ஜின் தி பெட் – விமர்சனம்

நடிப்பு: முகேன் ராவ், பவ்யா ட்ரிகா, வடிவுக்கரசி, பாலசரவணன், ராதாரவி, நிழல்கள் ரவி, வினோதினி வைத்தியநாதன், இமான் அண்ணாச்சி, ரித்விக் மற்றும் பலர்
இயக்கம்: டி.ஆர்.பாலா
ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா
படத்தொகுப்பு: தீபக்
இசை: விவேக் – மெர்வின்
தயாரிப்பு: ’ஃபேரி டேல் பிக்சர்ஸ்’ டி.ஆர்.பாலா
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
‘ஜின் தி பெட்’ என்ற தலைப்பை ‘வளர்ப்புப் பேய்’ என்ற பொருளில் புரிந்துகொள்ளலாம். வீட்டில் வைத்து செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் ‘வளர்ப்பு நாய்’ தெரியும்; ’வளர்ப்புப் பூனை’ தெரியும்; அது என்ன ‘வளர்ப்புப் பேய்’? என்று ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் இப்படத்தின் புதுமையான கான்செப்ட்! அதே ஆச்சரியத்துடன் இப்படத்தின் கதை என்ன என்பதை பார்ப்போம்…

படத்தின் ஆரம்பத்தில், ‘ஜின்’ எனப்படும் ‘பேய்’ பிடித்த ஓர் இளம்பெண்ணை, பேய் ஓட்டும் மந்திரவாதியிடம் அழைத்து வருகிறார்கள். அந்த மந்திரவாதி சில மந்திரங்கள் சொல்லி, அந்த பெண்ணின் உடம்புக்குள் புகுந்திருக்கும் ஜின்னைப் பிரித்து வெளியே எடுத்து, பெரிய வெற்றிலைப்பெட்டி சைசில் இருக்கும் ஓர் அழகான மாயப்பெட்டிக்குள் தந்திரமாக நுழைய வைத்து, அடைத்துவிடுகிறார்.
கதை அடுத்து நாயகன் சக்தி (முகேன் ராவ்) பக்கம் நகருகிறது. பாடகர் சக்தி மலேசியாவில் ஓர் ‘இசைக்குழு’ வைத்து நடத்தி வருகிறார். அவருக்கான வேலை ஒப்பந்தம் முடிந்துவிட்டதால், சொந்த ஊரான சென்னைக்குத் திரும்ப வேண்டிய நிலை. கிளம்புவதற்குமுன், தன் குடும்பத்தினருக்கு ஏதாவது வாங்கிப் போகலாம் என்ற நினைப்பில் புராதன கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூமுக்குச் செல்கிறார். அங்கே, பெரிய வெற்றிலைப்பெட்டி சைசில் இருக்கும் ஓர் அழகான பெட்டியைப் பார்க்கிறார். அது பற்றி விசாரிக்கும்போது, கடைக்காரர் சொல்லும் தகவல்களைக் கேட்டு ஆச்சரியப்படுகிறார்…
அந்த பெட்டிக்குள் ‘ஜின்’ என்ற ’வளர்ப்புப் பேய்’ அடைத்து வைக்கப்பட்டிருக்கிறதாம். அதை வளர்ப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருமாம். அது பாலும் பிஸ்கட்டும் தான் சாப்பிடுமாம். (சைவப்பேய்!) எனவே, தவறாமல் நள்ளிரவு 12 மணிக்கு அதற்கு பாலும் பிஸ்கட்டும் வைக்க வேண்டுமாம். அதற்கு வெயிலும், தண்ணீரும் ஆகாதாம். ஆகவே அந்த பெட்டியின் மீது வெயிலோ, தண்ணீரோ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமாம். ஜின்னை பராமரிப்பதில் அஜாக்கிரதையாக இருந்துவிட்டால், அது ஆத்திரத்துடன் பெட்டியைவிட்டு வெளியே வந்து, பேயாட்டம் ஆடி விடுமாம்!
இவற்றை கேட்ட சக்தி வியப்புடன் அந்த பெட்டி மீது கை வைக்க, உடனே அவருக்கு 5 லட்சம் பரிசு கிடைக்க, ‘லக்கி’ என்று மகிழும் சக்தி, அதை விலைக்கு வாங்கி, விமானத்தில் ஏறி, சென்னை வந்து சேருகிறார்.
ஜின் பற்றி வீட்டிலுள்ள அனைவரிடமும் பெருமையாகச் சொல்லுகிறார் சக்தி. ஆனால், அவர் சொன்னதற்கு மாறாக, ஜின் வீட்டுக்கு வந்த பிறகு தான் அவர்களுக்கு வரிசையாக கெட்ட சம்பவங்கள் நடக்கின்றன. இவற்றின் உச்சமாக, சக்தியின் காதல் மனைவி பிரியா (பவ்யா ட்ரியா) கடுமையாகத் தாக்கப்பட்டு, மூர்ச்சையாகி, ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அவரது ரத்தத் துளிகள் ஜின் அடைக்கப்பட்டிருக்கும் மாயப்பெட்டியில் தெறித்திருப்பதைப் பார்த்து, தன் மனைவியை ஜின் தான் தாக்கியிருக்கிறது என்ற முடிவுக்கு வரும் சக்தி, ஆத்திரமடைந்து அந்த பெட்டியைத் தூக்கிவந்து, நல்ல வெயில் காயும் சாலையில் வீசி எறிந்துவிட்டுப் போகிறார். அவ்வளவு தான்… பெட்டிக்குள்ளிருந்து வெளியே வரும் ஜின், ஆஜானுபாகுவான முழு உருவம் பெற்றுவிடுகிறது.
அதன்பின் என்ன நடக்கிறது? பிரியாவைத் தாக்கியது ஜின்னா? அல்லது வேறு நபர்களா? வேறு நபர்கள் எனில் யார்? ஏன்? இப்பிரச்சனையைத் தீர்க்க சக்திக்கு ஜின் உதவுகிறதா? எனில் எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ஜின் தி பெட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் சக்தியாக ‘பிக்பாஸ் தமிழ்’ வின்னர் முகேன் ராவ் நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் இயல்பாகவும், சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷமாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் சிறிது நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டால், ஒரு ’ஹீரோ மெட்டீரியலாக’ தமிழ்த்திரையில் வலம் வரலாம்!
நாயகனின் காதல் மனைவி பிரியாவாக பவ்யா ட்ரியா நடித்திருக்கிறார். அழகும் சாந்தமும் கலந்த கலவையான முகம். நடிப்பிலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நிறைவாக நடித்திருக்கிறார்.
நாயகனின் நண்பன் பரஞ்சோதியாக வரும் பாலசரவணன் ஆங்காங்கே நகைச்சுவை பொடிமாஸ் தூவி விட்டிருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக வரும் இமான் அண்ணாச்சி, அக்கா கீதாவாக வரும் வினோதினி வைத்தியநாதன், பாட்டி அபிதகுஜலாம்பாளாக வரும் வடிவுக்கரசி, மற்றும் மனோகராக வரும் ராதாரவி, ராதாகிருஷ்ணனாக வரும் நிழல்கள் ரவி, சிம்புவாக வரும் ரித்விக் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் டி.ஆர்.பாலா. அவர் எடுத்துக்கொண்டுள்ள கான்செப்ட் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து வெற்றிபெற்ற ‘பட்டணத்தில் பூதம்’, குட்டிச்சாத்தான்’ போன்ற படங்களை நினைவூட்டினாலும், அவற்றிலிருந்து வித்தியாசப்படுத்த திரைக்கதையில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸில் நல்ல ஜின்னும் கெட்ட ஜின்னும் மோதும் காட்சியை விஎஃப்எக்ஸ் மூலம் சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஜின்னின் முழு உருவத்தை, அதன் வெகுளித்தனமான குரலுக்கு ஏற்ப கொஞ்சம் அழகாக வடிவமைத்திருந்தால், படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்க முடியும்.
அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தமாக பயணித்திருக்கிறது.
’ஜின் தி பெட்’ – சுவையான கான்செப்ட்டுக்காகவே பார்த்து மகிழலாம்!
ரேட்டிங்: 2/5.