கம்பி கட்ன கதை – விமர்சனம்

நடிப்பு: நட்டி நடராஜன் சுப்ரமணியன், சிங்கம்புலி, ஜாவா சுந்தரேசன், முகேஷ் ரவி, கராத்தே கார்த்தி, ஸ்ரீரஞ்சனி, ஷாலினி, வழக்கு எண் முத்துராமன், தா.முருகானந்தம், வெற்றிவேல் ராஜன், டிஎஸ்ஆர், கோதண்டம் மற்றும் பலர்

இயக்கம்: ராஜநாதன் பெரியசாமி

திரைக்கதை, வசனம்: தா.முருகானந்தம்

ஒளிப்பதிவு: எம்ஆர்எம் ஜெய்சுரேஷ்

படத்தொகுப்பு: எஸ்என். ஃபாசில்

ஸ்டண்ட்: ஜாக்கி ஜான்சன்

கலை: சிவா யோகா

இசை: சதீஷ் செல்வம்

தயாரிப்பு: ‘மங்காத்தா மூவிஸ்’ ரவி

பத்திரிகை தொடர்பு: ஷேக்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இந்தியாவிலிருந்து கைப்பற்றிச் சென்ற ஓர் ஆங்கிலேயர், அதை இங்கிலாந்து மகாராணிக்கு பரிசாகக் கொடுத்தார் என்பது நாம் அறிந்தது தான். உண்மையில் அந்த ஆங்கிலேயர் இரண்டு கோஹினூர் வைரங்களை கைப்பற்றினாராம். அவற்றில் ஒன்றை மகாராணிக்கு பரிசளித்துவிட்டு, மற்றொன்றை தானே வைத்துக்கொண்டாராம் என்று எடுத்த எடுப்பிலேயே ’கம்பி கட்ன கதை’ விடுகிறார்கள்.

அடுத்து கதை தற்காலத்துக்கு நகருகிறது. ஆங்கிலேயர் தனக்கென வைத்துக்கொண்ட கோஹினூர் வைரத்தை ஓர் வெள்ளைக்காரப் பெண் இப்போது இந்தியாவுக்கு கடத்திக் கொண்டு வருகிறார். ஆனால் இங்கு விமான நிலையத்தில் அந்த கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டு, வைரம் பறிமுதல் செய்யப்பட்டு, கஸ்டம்ஸ் கஸ்ட்டியில் வைக்கப்படுகிறது.

அந்த வைரத்தை அடைய விரும்பும் ஒரு அரசியல்வாதி (வழக்கு எண் முத்துராமன்), அதை தன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்காக சில போலீஸ்காரர்களை நியமிக்கிறார். நேரடியாக போலீஸ் தலையிட்டால் அது சில சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அதற்கு ஒரு நம்பகமான மோசடி ஆசாமியைத் தேடி கடைசியில் நாயகன் நட்டியைக் கண்டுபிடிக்கிறார்கள்.

வைரத்தை எடுத்துக்கொடுக்க ஒத்துக்கொள்ளும் நட்டி, அந்த வைரம் கைக்கு வந்ததும் அதைத் தானே ஆட்டையைப் போட நினைக்கிறார். ஆனால் அவரை சும்மா விட்டு விடுவார்களா..? நட்டியை அவர்கள் துரத்த… இவர் ஓட… இவர் கையில் இருந்தும் களவு போகும் வைரம் என்ன ஆனது…? அதை இவரால் மீட்க முடிந்ததா..? என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது ‘கம்பி கட்ன கதை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

சதுரங்க வேட்டைக்கு பிறகு இப்படி ஒரு வில்லங்க வேடம் நட்டிக்கு. “பத்து பைசா செலவில்லாமல் வெளிநாட்டுக்கு அனுப்புகிறேன்… உங்களுடைய நான்காவது மாத சம்பளத்தை எனக்கு கமிஷனாக கொடுத்தால் போதும்…” என்று பொதுமக்களை ஏமாற்றுவதில் ஆரம்பித்து சாமியார் வேடம் போட்டுக்கொண்டு சல்லாபிப்பது வரை படம் முழுக்க நிறைய சேட்டைகள் செய்து கலகலப்பூட்டுகிறார்.

கிட்டத்தட்ட நித்தியானந்தாவை நினைவுபடுத்தும் சாமியார் வேடத்தில் நட்டி வர, நடிகை ரஞ்சிதாவை நினைவுபடுத்தும் அளவில் வருகிறார் ஸ்ரீ ரஞ்சனி. அவரும், இன்னொரு நாயகியான ஷாலினியும் கமர்ஷியல் அம்சங்களாக வலம் வருகிறார்கள்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் முகேஷ் ரவி, ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சியில் தனது சிக்ஸ் பேக் உடம்பை காட்டுவதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

இவர்களுடன் நட்டிக்கு சிஷ்யராக வரும் சிங்கம் புலி, ஷாலினியை கொல்ல ரஜினி ஆக வரும் முருகானந்தம், தீவுக்கு ஒரு மனைவி என்று வைத்துக் கொண்டும் குழந்தை பாக்கியம் தேடி வரும் ’பூனை சுல்தான்’ கோதண்டம் என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.

திரைக்கதை வசனத்தை எழுதி நடித்தும் இருக்கும் தா. முருகானந்தம் படத்தில் நிறைய வேலை பார்த்திருக்கிறார். இவர் எழுதிய வசனங்கள் எல்லாம் வெடித்து சிரிக்க வைக்கின்றன.

இதுவரை சுந்தர்.சியின் காமெடி ட்ரீட்மெண்டுக்கு மட்டும் வாரிசுகளே இல்லாமல் இருந்தது. இந்தப் படத்தில் அந்தக் குறையை தீர்க்கும் விதமாக சுந்தர்.சி பாணி நகைச்சுவைப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி.

ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் ஆகியோரது பணி ஓ.கே.

‘கம்பி கட்ன கதை’ – சிரித்து மகிழ்வதற்காகப் பார்க்கலாம்!

ரேட்டிங்: 2.5/5