கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் – விமர்சனம்

நடிப்பு: ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா, பரதன், நிமி இமானுவேல், அமித் பார்கவ், நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி வைத்தியநாதன், கவியரசன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: கே.ரங்கராஜ்

ஒளிப்பதிவு: தாமோதரன்

படத்தொகுப்பு: கே.கே

இசை: ஆர்.கே.சுந்தர்

தயாரிப்பு: ஸ்ரீ கணபதி பிலிம்ஸ்

பத்திரிகை தொடர்பு: புவன் செல்வராஜ்

கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நாயகன் ஸ்ரீகாந்த். அவர் உலகின் பல நாடுகளில் பல தொழில்கள் செய்யும் மிகப் பெரும் கோடீஸ்வரரான அமித் பார்கவிடம் மேனேஜராக பணியாற்றி வருகிறார். விரைவில் பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்பது ஸ்ரீகாந்தின் கனவு. ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டால் தன் கனவு நனவாகிவிடும் என்ற நினைப்பில் அவர் இருக்கிறார்.

நாயகனைப் போலவே நாயகி புஜிதாவும் கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். மிகப் பெரும் செல்வந்தரான சச்சுவின் பங்களாவில் பணியாளராக இருக்கும் அவர், ஒரு கோடீஸ்வர இளைஞரைப் பார்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

ஒருநாள் நாயகன் ஸ்ரீகாந்தும், நாயகி புஜிதாவும் சந்தித்துக்கொள்ள நேரும்போது, இருவரும் தங்களை வசதி படைத்த செல்வந்தர்களாய் பொய்யாய் காட்டிக்கொள்கிறார்கள். தான் எதிர்பார்க்கும் பணக்காரப் பெண் புஜிதா தான் என ஸ்ரீகாந்தும், தான் ஆசையோடு காத்திருக்கும் பணக்கார இளைஞர் ஸ்ரீகாந்த் தான் என்று புஜிதாவும் நம்பி காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களது காதல் வளர்ந்து திருமணத்தை நோக்கி நகரும்போது, குட்டு உடைந்து உண்மை வெளிப்பட்டுவிட, காதல் முறிந்து பிரிந்து போய்விடுகிறார்கள்.

அதன்பிறகு ஸ்ரீகாந்துக்கு உண்மையிலேயே பெரிய பணக்காரராக இருக்கும் ஒரு பெண் புதிய காதலியாகக் கிடைக்கிறார். அதுபோல புஜிதாவுக்கும் உண்மையான பணக்கார இளைஞர் ஒருவர் புதிய காதலர் ஆகிறார்.

ஸ்ரீகாந்தும், புஜிதாவும் புதுக் காதலர்களை மணந்தார்களா? அல்லது தங்களது பழைய காதலைப் புதுப்பித்து, பழைய காதலர்களை கரம் பிடித்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு காதலும் காமெடியும் கலந்து சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

ஒரு பணக்காரப் பெண்ணை காதலில் வளைத்துப் போட்டு கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கும் இக்கால இளைஞர்கள் சிலரின் பிரதிநிதியாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். தன் கதாபாத்திரத்துக்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, பொய்யாய் நடித்து காதலிப்பது, பொய் அம்பலமாகும்போது காதலியிடம் சவால் விடுவது, பின்னர் உண்மை உணர்ந்து நெகிழ்வது என இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் புஜிதா அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

இரண்டாவது நாயகனாக வரும் பரதன், இரண்டாவது நாயகியாக வரும் நிமி இமானுவேல், மிகப் பெரும் கோடீஸ்வரராக வரும் அமித் பார்கவ் ஆகியோர் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

சிங்கம் புலி, நளினி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், பருத்தி வீரன் சுஜாதா, அனுமோகன், வினோதினி வைத்தியநாதன், பெரியவரின் உதவியாளராக வரும் முறுக்கு மீசை நபர் உள்ளிட்டோர் ஆங்காங்கே காமெடி பண்ணி பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார்கள்.

வயோதிக தம்பதியராக நடித்திருக்கும் சீனியர் நடிப்புக் கலைஞர்களான டெல்லி கணேஷ், கே.ஆர்.விஜயா ஆகியோர், கதையில் முக்கியத் திருப்பம் ஏற்பட பயன்பட்டிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கே.ரங்கராஜ். இப்படத்தின் மூலம் ‘பணத்தை விட காதல் தான் உயர்ந்தது’ என்ற அழகான கருத்தைச் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள். கருத்தை வறட்டுத்தனமாக பிரசங்கம் பண்ணாமல், காதல் மற்றும் காமெடி கலந்த திரைக்கதையினூடே சொல்லியிருப்பது ரசிப்புக்குரியதாக இருக்கிறது. திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஆர்.கே.சுந்தர் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

தாமோதரனின் ஒளிப்பதிவும், கே.கே-யின் படத்தொகுப்பும் இயக்குநருக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ – நிறைய காமெடி; கண்டு களிக்கலாம்!

ரேட்டிங்: 3/5.