாணவியின் அப்பா, மாணவியை அடியடி என அடித்துத் துவைக்கிறார். “இனி அஸ்வினை லவ் பண்ண மாட்டேன். நீங்க சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று மாணவி கதறுகிறார். மட்டுமல்ல, அஸ்வினிடம் “இனி நீ என்னை அக்கான்னு தான் கூப்பிடணும்!” என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி காதலை முறித்துக்கொள்கிறார்.
(இரண்டாவது காதல் இருக்க, மூன்றாவது காதல் முதலில் சொல்லப்படுகிறது. ’நான் – லீனியராம்’!) மூன்றாவது காதல் கல்லூரிப் பருவத்தில். அதன் ஆயுள் சொற்ப நாட்கள் மட்டுமே. காரணம், அஸ்வின் காதல் கொள்ளும் மாணவி தன்பால் சேர்க்கையாளராக இருக்க, அதிர்ச்சியுடன் அது முடிவுக்கு வருகிறது.
இப்போது இரண்டாவது காதல். முக்கியமான காதல். அஸ்வினுக்கும், மீராவுக்கும் (மிதிலா பால்கர்) இடையிலான காதல். இருவரும் ஒரு திருமணத்தில் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே காதல் பற்றிக் கொள்ளுகிறது. அஸ்வினுக்கு அவரது பெற்றோரால் பதட்டமான குழந்தைப் பருவம் இருந்ததைப் போல, மீராவுக்கும் அவரது அங்கிளால் பதட்டமான குழந்தைப் பருவம் இருந்திருக்கிறது என்பது தெரியவரும்போது, இருவரும் ஒருவருக்காகவே மற்றவர் பிறந்திருப்பதாக உணருகிறார்கள். மீராவுக்கு ஒரு பாய்ஃபிரண்ட் உள்ள போதிலும், அஸ்வினே தனக்கானவன் என மயங்குகிறார். தானே முன்வந்து அஸ்வினின் வாய் கவ்வி கிஸ் கொடுக்கிறார். இப்படி, எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருக்க, ஒருநாள் மீராவின் அம்மாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சீரியஸ் ஆக, அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு பதட்டத்துடன் அஸ்வினுக்கு போன் செய்கிறார் மீரா. மிஷ்கினின் படப்பிடிப்பில் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அஸ்வின், மீராவின் போன் அழைப்பை ஏற்கவில்லை. இதன்பின், இதையொட்டி அஸ்வினுக்கும், மீராவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் மிகப் பெரிய சச்சரவாக மாற, “நமக்குள் ஒத்து வராது. பிரேக்-அப்” என்று இருவரும் பிரிந்து சென்றுவிடுகிறார்கள்…
இதுவரை கதையைக் கேட்டுக்கொண்டிருந்த நடிகர் விஷ்ணு விஷால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். ”பிரமாதம். படத்தில் ‘இடைவேளை’ விட இது சரியான இடம். மேலே கதையைச் சொல்லு” என்கிறார்.
அஸ்வின் சோகமாகிறார். “இது ‘இண்டர்வல் இல்ல சார். இது தான் கிளைமாக்ஸ். அவ்வளவு தான் கதை” என்கிறார். விஷ்ணு விஷால் புரியாமல் முழிக்க, “இது வரை நான் சொன்னது என் சொந்தக் கதை சார். எனக்கும் மீராவுக்கும் இடையே பிரேக்-அப் ஆகி பத்து வருஷம் ஆச்சு. அதன்பிறகு நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டது கூட இல்லை” என்கிறார் அஸ்வின்.
“இது கிளைமாக்ஸ் இல்லை. இண்டர்வல் தான்” என்று பிடிவாதமாகச் சொல்லும் விஷ்ணு விஷால், “இதற்குமேல் இரண்டாம் பாதிக்கு கற்பனையாக கதை பண்ணாதே. நிஜ கதாபாத்திரமான மீராவை இப்போது போய் பார். பேசு. அப்போது நடக்கும் சம்பவங்களை வைத்து செகண்ட் ஆஃபை ரெடி பண்ணு. நான் நிச்சயம் உனக்கு கால்ஷீட் கொடுக்கிறேன்” என்கிறார்.
விஷ்ணு விஷாலின் ஆலோசனையை ஏற்று, மீரா தற்போது இருக்கும் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் என்ற ஊருக்குக் கிளம்பிப் போகிறார் அஸ்வின். அந்த ஊரில் டாக்டராக இருக்கும் மீராவைக் கண்டுபிடித்து சந்திக்கிறார். அதிர்ச்சி அடைகிறார். அங்கு மீரா தன் பாய்ஃபிரண்டுடன் ’லிவ்விங் டுகெதர்’ ரிலேஷன்ஷிப்பில் வசித்து வருகிறார்…
அதன்பிறகு என்ன நடந்தது? அஸ்வினுக்கும் மீராவும் இடையே நடந்த சம்பவங்கள் என்ன? விஷ்ணு விஷால் நடிக்க இருக்கும் படத்தின் இரண்டாம் பாதி என்னவாய் அமைந்தது? தன் லட்சியப்படி அஸ்வின் திரைப்பட இயக்குநர் ஆனாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் அஸ்வினாக அறிமுக நடிகரும், பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் நிஜ தம்பியுமான ருத்ரா நடித்திருக்கிறார். முளைத்து மூணு இலை விடாத விடலைப் பையன்கள் எல்லாம், “அதிரடி ஆக்சன் படம் மூலம் தான் அறிமுகம் ஆவேன்” என்று முதிர்ச்சி இல்லாமல் அடம் பிடித்துக்கொண்டிருக்க, “இளசுகளின் இதயங்களை வெல்ல, ‘லவ்வர் பாய்’ இமேஜைப் பெற்றுத் தரும் ’காதல் படம்’ மூலம் தான் அறிமுகம் ஆக வேண்டும்” என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்து, அதற்குப் பொருத்தமான அருமையான கதையைத் தேர்வு செய்து நடித்திருப்பதற்காக ருத்ராவைப் பாராட்டலாம். மூன்று பருவங்கள், மூன்று கெட்டப்கள் என முதல் படத்திலேயே அட்டகாசமான கதாபாத்திரம் அவருக்கு. அதை நன்றாகப் புரிந்துகொண்டு, அறிமுக நடிகர் போல் இல்லாமல், அனுபவம் வாய்ந்த நடிகர் போல் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், காமெடி, கோபம், கண்ணீர் என சகல உணர்ச்சிகளையும் துல்லியமாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளார். பாடல் காட்சிகளில் இளசுகளைக் கவர்கிறார். உடல்மொழி, முக பாவனைகள், வசன உச்சரிப்பு என அனைத்திலும் முழுமை பெற்ற ஓர் உயிர்ப்புள்ள கதாநாயகனாக அவர் உருவெடுத்துள்ளார். நல்ல நாயக நடிகர்களுக்கு பற்றாக்குறை நிலவும் தமிழ் திரைப்படத் துறைக்கு, நடிப்புக்கலையை திறம்பட கற்றுத் தேர்ந்த புதுமுகமாக அறிமுகமாகியிருக்கும் ருத்ராவை இரு கரம் விரித்து வரவேற்கிறோம். ருத்ரா… வருக! மேலும் நல்ல படங்கள் தருக!
கதையின் நாயகியாக, டாக்டர் மீராவாக மிதிலா பால்கர் நடித்திருக்கிறார். தமிழுக்குப் புதுமுகம் என்றாலும், காதலிக்கத் தூண்டும் அழகான முகம். நன்றாக நடித்திருக்கிறார். குடும்பத்தில் அங்கிளின் ஆக்ரோஷத்தைக் கண்டு நடுங்கும் காட்சிகள், அதே ஆக்ரோஷத்தை ஒரு கட்டத்தில் காதலனிடமும் பார்த்து பயப்படும் காட்சிகள், காதல் காட்சிகள், நடனக் காட்சிகள் என அனைத்திலும் சிறப்பாக நடித்து முத்திரை பதித்துள்ளார்.
விஷ்ணு விஷால், நடிகர் விஷ்ணு விஷாலாகவே வருகிறார். நாயகனிடம் கதை கேட்பது, நாயகனின் காதலுக்கு ஒரு திசைவழி காட்டுவது ஆகியவற்றோடு, விஜய்யின் ’ஜனநாயகன்’, அஜித்தின் ரேசிங், மிர்ச்சி சிவாவின் ஸ்பூஃப் படங்கள், சூரி அனுப்பிய மிட்டாய் போன்றவற்றை ஜாலியாக அள்ளிப்போட்டு கலகலப்பூட்டி, பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார். தனது சொந்த வாழ்க்கையில் நேர்ந்த சில தவறுகளை துணிச்சலாக கன்ஃபெஸ் பண்ணியிருப்பது பாராட்டுக்குரியது.
மிஷ்கின், இயக்குநர் மிஷ்கினாகவே வந்து அதகளம் பண்ணியிருக்கிறார். அவர் நடத்தும் படப்பிடிப்பில் அவர் கோபப்படுவது, திட்டுவது, கத்துவது எல்லாமே நமக்கு தமாஷாக இருக்கிறது. நம்மை வயிறு நோக சிரிக்க வைக்கிறார்.
நடிகர் விஷ்ணு விஷாலின் மேனேஜராக வரும் ரெடின் கிங்ஸ்லி தனது வழக்கமான பாணியில் நகைச்சுவை வெடிகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
நாயகனின் சித்தப்பாவாக வரும் கருணாகரன் ஆங்காங்கே ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார்.
நாயகனின் முதல் காதலியாக, பள்ளிப்பருவ மாணவியாக வைபவி நடித்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும், கவர்ச்சி காட்டி சூடேற்றி, பார்வையாளர்களைக் கிறங்கடித்திருக்கிறார்.
நாயகனின் ஜோசியப் பித்து பிடித்த அப்பாவாக வரும் விஜயசாரதி, கணவனோடு சரிக்குச் சரியாக சண்டை போடும் அம்மாவாக வரும் கஸ்தூரி, நண்பர்களாக வரும் நவீன் பிள்ளை, நிவாஷினி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி கொடுத்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார். புதுமுகம் ருத்ராவை தங்கள் வீட்டுப்பிள்ளையாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் படத்தை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார். விட்டுக்கொடுத்தல், புரிந்துகொள்ளுதல், நிதானித்தல் போன்ற பண்புகள் இல்லாததால் தான் உறவில் பிரச்சனையும் விரிசலும் ஏற்படுகின்றன என்ற எல்லாக் காலத்துக்கும் பொருந்தி வரக்கூடிய நல்ல கருத்தை இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவர்களது வாழ்வியலுக்கு இணக்கமாகக் காமெடியாகவும், அதே நேரத்தில் எமோஷனலாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார். பாராட்டுகள்.
ஜென் மார்ட்டினின் இசையில், சித் ஸ்ரீராம் பாடும் ‘ஓஹோ எந்தன் பேபி’ பாடல் இனிமை. படத்தின் பின்னணி இசை, காதல் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாய் – கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளன.
காட்சிகளை ரசனையுடன் நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார் பிரணவ்.
‘ஓஹோ எந்தன் பேபி’ – இளமை துள்ளும் கலகலப்பான காதல் காவியம்; 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஆனந்தமாய் கண்டு களிக்கலாம்! அவசியம் பாருங்கள்.
ரேட்டிங்: 4/5.