ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம்

நடிப்பு: தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா ஷெரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனீஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தானபாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா, யாசர் மற்றும் பலர்

இயக்கம்: பி.மணிவர்மன்

ஒளிப்பதிவு: கே.ஜி

படத்தொகுப்பு: எஸ்.குரு சூர்யா

இசை: சஞ்சய் மாணிக்கம்

தயாரிப்பு: ‘அமோகம் ஸ்டூடியோஸ் & ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ்’ கே.சுபாஷினி

தமிழ்நாடு ரிலீஸ்: ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல் நாசர்

நாயகன் தமனின் காதல் மனைவி மால்வி மல்ஹோத்ரா கர்ப்பமாக இருக்கிறார். முகத்தில் ரத்தம் வழியும் ஒரு சிறுமியும், அதே போன்ற முகத்துடன் அவளது தாயும் அமானுஷ்யமாக வந்து தன்னை உயரமான ஒரு கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளச் செய்வதாக மால்வி மல்ஹோத்ரா அடிக்கடி கெட்ட கனவு கண்டு அச்சத்தில் அலறுகிறார்.

அவரது காதல் கணவர் தமன் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்துடன், ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வைத்துக்கொண்டு, தயாரிப்பாளர் தேடி அலைகிறார். நிபந்தனைகள் விதிக்காமல் அவர் விரும்புகிற மாதிரி படம் எடுக்க அனுமதிக்கும் தயாரிப்பாளர் கிடைத்தபாடில்லை. அவரே தயாரிப்பாளரானால் தான் உண்டு என்ற நிலையில் அதற்குத் தேவையான பணம் அவரிடம் இல்லை.

தமன் – மால்வி மல்ஹோத்ரா தம்பதியரின் நண்பர்களாக மைத்ரேயா, அவரது காதலியான ரக்ஷா ஷெரின், மற்றும் சிவம், அருண் கார்த்தி ஆகியோர் இருக்கிறார்கள். ஆளுக்கொரு லட்சியத்துடன் இருக்கும் அவர்களும் அவற்றை நிறைவேற்ற பணம் தேவை என்ற நிலையில் இருக்கிறார்கள்.

மறுபுறம், ஆளுங்கட்சி அரசியல்வாதியான வேல ராமமூர்த்தி, தொகுதி மக்களுக்கு ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வைத்திருக்கும் 57 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை ரகசியமாக கைமாற்றும் பொறுப்பை தன் உதவியாளரான காளி வெங்கட்டிடம் ஒப்படைக்கிறார்.

அதே வேளை, உயிருக்கு ஆபத்தான நிலையில் காளி வெங்கட்டின் மகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அச்சிறுமியின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக மாற்று இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; அதற்கு 40 லட்சம் ரூபாய் தேவை என்ற நெருக்கடியில் இருக்கும் காளி வெங்கட், வேல ராமமூர்த்தியிடம் பண உதவி கேட்கிறார். வேல ராமமூர்த்தி உதவ முன்வராததோடு, காளி வெங்கட்டை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். இதனால் வேல ராமமூர்த்தியின் 57 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை காளி வெங்கட் கடத்தி, ரகசியமாக பதுக்கி வைத்து விடுகிறார்.

இது தெரிந்து ஆவேசம் கொள்ளும் வேல ராமமூர்த்தி, காளி வெங்கட்டைக் கொன்று, பணத்தை மீட்டு வருமாறு தனது அடியாட்களுக்கு உத்தரவிடுகிறார். இந்த அடியாட்களின் தாக்குதலில் காளி வெங்கட் மனைவி கொல்லப்பட, காளி வெங்கட் ரத்தக் காயங்களுடன் தப்பி ஓடுகிறார். ஒரு கட்டத்துக்கு மேல் ஓட முடியாமல் கீழே விழும் காளி வெங்கட், தற்செயலாக அங்கு வரும் தமன் மற்றும் அவரது நண்பர்களிடம், புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பாழடைந்த பழைய தொழிற்சாலைக்குள் 57 கோடி ரூபாயை பதுக்கி வைத்திருப்பதாகவும், அந்த பணத்தை எடுத்து, உயிருக்குப் போராடும் தனது மகளைக் காப்பாற்றும்படியும் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்.

தமன் – மால்வி மல்ஹோத்ரா தம்பதியரும் அவரது நண்பர்களும் இரவில் ஒரு காரில் பாழடைந்த அந்த பழைய தொழிற்சாலையை நோக்கி பயணப்படுகிறார்கள். அவர்கள், முன்பு தங்களுக்குள் செல்போனில் பேசியதை ‘கிராஸ் டாக்’கில் கேட்ட முனீஸ்காந்தும், யாசரும் அவர்களைப் பின்தொடர்கிறார்கள்.

அனைவரும் பாழடைந்த பழைய தொழிற்சாலைக்கு வந்து சேருகிறார்கள் அங்கு பேய் நடமாட்டம் இருப்பது தெரிகிறது. மால்வி மல்ஹோத்ரா தனது கனவில் பார்த்த பயங்கர அமானுஷ்ய உருவங்களை அங்கு நிஜத்தில் பார்த்து நடுங்குகிறார். பணம் எங்கே என்று தேடும் தமன், அங்கே சாத்தான் வழிபாட்டு முறைகளுக்கான தடயங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அப்போது அவரது நண்பர்கள் மர்மமான முறையில் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.

நண்பர்களை கொலை செய்வது யார்? அல்லது எது? இக்கொலை முயற்சியிலிருந்து தமனும், அவரது மனைவி மால்வி மல்ஹோத்ராவும் தப்பினார்களா? அங்குள்ள பேயின் தேவை என்ன? அந்த இடத்துக்கும் மால்வி மல்ஹோத்ராவின் பயங்கர கனவுக்கும் என்ன தொடர்பு? மறைத்து வைக்கப்பட்ட 57 கோடி ரூபாயை கண்டுபிடித்தார்களா? காளி வெங்கட்டின் மகளது உயிர் காப்பாற்றப்பட்டதா? என்பன போன்ற கேள்விகளுக்கு திடீர் திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் தமன், பேய் மற்றும் அமானுஷ்ய சமாச்சாரங்களுக்கு அஞ்சாத துணிச்சல்காரராக நடித்திருக்கிறார். அதற்கு நேர்மாறாக, அவரது காதல் மனைவியும் நாயகியுமான மால்வி மல்ஹோத்ரா, கனவில் வரும் உருவங்களைக் கூட பார்த்து அஞ்சி நடுங்கி அலறும் பயந்தாங்கொள்ளியாக நடித்திருக்கிறார். இவர்களது நண்பர்களாக வரும் மைத்ரேயா, அவரது காதலியான ரக்ஷா ஷெரின், மற்றும் சிவம், அருண் கார்த்தி ஆகியோர் கதை வளர உறுதுணைப் பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே குறை ஏதுமின்றி நிறைவாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆளுங்கட்சி அரசியல்வாதியாக வரும் வேல ராம்மூர்த்தி, அவரது உதவியாளராக வரும் காளி வெங்கட், பதுக்கி வைக்கப்பட்ட பணத்தைத் தேடிச் செல்லும் குழுவைப் பின்தொடரும் முனீஸ்காந்த், யாசர், மருத்துவ நிபுணராக வரும் தலைவாசல் விஜய், மற்றும் சந்தான பாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் மணிமாறன். ‘ஓமன்’ என்ற பிரபல ஹாலிவுட் படத்தை ‘ஜென்ம நட்சத்திரம்’ என்ற பெயரில் ரீ-மேக் செய்திருக்கும் இவர், ஒரிஜினலில் இருந்து மனம்போன போக்கில் மாற்றங்கள் செய்து கொடுத்திருக்கிறார். மேலும், கிரைம் ட்ராக்கையும், பேய் டிராக்கையும் தெளிவில்லாமல் இணைத்திருக்கிறார். விளைவாக, பார்வையாளர்களை அச்சத்தில் உறைய வைக்க வேண்டிய இந்த படம், அப்படிச் செய்யாமல், குழப்பத்தையும், சோர்வையும் ஏற்படுத்துவது ஏமாற்றம். மூளையைக் கசக்கி திரைக்கதையில் இன்னும் நிறைய உழைப்பைக் கொட்டியிருந்தால் மேற்கண்ட குறைகளைத் தவிர்த்திருக்கலாம்.

சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை, கே.ஜி.யின் ஒளிப்பதிவு, எஸ்.குரு சூர்யாவின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம்.

’ஜென்ம நட்சத்திரம்’ – பத்தல… பத்தல… பயமுறுத்துனது பத்தல…!

ரேட்டிங்: 2.5/5.