மார்க் – விமர்சனம்

நடிப்பு: கிச்சா சுதீப், நவீன் சந்திரா, ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, விக்ராந்த், குரு சோமசுந்தரம், ஜி.எம்.குமார், தீப்ஷிகா சந்திரன், ரோஷிணி பிரகாஷ், டிராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: விஜய் கார்த்திகேயா

ஒளிப்பதிவு: சேகர் சந்திரா

படத்தொகுப்பு: எஸ்.ஆர்.கணேஷ் பாபு

இசை: அஜனீஷ் பி லோக்நாத்

சண்டை அமைப்பு: ஸ்டண்ட் சில்வா, சுப்ரீம் சுந்தர், ரவி வர்மா, கெவின் குமார், விக்ரம் மோர், சுப்ரமணி

நடன அமைப்பு: ஷோபி பால்ராஜ், தினேஷ், ராஜா கலைகுமார்

தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ்

தயாரிப்பாளர்: டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

கர்நாடக மாநிலத்தில் 16 சிறுவர் – சிறுமியர் ஒரே நாளில் கடத்தப்படுகிறார்கள். அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறார், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி அஜய் மார்கண்டேயா என்ற மார்க் (கிச்சா சுதீப்).

கர்நாடக மாநிலத்தின் பெண் முதலமைச்சர் உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறார். அவரது மகன் ஆதிகேசவன் (ஷைன் டாம் சாக்கோ) முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற வெறியில் தன் தாயையே ரகசியமாக படுகொலை செய்கிறார். அவர் முதலமைச்சரை படுகொலை செய்வதை ஒரு டாக்டர் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்து விடுகிறார். இந்த விஷயம் ஆதிகேசவனுக்குத் தெரிய வர, அந்த வீடியோ வெளியாகிவிடக் கூடாது என அவர் அதைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். அதே நேரத்தில், இந்த வீடியோ விவகாரம் போலீஸ் அதிகாரி மார்க்குக்குத் தெரிந்துவிட அவரும் அதை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

ஒரு பக்கம் கடத்தப்பட்ட சிறுவர் – சிறுமியரைத் தேடும் மார்க், மறுபக்கம் முதலமைச்சர் கொலைக்கான வீடியோ ஆதாரத்தையும் தேடுவதோடு, இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? குற்றவாளிகள் யார்? இக்குற்றச் செயல்களுக்கான பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்பாகவும், மாஸாகவும் சொல்கிறது ‘மார்க்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் சூப்பிரண்டு அஜய் மார்கண்டேயா என்ற மார்க் கதாபாத்திரத்தில் கிச்சா சுதீப் நடித்திருக்கிறார். இடைநீக்கம் செய்யப்பட்டதால், காக்கி உடை அணிய இயலாமலேயே காவல்துறைக்குரிய கடமையைச் செய்யும் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிரடி ஆக்சன் காட்சிகளில் தூள் பரத்தியிருக்கும் சுதீப், தனியொருவராக முழு படத்தையும் தன் தோளில் சுமந்து, தனது கதாபாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் செய்திருக்கிறார்.

வில்லன்களாக வரும் நவீன் சந்திரா, விக்ராந்த், குரு சோமசுந்தரம், ஷைன் டாம் சாக்கோ, ஜி.எம்.குமார் ஆகியோர் தத்தமது கதாபாத்திர வடிவமைப்புக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

முக்கியமான கேரக்டர்களில் வரும் யோகி பாபு, ரோஷிணி பிரகாஷ், தீப்ஷிகா சந்திரன், டிராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் உள்ளிட்டோர் குறைவின்றி நிறைவாக நடிப்பை வழங்கி கவனம் ஈர்க்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் கார்த்திகேயா. சாதாரண கதைக்கரு என்றாலும், அதற்கான திரைக்கதையை சுவாரஸ்யமாக வடிவமைத்திருக்கிறார். படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை, திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் படத்தை பொழுதுபோக்காக நகர்த்திச் செல்லும் இயக்குநர் விஜய் கார்த்திகேயா, இதை ஒரு மாஸ் ஹீரோவுக்கான படமாக கொடுக்கும் வித்தையை மிக சரியான முறையில் செய்து, வெற்றி பெற்றிருக்கிறார்.

இசையமைப்பாளர் அஜனீஷ் பி லோக்நாத் இசையில் ”மஸ்த் மலைக்கா…” பாடல் குதூகலம். பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா, படத்தொகுப்பாளர் எஸ்.ஆர்.கணேஷ் பாபு, சண்டை அமைப்பாளர்கள் ஸ்டண்ட் சில்வா, சுப்ரீம் சுந்தர், ரவி வர்மா, கெவின் குமார், விக்ரம் மோர், சுப்ரமணி, நடன அமைப்பாளர்கள் ஷோபி பால்ராஜ், தினேஷ், ராஜா கலைகுமார் உள்ளிட்டோரின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது.

‘மார்க்’ – அதிரடி ஆக்சன் விரும்பிகளுக்கு நிச்சயம் பிடிக்கும்!

ரேட்டிங்: 3/5.