நிர்வாகம் பொறுப்பல்ல – விமர்சனம்
நடிப்பு: எஸ்.கார்த்தீஸ்வரன், ஸ்ரீநிதி, ஆதவன், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன், கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம்ஆர் அர்ஜுன், ஜெயஸ்ரீ சசிதரன், தீட்சண்யா, மஞ்சு மற்றும் பலர்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: எஸ்.கார்த்தீஸ்வரன்
ஒளிப்பதிவு: என்எஸ் ராஜேஷ்
படத்தொகுப்பு: சஜின் சி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள்: கருணாகரன்
கலை: மாரியப்பன்
ஸ்டண்ட்: ஜாக்கி ஜான்சன்
நடனம்: சுரேஷ் சித்
இணை தயாரிப்பு: ’கேஎம்பி புரொடக்ஷன்ஸ்’ எம்.புவனேஸ்வரன், ‘எஸ்பிஎம் ஸ்டூடியோஸ்’ ஷாஜு சி, ஜோதிலட்சுமி
தயாரிப்பு: ’ஆர்கே ட்ரீம் ஃபேக்டரி’ டி.ராதாகிருஷ்ணன்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
2021ஆம் ஆண்டு வெளிவந்த ‘பேய் இருக்க பயமேன்’ என்ற நகைச்சுவை கலந்த திகில் திரைப்படத்தை இயக்கி, நடித்த எஸ்.கார்த்தீஸ்வரன், தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ என்ற நகைச்சுவை கலந்த சமூக விழிப்புணர்வு திரைப்படத்தை இயக்கி, கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…
கதையின் நாயகன் கே (கார்த்தீஸ்வரன்) பார்ப்பதற்கு ‘இந்த பூனையும் பால் குடிக்குமா’ என்ற ரகத்தில் ரொம்ப அப்பாவியாகத் தெரிகிறார். ஆனால், அவர் செய்யும் காரியங்கள் எல்லாம் ‘அடப்பாவி…’ ரகங்கள்.
மக்களின் பேராசை என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி, பல்வேறு நூதன வழிகளில் அவர்களை ஏமாற்றி, மோசடி செய்து, கோடி கோடியாய் பணம் பறிக்கிறார் கே. காம இச்சையால் தூண்டப்பட்டு, மொபைலில் சாட் செய்யும் இளைஞர்களை குறி வைத்து, அவர்களை பிளாக் மெயில் செய்து பணம் கறக்கிறார். ஒரு போலி நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான வட்டி தருவதாக வெகுமக்களை ஏமாற்றி, அவர்களை முதலீடு செய்ய வைத்து, ஒரே வருடத்தில் மொத்தப் பணத்துடன் எஸ்கேப் ஆகிறார். காஸ்ட்லியான மொபைல் போனை வெறும் 250 ரூபாய்க்குத் தருவதாக நாடகமாடி, சில கோடிகளை அபேஸ் செய்கிறார்.
இதனிடையே, மோகினி (மிருதுளா சுரேஷ்) என்ற பெண்ணுடன் காதலில் வயப்படும் கே, காதலியான மோகினியிடமும் ஐநூறு கோடி ரூபாயை ஆட்டையைப் போடுகிறார். இது குறித்து மோகினி தன் தோழியான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசியிடம் (ஸ்ரீநிதி) சொல்ல, அன்பரசி கே-யின் அனைத்து தில்லுமுல்லுகளையும் கண்டுபிடித்து விடுகிறார். இந்நிலையில், கே சுமார் 5 ஆயிரம் கோடி பணத்தை எடுத்துக்கொண்டு, வெளிநாட்டுக்குப் பறந்துவிட நினைக்கும்போது இன்ஸ்பெக்டர் அன்பரசியிடம் சிக்கிக்கொள்கிறார்.
இதன்பின் என்ன நடந்தது? போலீஸிடம் சிக்கிய கே தப்பித்தாரா? அல்லது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனை பெற்றாரா? அவர் மோசடிப் பேர்வழியாய் மாறியதற்கு என்ன காரணம்? அவரால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு பணம் திரும்பக் கிடைத்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் கே-ஆக எஸ்.கார்த்தீஸ்வரன் நடித்திருக்கிறார். நடனம், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை என அனைத்து அம்சங்களிலும் ஓரளவு ஸ்கோர் செய்திருக்கிறார். எனினும், நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை. அவர் சாதுவாக முகத்தை வைத்துக்கொண்டு செய்யும் நூதன மோசடிகள் ரசிக்க வைக்கின்றன.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசியாக ஸ்ரீநிதி நடித்திருக்கிறார். போலீசுக்கு உரிய கம்பீரத்தோடும், நாயகிக்கு உரிய கவர்ந்திழுக்கும் அழகோடும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகன் மீதான காதல் மயக்கத்தில், அவரிடம் 500 கோடி ரூபாயை இழக்கும் மோகினியாக மிருதுளா கணேஷ் நடித்துள்ளார். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
ஆவுடையப்பன் என்ற கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன் நடித்திருக்கிறார். பணத்தைப் பறிகொடுத்த ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் தலைவர் எப்படி எல்லாம் கதறி அழுவார் என்பதை தனது ஆகச்சிறந்த அனுபவ நடிப்பின் மூலம் வழங்கியுள்ளார்.
மொபைல் போனை காம இச்சைகளுக்குப் பயன்படுத்தும் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி நடித்திருக்கிறார். ஆபாச வெப்சைட்டுகளுக்கு இரையாகி அவர் படும் பாடு ரசிக்க வைக்கிறது.
இவர்களுடன் ஆதவன், இமான் அண்ணாச்சி, அகல்யா வெங்கடேசன், கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம்ஆர் அர்ஜுன், ஜெயஸ்ரீ சசிதரன், தீட்சண்யா, மஞ்சு உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரனே, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கிறார். மிக்க் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் தருவதாகக் கூறி கார்ப்பரேட் நிறுவனம் மூலம் நடத்திய மோசடி முதல் தற்போது நடக்கும் ஆன்லைன் மோசடிகள் வரை, அனைத்து விதமான மோசடிகளையும் அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பல வழிகளில், பலர் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்பாக செய்திகள் வெளியானாலும், மக்கள் ஏமாறுவதும், அவர்களை தொடர்ந்து ஏமாற்றுவதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை கமர்ஷியலாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன், இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
மேக்கிங், காட்சிகளை கையாண்ட விதம் ஆகியவற்றில் சில குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், நிச்சயம் இன்னொரு ’சதுரங்க வேட்டை’ ஆடியிருக்கலாம்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். ஆனால், பின்னணி இசையில் இரைச்சல் கொஞ்சம் அதிகம்.
என்எஸ் ராஜேஷின் ஒளிப்பதிவு, காட்சிகளை வண்ணமயமாகவும், நேர்த்தியாகவும் படம் பிடித்துள்ளது.
படத்தொகுப்பாளர் சஜின் சி, இயக்குநரின் கற்பனையோட்டத்திற்கு ஏற்ப காட்சிகளைத் தொகுத்துள்ளார்.
‘நிர்வாகம் பொறுப்பல்ல’ – பொழுதுபோக்கு அம்சங்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்; கண்டு களிக்கலாம்!
ரேட்டிங்: 3.5/5
