மதராஸி – விமர்சனம்

நடிப்பு: சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த், லிவிங்ஸ்டன், தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ்

ஒளிப்பதிவு: சுதீப் இளமோன்

படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்

ஸ்டண்ட்: கெவின் குமார், திலீப் சுப்பராயன்

இசை: அனிருத்

தயாரிப்பு: ’ஸ்ரீ லட்சுமி மூவிஸ்’ என்.லட்சுமி பிரசாத்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் விட்டுச் செல்லும் உச்சஸ்தானத்தை விரைவில் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படும் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், வசூலிலும், பாராட்டுகளிலும் மிகப் பெரிய சாதனை ஈட்டிய ‘அமரன்’ படத்தை அடுத்து நடித்திருக்கும் திரைப்படம்; ‘தீனா’, ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ போன்ற வித்தியாசமான பிளாக்பஸ்டர்களைக் கொடுத்த பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓர் உறுதியான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற தீவிரத்துடன், முதன்முதலாக சிவகார்த்திகேயனுடன் இணைந்திருக்கும் திரைப்படம்; பாடல்களாலும், டிரைலர் மூலமாகவும் பெருவாரியான ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள திரைப்படம் – என்பன போன்ற காரணங்களால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘மதராஸி’. எஸ்.கே ரசிகர்களின் கொண்டாட்டங்களால் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் திரையரங்குகளுக்கு தற்போது வந்திருக்கும் இப்படம், இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த முயற்சிக்கும் வடநாட்டு ‘கன் மாஃபியா’க்களை எதிர்த்துப் போராடி, அவர்களது முயற்சியை வெற்றிகரமாக முறியடிக்கிறான் ஒரு சாமானிய ‘மதராஸி’ என்பது இப்படத்தின் கதை. இக்கதை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வடநாட்டைப் போல் கலவரபூமியாக இல்லாமல், தமிழ்நாடு (மதராஸ்) அமைதிப் பூங்காவாகத் திகழ்வது, வடநாட்டு ’கன் மாஃபியாக்களின் சிண்டிகேட்’ கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்டால், அதன்பிறகு தங்களது கள்ளத் துப்பாக்கிகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டு, வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும்; கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்ற கொடூரத் திட்டத்துடன், அது சில கண்டெய்னர் லாரிகள் நிறைய கைத்துப்பாக்கிகளை நிரப்பி, விராட் (வித்யூத் ஜம்வால்), சிராஜ் (ஷபீர் கல்லரக்கல்) ஆகியோர் தலைமையிலான அடியாள் படை பாதுகாப்புடன் ரகசியமாக சென்னைக்கு அனுப்புகிறது.

இது பற்றி சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரி பிரேமுக்கு (பிஜு மேனன்) துப்பு கிடைக்கிறது. அவர் தன்னுடைய என்ஐஏ காவலர் படையுடன் விரைந்து சென்று, கைத்துப்பாக்கிகள் நிரப்பப்பட்ட கண்டெய்னர் லாரிகளை மடக்குகிறார். இதனால் விராட் மற்றும் சிராஜ் தலைமையிலான அடியாள் படைக்கும், பிரேம் தலைமையிலான என்ஐஏ காவலர் படைக்கும் இடையே பயங்கர அடிதடி மற்றும் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. இதில் ஏராளமான என்ஐஏ காவலர்கள் உயிரிழக்கிறார்கள். பிரேம் படுகாயம் அடைகிறார். விராட்டும் சிராஜும் தங்களது கண்டெயினர் லாரிகளுடன் வெற்றிகரமாக தப்பிச் சென்று, அம்பத்தூர் அருகே உள்ள எரிவாயு தொழிற்சாலை ஒன்றில் கண்டெய்னர்களைப் பதுக்கி வைக்கிறார்கள்.

சிகிச்சைக்காக பிரேம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரை சந்திக்கும் என்ஐஏ உயரதிகாரி, பிரேம் அரைகுறையாகத் திட்டமிட்டு நடத்திய தாக்குதலால், என்ஐஏ பல காவலர்களை இழந்துவிட்டது என்று கடிந்துகொள்வதோடு, இந்த ’கள்ளத்துப்பாக்கி ஆபரேஷனில்’ இனி ஒரு காவலர் உயிர் கூட பறி போகக் கூடாது என்று எச்சரித்துவிட்டுச் செல்கிறார். இச்சமயத்தில், அம்பத்தூர் அருகே உள்ள எரிவாயு தொழிற்சாலையில் கைத்துப்பாக்கி கண்டெய்னர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தகவல் பிரேமுக்கு கிடைக்கிறது. என்ஐஏ காவலர் அல்லாத ஒருவர் உயிர் தியாகம் செய்ய முன்வந்தால், தற்கொலை ஆபரேஷனாக அவரை எரிவாயு தொழிற்சாலைக்குள் அனுப்பி, முழு ஆலையையும் வெடிக்கச் செய்து, மொத்த துப்பாக்கிகளையும், அவற்றோடு வந்துள்ள கிரிமினல் கும்பலையும் கூண்டோடு அழித்துவிடலாம் என எண்ணுகிறார் பிரேம்.

மறுபுறம், தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்பவராக அறிமுகம் ஆகிறார் நாயகன் ரகுராம் (சிவகார்த்திகேயன்). சிறுவயதிலிருந்தே அவருக்கு ‘மன மருட்சிக் கோளாறு (Delusional Disorder)’ என்ற மனநல பாதிப்பு இருக்கிறது. இதனால், முன் பின் தெரியாத யாரோ ஒருவர் ஏதோவொரு பாதிப்படைந்தால் கூட அவரை தன் குடும்ப உறுப்பினராகப் பாவித்து பதட்டமடைந்து விடுவார் ரகு. இந்த உளவியல் சிக்கலில் இருந்து மீள்வதற்காக கடந்த 16 ஆண்டுகளாக தினமும் அவர் மருந்து – மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார். அவரும் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவி மாலதியும் (ருக்மிணி வசந்த்) ஒரு ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் சந்தித்துப் பழக ஆரம்பிக்கிறார்கள். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்நிலையில் ஒருநாள் திடீரென்று ‘பிரேக்-அப்’ சொல்லி பிரிந்து சென்று விடுகிறார் மாலதி. காதலியின் பிரிவைத் தாங்க முடியாத ரகு, தற்கொலை செய்துகொள்வதற்காக ஓர் உயரமான மேம்பாலத்திலிருந்து கீழே குதிக்கிறார்…

பலத்த காயமடையும் ரகு, என்ஐஏ அதிகாரி பிரேம் சிகிச்சை பெற்றுவரும் அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். “நான் சாகணும்; என்னை காப்பாதீங்க” என்று அவர் கதறுவதை பிரேம் கவனிக்கிறார். சிகிச்சை பெற்று வரும் ரகுவுடன் பேசி, அவரது காதல் தோல்வி பற்றியும், குணமான பிறகு அவர் மீண்டும் தற்கொலை செய்துகொள்ள இருப்பது பற்றியும் தெரிந்துகொள்கிறார். செத்தே தீருவது என்ற முடிவிலிருக்கும் ரகுவை வைத்து எரிவாயு தொழிற்சாலையை வெடிக்கச் செய்ய திட்டமிடுகிறார் பிரேம். அதற்காக ரகுவை தயார் செய்து, அவரை அங்கே அனுப்புகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? எரிவாயு தொழிற்சாலைக்குள் சென்ற ரகு அங்கிருந்த கள்ளத்துப்பாக்கிகளை எப்படி அழித்தார்? அங்கிருந்த ‘கன் மாஃபியா’வின் அடியாள் படையை எப்படி துவம்சம் செய்தார்? அந்த ஆலையிலிருந்து அவர் உயிருடன் வெளியே வந்தாரா? தன் காதலி மாலதியுடன் இணைந்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு அதிரடி ஆக்ஷன் மற்றும் நெகிழ்ச்சியான காதலுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘மதராஸி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ரகுராமாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். நாம் சிவகார்த்திகேயனை இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் – ‘மன மருட்சிக் கோளாறு’ எனும் மனநல பாதிப்பு உள்ளவர் என்ற வித்தியாசமான கேரக்டரில் – மிகவும் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனநலம் சார்ந்த சவால்களையும், அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும், அழுத்தமாகக் கையாண்டு கவனிக்க வைக்கிறார். படம் முழுக்க நிறைந்திருக்கும் அவரது ஒன் லைன் கவுன்டர்கள் ரசிக்கும்படி உள்ளன. அதிரடி ஆக்சன் காட்சிகளில் ஆவேசமாகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் அவர் போடும் சண்டையில் தீ பறக்கிறது. அறிமுகப் பாடல் காட்சியில் பார்வையாளர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் பிரமாதமாக நடனம் ஆடியிருக்கிறார். காதல் காட்சிகளில் உருகவும், எமோஷனல் காட்சிகளில் கண் கலங்கவும் வைக்கிறார். குறிப்பாக விபத்தில் அடிபட்டவர்களை ஒவ்வொருவராக தூக்கிச் செல்லும் காட்சியில் அவரது நடிப்பு அபாரம். இந்த படத்தில் அவர் நல்ல எண்டர்டெயினராக மட்டுமின்றி, சிறந்த பெர்ஃபார்மராகவும் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். பாராட்டுகள் சிவா.

நாயகியாக, பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவி மாதவியாக ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். அழகாக சிரிக்கிறார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

என்ஐஏ அதிகாரி பிரேமாக பிஜு மேனன் நடித்திருக்கிறார். கருமமே கண்ணாக இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாகத் தன்னை பொருத்திக் கொண்டு அனுபவ நடிப்பை செழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வடக்கத்திய வில்லனாக, விராட் என்ற கதாபாத்திரத்தில் வித்யூத் ஜம்வால் நடித்திருக்கிறார். ஆக்சனில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தபடியாக அதிக கைதட்டல்களைக் குவிப்பது இவர் தான். மின்னல் வேக அதிரடியாலும், ஸ்டைலிஷான உடல்மொழியாலும் தூள் பரத்தியிருக்கிறார்.

இன்னொரு வடக்கத்திய வில்லனாக, சிராஜ் என்ற கதாபாத்திரத்தில் ஷபீர் கல்லரக்கல் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸாக நடித்து புகழடைந்த இவர், இந்த படத்திலும் சின்னச் சின்ன மேனரிசம் மூலம் ரசிக்க வைக்கிறார்.

விக்ராந்த், லிவிங்ஸ்டன், தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘துப்பாக்கி கலாச்சாரத்தை விதைத்தல்’ எனும் சமூகத் தீமையை அடிப்படைப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு, சிவகார்த்திகேயனுக்காக வித்தியாசமாக நாயக கதாபாத்திரத்தைச் செதுக்கி, உள்ளத்தைத் தொடும் காதலையும், அதிரடி ஆக்சனையும் கலந்து திரைக்கதை அமைத்து, சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். நாயகனை மதராஸியாகவும், வில்லன்களை வடக்கன்களாகவும் உருவாக்கியிருப்பதன் மூலம் இயக்குநர் முன்வைக்கும் நுண்ணரசியல் போற்றுதலுக்குரியது. வசனங்கள் பல காட்சிகளில் கவனம் பெறுகின்றன. உதாரணமாக, கிளைமாக்ஸில் நாயகனைப் பார்த்து, “நீ மற்றவர்களை உன் குடும்பமாக பாக்குறே. அது நோய் இல்ல” என்று நாயகி பேசும் வசனம் நெகிழச் செய்கிறது. ரசிகர்களின் பல்ஸ் அறிந்து, அதற்கேற்ப இப்படத்தை கமர்ஷியல் வெற்றிப்படமாக திறம்பட படைத்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இது நிச்சயம் கம்பேக் தான்!

அனிருத் இசையில் ”சலம்பல…”, “தங்கப்பூவே…” ஆகிய பாடல்கள் இனிமை. பின்னணி இசையில் அதிரடி காட்டி, விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சுதீப் இளமோன், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், ஸ்டண்ட் அமைப்பாளர்கள் கெவின் குமார் மற்றும் திலீப் சுப்பராயன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தின் வெற்றிக்கும் நேர்த்திக்கும் உறுதுணையாக இருந்துள்ளார்கள்.

‘மதராஸி’ – சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியிருக்கும் மெச்சத் தகுந்த நடிப்புத் திறனுக்காக மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 4/5.