பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ’LIK’ திரைப்படம்: தீபாவளிக்கு திரைக்கு வருகிறது!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது.‌

பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ.ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமார்‌ தயாரித்து, வழங்குகிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின், பாடல்கள், டிரெய்லர், ஸ்னீக் பிக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் – அனிருத் கூட்டணியில் உருவாகி வெளியான – இப்படத்தில் இடம்பெறும் – முதல் பாடல் (தீமா தீமா) பெரும் வரவேற்பினை பெற்றது. புதுவிதமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும், இப்படத்தின் மீது ரசிகர்களிடத்தில், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.