மதறாஸ் மாஃபியா கம்பெனி – விமர்சனம்

நடிப்பு: ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசி லயா, முனீஷ்காந்த், ராம்ஸ், ஆரத்யா மற்றும் பலர்

கதை & தயாரிப்பு: ‘அன்னா புரொடக்ஷன்ஸ்’ வி.சுகந்தி அண்ணாதுரை

திரைக்கதை, வசனம் & இயக்கம்: ஏ.எஸ்.முகுந்தன்

ஒளிப்பதிவு: அசோக்ராஜ்

படத்தொகுப்பு: எஸ்.தேவராஜ்

இசை: ஸ்ரீகாந்த் தேவா

கலை: கே.ஏ.ராகவா குமார்

தமிழ்நாடு வெளியீடு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ், எஸ்2 மீடியா

சென்னை ராயபுரத்தில் வசிக்கும் பிரபல தாதா பூங்காவனம் (ஆனந்தராஜ்), சென்னையின் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு ரவுடியை ஏஜெண்டாக வைத்து அதன் மூலம் கொலை உள்ளிட்ட பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளை, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தன் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் பார்த்துக்கொள்கிறார்.

இந்நிலையில், பூங்காவனத்தின் சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்ட, உதவி கமிஷனர் திகழ் பாரதியை (சம்யுக்தா) களத்தில் இறக்குகிறது காவல்துறை. திகழ் பாரதியும் பூங்காவனத்துக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி, அவரை கைது செய்ய நெருங்குகிறார்.

அதே சமயம், தொழில் போட்டி காரணமாக உடன் இருக்கும் சிலர் பூங்காவனத்தை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள்.

இந்த இரண்டு தரப்பினரிடமும் சிக்கிக்கொள்ளும் பூங்காவனம் என்ன ஆனார்? உயிர் தப்பித்தாரா, இல்லையா? அவரது மாஃபியா தொழில் என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு கலகலப்பாக விடை அளிக்கிறது ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

தாதா பூங்காவனமாக ஆனந்தராஜ் நடித்திருக்கிறார். நெடுங்காலம் வில்லனாக மிரட்டிவிட்டு, தற்போது நகைச்சுவை நடிகராக சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஆனந்தராஜ், இந்த படத்தில் மீண்டும் வில்லத்தனமான நடிப்பு மூலம் மிரட்டவும் செய்கிறார், நக்கலான பேச்சின் மூலம் சிரிக்கவும் வைக்கிறார்.

காவல்துறை உதவி கமிஷனர் திகழ் பாரதியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். காக்கி சீருடையில் கம்பீரமாக இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருப்பவர், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

தாதா பூங்காவனத்தின் மனைவியாக தீபா நடித்திருக்கிறார். கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்து, சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்.

ரவுடி கொண்டித்தோப்பு வரதனாக முனீஷ்காந்த் நடித்திருக்கிறார். இவர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வலம் வந்தாலும், படம் முழுவதும் பார்வையாளர்களை சிரிக்க வைக்கத் தவறவில்லை.

தாதா பூங்காவனத்தின் மகள் வெரோனிகாவாக ஆரத்யா நடித்திருக்கிறார். அளவான அழகு மற்றும் நடிப்பு மூலம் கவர்கிறார்.

பர்மா பழனியாக வரும் ராம்ஸ், நான்ஸியாக வரும் சசி லயா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

வி.சுகந்தி அண்ணாதுரையின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.எஸ்.முகுந்தன். ”தலை கனத்தில் ஆட்டமாய் ஆடுபவர்கள் ஒருநாள் நிச்சயம் அடங்கிப் போவார்கள், அப்போது அவர்களுடையது என்று நினைத்த எதுவும் அவர்களுடையது அல்ல என்ற உண்மை தெரிய வரும்” என்ற சீரியஸான கருத்தை மையமாக வைத்து, கமர்ஷியல் மற்றும் காமெடி அம்சங்களைச் சேர்த்து, பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தாளம் போட வைக்கும் குத்துப்பாட்டும், மெய்மறந்து ரசிக்க வைக்கும் மெலடி பாட்டும் படத்திற்கு பலம். பின்னணி இசையும் ஓ.கே ரகம்.

ஒளிப்பதிவாளர் அசோக்ராஜின் கேமரா, காட்சிகளை வண்ணமயமாக படமாக்கி படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.

’மதறாஸ் மாஃபியா கம்பெனி’ – நல்ல கருத்தை காமெடி கலந்து சொல்லும் படம்; பார்க்கலாம்!

ரேட்டிங்: 3/5