நாங்கள் – விமர்சனம்

நடிப்பு: அப்துல் ரஃபே, மிதுன், ரித்திக் மோகன், நிதின் தினேஷ், பிரார்த்தனா ஸ்ரீகாந்த், ஷாப் ஜான் எடத்தட்டில், ராக்ஸி (நாய்) மற்றும் பலர்
எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: அவினாஷ் பிரகாஷ்
இசை: வேத் சங்கர் சுகவனம்
தயாரிப்பு: கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
மணமுறிவுகள் சர்வ சாதாரணமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், ஒரு மணமுறிவால் அம்மாவைப் பிரிந்து, அப்பாவுடன் வாழ நேரும் மூன்று சிறுவர்களை மையமாகக் கொண்ட படம் இது.
ஊட்டியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்துவதோடு, அப்பள்ளிக்கு முதல்வராகவும் இருக்கிறார் ராஜ்குமார் (அப்துல் ரஃபே). அவரது மனைவி (பிரார்த்தனா ஸ்ரீகாந்த்) பிரிந்துவிட்டதால், அவர்களது 14, 12, 10 வயது மகன்களுடன் (மிதுன், ரித்திக் மோகன், நிதின் தினேஷ்) வசித்து வருகிறார் ராஜ்குமார். பள்ளி நடத்துவதில் ஏற்பட்ட நஷ்டத்தால் தண்ணீர், போதிய உணவு, மின்சார இணைப்பு என எதுவுமில்லாமல் வறுமையில் திண்டாடுகிறது அவரது குடும்பம். இந்த வறுமையோடு, அப்பாவின் அதீத கண்டிப்பும், அடக்குமுறையும், வன்முறையும் சிறுவர்களைத் தினம் தினம் அவதிக்குள்ளாக்குகின்றன.
அப்பா ராஜ்குமார் ஏன் இப்படியிருக்கிறார்? அவரது அதீத கண்டிப்பால் குடும்பம் என்னவாகிறது? அப்பாவும் அம்மாவும் எப்படியாவது சேர்ந்துவிட மாட்டார்களா என்கிற அந்தச் சிறுவர்களின் ஏக்கம் நிறைவேறியதா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு எமோஷனலாக விடை அளிக்கிறது ‘நாங்கள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

மூன்று சிறுவர்களின் கண்டிப்பான தந்தையாக, அதீத கோபக்காரராக, தன் தோல்வியை நினைத்துக் குமைபவராக, தன் தவறுகளுக்குக் கண்ணீரால் மன்னிப்பு கேட்பவராக உணர்வெழுச்சியோடு உலாவும் ராஜ்குமார் கதாபாத்திரத்திற்கு, எதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் அப்துல் ரஃபே. உடல்மொழி, வசன உச்சரிப்பு எனக் காட்சிக்குக் காட்சி நுணுக்கத்தைக் கையாண்டு பாராட்டைப் பெறுகிறார்.
மூன்று சகோதரர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் மிதுன், ரித்திக் மோகன், நிதின் தினேஷ் ஆகியோர் அதிகம் பேசவில்லை என்றாலும், அனைத்து உணர்வுகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அப்பா மீது இருக்கும் பயத்தினால் எப்போதும் சோகமாகவே இருப்பவர்கள், அப்பா தன்நிலை மறந்து செய்யும் செயல்களில் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும் இடங்களில் கூட அளவாக நடித்து கைதட்டல் பெறுகிறார்கள்.
சிறுவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் பிரார்த்தனா ஸ்ரீகாந்த், தாத்தாவாக நடித்திருக்கும் ஷாப் ஜான் எடத்தட்டில், கேத்தி என்ற பெயரில் வரும் நாய் (ரோஸி) ஆகியோர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் அவர்களது திரை இருப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அவினாஷ் பிரகாஷ். கண்டிப்பு என்ற பெயரில் குழந்தைகள் மீது ஏவப்படும் வன்முறை மற்றும் அடக்குமுறை, அதனால் அவர்களின் குழந்தைப் பருவம் எப்படி இருண்மையாகிறது என்ற விஷயத்தை உளவியல் ரீதியாக அழுத்தமாகப் பேசியிருக்கிறார் இயக்குநர். மூன்று சிறுவர்களிடமிருந்தும் தேவையான உணர்வுபூர்வமான நடிப்பை நேர்த்தியாக வாங்கியிருக்கிறார். குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் என்பதைக் குழந்தைகளின் உலகத்திற்கு நெருக்கமாக நின்று பேசிய விதத்தில் பாராட்டும், கைதட்டலும் பெறுகிறார் இயக்குநர்.
இயக்குநர் அவினாஷ் பிரகாஷே ஒளிப்பதிவையும், படத்தொகுப்பையும் கையாண்டிருக்கிறார். ஊட்டியின் நில அமைப்பைப் பதைபதைப்பைச் சேர்க்கவும், கதையின் இறுக்கத்தைக் கூட்டவும் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறது ஒளிப்பதிவு. பெரும்பாலும் ஒரே வீட்டிற்குள் நடக்கும் காட்சிகளைக் கறுப்பு – வெள்ளை மற்றும் கலர் எனப் பிரித்து, அதற்கான காரணத்தையும் கதைக்கருவிற்கு வலுசேர்க்கும்படி வைத்திருக்கிறார். அதீத நிதானத்தோடு நகரும் திரைமொழி, கதைக்கருவின் அடர்த்தியைக் குறையாமல் பார்த்துக்கொள்கிறது.
உணர்ச்சி ஊர்கோலமாக நகரும் படத்திற்குக் கிடைத்த இடத்தில் எல்லாம் கைகொடுத்திருக்கிறது வேத் சங்கர் சுகவனத்தின் பின்னணி இசை.
‘நாங்கள்’ – குடும்ப சகிதம் பார்த்து ரசிக்க வேண்டிய முக்கியமான படம்!
ரேட்டிங்: 3/5