கொம்புசீவி – விமர்சனம்

நடிப்பு: சரத்குமார், சண்முகபாண்டியன் விஜயகாந்த், தாரணிகா, சுஜித் சங்கர், முனீஷ்காந்த், கல்கி ராஜா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், பாகுபலி பிரபாகர், கஜராஜ், தருண் கோபி, ராமச்சந்திரன், இந்துமதி மற்றும் பலர்

இயக்கம்: பொன்ராம்

ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்

படத்தொகுப்பு: தினேஷ் பொன்ராஜ்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஸ்டண்ட்: ஃபீனிக்ஸ் பிரபு, சக்தி சரவணன்

கலை: சரவண அபிராம்

நடனம்: ஷெரீஃப், அஸார், காவ்யா.ஜி

தயாரிப்பு: ‘ஸ்டார் சினிமாஸ்’ முகேஷ் டி செல்லையா

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட வைகை அணையால், நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பறி கொடுத்த கிராம மக்கள், வாழ வழியின்றி, தடம் மாறிப்போன சோகக் கதையை நகைச்சுவையும், ஆக்ஷனும் கலந்து சித்தரிப்பது தான் ‘கொம்புசீவி’ திரைப்படம்.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில், வைகை அணையைக் கட்டும் பணி 1948-ல் தொடங்கி 1959-ல் நிறைவடைந்தது. இந்த அணையின் கட்டுமானப் பணியின்போது, ஆண்டிபட்டியைச் சுற்றியிருந்த 12 கிராமங்களில் வசித்த மக்கள், நிலம் கையகப்படுத்தும் அரசின் கொள்கையால் தங்கள் வீடு வாசல், நிலபுலன் உள்ளிட்ட அனைத்து வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு, தங்களது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வயிற்றுப் பிழைப்புக்கு வழியின்றி அல்லாடிய அந்த மக்கள், அணையின் அக்கம்பக்கத்தில் குடிபுகுந்தனர். அணையில் தண்ணீர் வற்றி, தங்களது பழைய நிலம் கண்ணுக்குத் தெரிந்தபோது, அதில் விவசாயம் செய்தனர். மழைக்காலத்தில் வைகையில் வெள்ளம் பெருகி, அவர்களது பயிர்களை நாசம் செய்தபோது, பிழைப்புக்காக கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கஞ்சா பயிரிட்டு வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கடத்தி விற்பது போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டனர்.

அணை வற்றினால் விவசாயம்; அணை பெருகினால் கள்ளச்சாராயம் – கஞ்சா பிசினஸ் என வாழும் அம்மக்களில் ஒருவர் தான் ரொக்கப்புலி (சரத்குமார்). பெரிய அளவில் கஞ்சா கடத்துவதும், விற்பதும் தான் அவரது தொழில்; என்றாலும், அவரது ஊரில் அவர் தான் செல்வாக்கு மிக்க பெரிய மனிதராக இருக்கிறார்.

அப்பா, அம்மாவை இழந்து அனாதையாக வாடும் சிறுவன் பாண்டிக்கு உதவிகள் செய்கிறார் ரொக்கப்புலி. பின்னர் ரொக்கப்புலியுடனேயே வந்து இணைந்துகொள்கிறான். காலச்சக்கரம் சுழல, ரொக்கப்புலி நரைத்து முதியவராய் தோற்றம் தர, சிறுவன் பாண்டியோ வளர்ந்து இளைஞராக ‘கொம்புசீவி’ பாண்டி (சண்முக பாண்டியன் விஜயகாந்த்) ஆகிறார்.

‘பணக்கட்டுகளை படுக்கை நிறைய நிரப்பி அதன்மேல் படுக்க வேண்டும்’ என்பது கொம்புசீவி பாண்டியின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக இருவரும் இணைந்து வழக்கம் போல் கஞ்சா கடத்தல் பிசினஸ் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டராக வந்து சேருகிறார் லைலா (தாரணிகா). தனது அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் – கஞ்சா பிசினஸ் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், இன்ஸ்பெக்டர் லைலாவுக்கும், ரொக்கப்புலி மற்றும் பாண்டிக்கும் இடையே முட்டல்கள், மோதல்கள் ஏற்படுகின்றன.

ஒரு கட்டத்தில் ரொக்கப்புலியும், பாண்டியும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை லாரியில் ஆந்திராவுக்குக் கடத்துகிறார்கள். இது பற்றி துப்பு கிடைத்ததும், அவர்களை மடக்கிப் பிடிக்க இன்ஸ்பெக்டர் லைலாவும், அவரது உயர் அதிகாரியும் வலை விரிக்கிறார்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது? என்பது தான் ‘கொம்புசீவி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

ரொக்கப்புலியாக சரத்குமார் நடித்திருக்கிறார். கோபம், கம்பீரமான உடல்மொழி என உசிலம்பட்டி வட்டார சம்பவக்காரராக நிமிர்ந்து நிற்கிறார். அதோடு அதிரடி ஆக்சன் களத்தில் துள்ளல் குறையாத புத்துணர்ச்சி, சீரியஸ் முகபாவனையை வைத்துக்கொண்டு செய்யும் நையாண்டிகள் என கலகலப்புக்கும் கரம் கொடுத்திருக்கிறார்.

கொம்புசீவி பாண்டியாக சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடித்திருக்கிறார். எதிரிகளை அடித்துப் பறக்கவிட்டு வெற்றி நடைபோடும் ஆக்ஷன் காட்சிகளில் அவரது அப்பாவின் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார். ஏனைய காட்சிகளில் இதர எமோஷன்களை வெளிப்படுத்தப் போதுமான திறமை இன்னும் அவருக்கு கைவரப் பெறவில்லை. தீவிர நடிப்புப் பயிற்சி அவருக்கு அவசியம்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் லைலாவாக தாரணிகா நடித்திருக்கிறார். அவரை பாண்டியின் காதலியாகவா, அல்லது கடமை தவறாத வீராங்கனையாகவா… எப்படிக் காட்டுவது என்ற குழப்பம் இயக்குநருக்கு இருந்திருப்பது, தாரணிகாவின் குழப்பமான நடிப்பில் தெரிகிறது. அதனால் தட்டுத் தடுமாறி பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் தாரணிகா.

ரொக்கப்புலியின் மனைவியாக வரும் இந்துமதி, போலீஸ் உயர் அதிகாரி கரணாக வரும் சுஜித் சங்கர், கான்ஸ்டபிள்களாக வரும் காளி வெங்கட் மற்றும் ஜார்ஜ் மரியான், லாரி டிரைவர் படையப்பாவாக வரும் முனீஷ்காந்த், கொண்டா ரெட்டியாக வரும் பாகுபலி பிரபாகர், மற்றும் கல்கி ராஜா, கஜராஜ், தருண் கோபி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ போன்ற வெற்றிப்படங்களைப் படைத்த இயக்குநர் பொன்ராம். பெரிய அணை கட்டுவதால், ஏழை எளிய கிராமத்து மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்துள்ள கதைக்கருவை கையில் எடுத்ததற்காகவும், அதை வறட்டுத்தனமாக இல்லாமல், தனது டிரேட் மார்க் பாணியில் காமெடியாக சொல்ல முயன்றதற்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் புதுமைகள் சேர்த்து மெனக்கெட்டிருந்தால், படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.

வைகை அணையை சிறப்பாகப் படம் பிடித்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், நாட்டுப்புற இசையில் துள்ளல் பாடல்கள் தந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரின் பங்களிப்பும் படத்துக்கு பலம்.

‘கொம்புசீவி’ – காமெடிக்காகவும், படத்தின் கருத்துக்காகவும் பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3/5.