காந்தி கண்ணாடி – விமர்சனம்

நடிப்பு: பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, மதன், அமுதவாணன், நிகிலா, அபிலாஷ், ஜீவா, ரியா, மகாநதி சங்கர், முருகானந்தம், டிஎஸ்ஆர், ஆகாஷ், மார்ஷல், மனோஜ், ஆராத்யா, காம் சூரி, வசுந்தரா, ரமேஷ் கண்ணா, டாக்டர் வித்யா, ஆத்மன், எட்வின், அபிஷேக், நெமி, புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஷெரிஃப்

ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா

படத்தொகுப்பு: டி.சிவானந்தீஸ்வரன்

ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன்

இசை: விவேக் & மெர்வின்

தயாரிப்பு: ’ஆதிமூலம் கிரியேஷன்ஸ்’ ஜெய் கிரண்

பத்திரிகை தொடபு: ரேகா

’கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட பிரபலமான பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பார்வையாளர்களைக் குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த ‘எண்டர்டெயினர்’ பாலா, இந்த சிறுவயதில், இவ்வளவு குறைந்த வருமானத்தில், இவ்வளவு பெரிய வள்ளல் தன்மையா என்று மக்கள் வியக்கும் வகையில் உதவிகள் புரிந்து, ஏராளமானோரின் அன்பைப் பெற்றுள்ள ‘ரியல் ஹீரோ’ பாலா, முதன்முதலாக ‘ரீல் ஹீரோ’வாக – நாயக நடிகராக – அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் ‘காந்தி கண்ணாடி’. தற்போது திரைக்கு வந்திருக்கும் இத்திரைப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

“பணம் முக்கியம் இல்லை; அன்பு தான் முக்கியம்” என்று வாழும் அறுபது வயது பெரியவரையும், “பணம் தான் முக்கியம்; அன்பெல்லாம் அதற்குப் பிறகு தான்” என்று வாழும் இளைஞரையும் மையமாக வைத்து, காதல், காமெடி, எமோஷன், முரண் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கியிருப்பதே இந்த ’காந்தி கண்ணாடி’.

சென்னையில் செக்யூரிட்டியாகப் பணி புரியும் அறுபது வயது பெரியவர் காந்தி மகான் (பாலாஜி சக்திவேல்). ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்த இவர், இளவயதில் உயிருக்கு உயிராய் காதலித்த காதலி கண்ணம்மாவுக்காக தன்னுடைய செல்வம், செல்வாக்கு அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, காதலியுடன் ஊரைவிட்டு வெளியேறி, சாலையோரம் இருந்த சிறிய கோயில் முன் தாலி கட்டி கண்ணம்மாவை மனைவியாக்கிக் கொண்டு, சென்னை மாநகரம் வந்து, எளிமையான – ஆனால் மகிழ்ச்சியான – வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இந்த வயதிலும் தனது காதல் மனைவி கண்ணம்மா (அர்ச்சனா) மீது அளவு கடந்த அன்பைப் பொழிபவராக இருக்கிறார்.

அவரைப் போல காதல் மனைவி கண்ணம்மாவும் தன் கணவர் காந்தி மீது – பார்ப்பவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு – எல்லையற்ற அன்பை செலுத்தி வருகிறார். உதாரணமாக, கணவர் வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் போதெல்லாம், அவரது அழகு மீது பிற பெண்கள் கண் வைத்துவிடக் கூடாது என்பதற்காக, தினமும் சுத்திப்போட்டு, விடை கொடுத்து அனுப்புவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இத்தனை பாசமும் நேசமும் கொண்ட காந்தி – கண்ணம்மா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது மட்டும் தான் ஒரே குறை.

இந்நிலையில், அறுபது வயது பூர்த்தி செய்த ஓர் தம்பதி, இவ்வளவு நீண்ட காலம் வாழ்க்கைப் பயணத்தில் சேர்ந்து பயணித்திருக்கிறார்கள் என்பதை கொண்டாடுவதற்காக அவர்களது பிள்ளைகள் சேர்ந்து அவர்களுக்கு ‘அறுபதாம் கல்யாணம்’ செய்து வைக்கும் விழாவை நடத்துகிறார்கள். அழைப்பின் பேரில் இவ்விழாவில் காந்தி – கண்ணம்மா தம்பதியும் கலந்து கொள்கிறார்கள். அந்த விழாவின் பிரமாண்டத்திலும் கொண்டாட்டத்திலும் மனதைப் பறிகொடுக்கும் கண்ணம்மா, பேச்சு வாக்கில் தன் கணவரிடம், “நமக்கு குழந்தைகள் இருந்திருந்தா இப்ப நமக்கும் அறுபதாம் கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க, இல்லையா?” என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தி விடுகிறார்.

மனைவியின் ஏக்கத்தைப் புரிந்துகொள்ளும் காந்தி, கண்ணம்மாவின் ஆசையைப் பூர்த்தி செய்யும் வகையில் தங்களது அறுபதாம் கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என்று முடிவு செய்கிறார். இளவயதில் காதலிக்கும்போது தங்கள் திருமண விழா எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கண்ணம்மா கனவு கண்டார் என்பது இப்போது காந்திக்கு ஞாபகம் வருகிறது. ஊர் முழுக்க பந்தல் போடணும்; இரண்டாயிரம் பேரை அழைத்து கறிச்சோறு போடணும்; பொண்ணு – மாப்பிள்ளை ஊர்கோலம் போக குதிரை வண்டி வைக்கணும்; என் கழுத்துக்கு பதினைஞ்சு பவுனில் தங்கத் தாலி வாங்கணும்… என்றெல்லாம் அப்போது கனவு கண்டார். ஆனால், சூழ்நிலை காரணமாக ஊரைவிட்டு வெளியேறி, சாலையோரக் கோயில்முன் கண்ணம்மாவின் கழுத்தில் மஞ்சள் கயிறு தான் கட்ட முடிந்ததே தவிர அவர் ஆசைப்பட்ட மாதிரி தங்கள் திருமணம் பிரமாண்டமாக நடக்கவில்லை என்பதை நினைத்துப் பார்க்கும் காந்தி, அன்று தங்கள் திருமணம் எத்தனை பிரமாண்டமாக, கோலாகலமாக நடக்க வேண்டும் என்று கண்ணம்மா ஆசைப்பட்டாரோ, அதே போன்று பிரமாண்டமாக, கோலாகலமாக இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று உறுதியேற்கிறார்.

இதற்காக ‘ஈவண்ட் மேனேஜ்மெண்ட்’ எனப்படும் ‘விழா ஏற்பாடுகளைச் செய்யும்’ நிறுவனம் நடத்திவரும் இளைஞரான கதிரை (பாலா) சந்திக்கிறார் காந்தி. கதிரோ தன்னுடன் சேர்ந்து உழைக்கும் தன் காதலி கீதாவை (நமீதா கிருஷ்ணமூர்த்தி) காதலிக்கக் கூட நேரம் ஒதுக்க முடியாமல், பணம் தான் முக்கியம் என்று ஆலாய் பறந்து கொண்டிருப்பவர். அவர் காந்தியின் விருப்பங்கள் மற்றும் தன் சுயலாப பேராசைகள் ஆகியவற்றை எல்லாம் சேர்த்து கணக்குப் போட்டுப் பார்த்து, 52 லட்சம் ரூபாய் கொடுத்தால் காந்தி – கண்ணம்மா அறுபதாம் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தி விடலாம் என்கிறார்.

இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது என்று குழம்பும் செக்யூரிட்டியான காந்தி, தானொரு ஜமீன்தார் மகன் என்ற ஞாபகம் வர, ஊரைவிட்டு வெளியேறி வந்ததிலிருந்து தனது பழைய டிரங்க் பெட்டியில் தூங்கிக்கொண்டிருக்கும் சொத்துப்பத்திரத்தைத் தேடி எடுத்துக் கொண்டு, துணைக்கு கதிரை அழைத்துக்கொண்டு போய், தனது சொத்தை விற்று, போதுமான பணத்தைத் தேற்றிக்கொண்டு வந்து, ‘அப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகையில், இந்தியப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி “ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கிறார். காந்தி வசமுள்ள மொத்தப் பணமும் இனி செல்லாது என்பதால், அவரும் கதிரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

அதன்பிறகு என்ன நடந்தது? மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அவர்களை எப்படியெல்லாம் பாடாய் படுத்தியது? செல்லாத ரூபாய் நோட்டுகளை அவர்கள் என்ன செய்தார்கள்? காந்தி – கண்ணம்மா அறுபதாம் கல்யாணம் திட்டமிட்டபடி நடந்ததா? அவர்களது அன்பான காதல் வாழ்க்கை கதிரிடம் எத்தகைய மனமாற்றத்தை ஏற்படுத்தியது? என்பன போன்ற கேள்விகளுக்கு கொஞ்சம் காமெடியாகவும், நிறைய எமோஷனாகவும் விடை அளிக்கிறது ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, ‘ஈவண்ட் மேனேஜர்’ கதிராக பாலா நடித்திருக்கிறார். அவருக்கு ஹீரோவாக இது நல்ல அறிமுகம். காதல், காமெடி, ஆக்சன், நடனம், எமோஷன் என பல வகை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரம். தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை வீணடிக்காமல் சிக்கென பற்றிக்கொண்டு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். உருவக் கேலி மற்றும் தனிமனித தாக்குதல் சார்ந்த கவுண்ட்டர் வசனங்கள் போன்ற அருவருப்பான சமாச்சாரங்களைத் தவிர்த்துவிட்டு, தரமான திரைக்கதைகளையும், சிறந்த இயக்குநர்களையும் தேர்வு செய்து நடித்தால், அவர் ஆசைப்படும் உயரத்தை எதிர்காலத்தில் நிச்சயம் அடைவார் என்று உறுதியாகக் கூறலாம்.

நாயகனோடு சேர்ந்து உழைக்கும் அவரது காதலி கீதாவாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார். படம் முழுக்க வந்தாலும், அவர் நடிக்க வாய்ப்புள்ள காட்சிகள் குறைவு தான். என்றாலும், கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார். குறிப்பாக தன் காதலனின் கவனிப்புக்கும், அக்கறைக்கும் ஏங்கும் காட்சிகளில் உருக்கமாக நடித்து பார்வையாளர்களின் உள்ளங்களில் இடம் பிடித்துவிடுகிறார்.

செக்யூரிட்டி காந்தி மகானாக இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார். ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், காதலுக்காக செல்வம், செல்வாக்கு அனைத்தையும் துறந்து, காதல் மனைவியோடு எளிய, இனிய வாழ்க்கை நடத்தும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக தன்னைப் பொருத்திக்கொண்டு அருமையாக நடித்திருக்கிறார். அவரது காதல் மனைவி கண்ணம்மாவாக வரும் அர்ச்சனா, எள்ளளவு அன்பும் குறையாத, யதார்த்தமான, எமோஷனல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இறுதிக்காட்சிக்கு அர்ச்சனாவின் நடிப்பு வலு சேர்க்கிறது.

மதனாக வரும் மதன், சுந்தரமாக வரும் அமுதவாணன், கலையாக வரும் நிகிலா, மற்றும் அபிலாஷ், ஜீவா, ரியா, மகாநதி சங்கர், முருகானந்தம், டிஎஸ்ஆர், ஆகாஷ், மார்ஷல், மனோஜ், ஆராத்யா, காம் சூரி, வசுந்தரா, ரமேஷ் கண்ணா, டாக்டர் வித்யா, ஆத்மன், எட்வின், அபிஷேக், நெமி, புதுப்பேட்டை சுரேஷ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஷெரிஃப். அவரது முதல் படமான ‘ரணம்: அறம் தவறேல்’ கதைக்களத்திலிருந்து முற்றிலும் வேறான கதைக்களத்தில் இப்படக்கதையை அமைத்திருக்கிறார். உண்மையான காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை பாலாஜி சக்திவேல், அர்ச்சனா ஆகியோரின் முதுவயது காதலை வைத்து அழகாக சித்தரித்திருக்கிறார். அன்பை விட பணம் தான் முக்கியம் என்று ஓடியலையும் இளம்தலைமுறையை இடித்துரைக்கும் அதே வேளை, அவர்கள் ஏன் அப்படி இருக்க வேண்டியுள்ளது என்பதையும் நியாயமாகவே சுட்டிக் காட்டியிருக்கிறார். ஒன்றிய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரபலங்கள் அனைவரும் கொண்டாட, சாமானிய மக்கள் அதனால் எப்படியெல்லாம் இன்னல் அனுபவித்தார்கள் என்பதை துணிச்சலோடு சொல்லியிருக்கும் இயக்குநருக்கு நம் பாராட்டுகள். குறை என்னவென்றால், அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்கிற விதமாகவே காட்சிகள் வருவது சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. இதை தவிர்த்திருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

விவேக் – மெர்வின் இசையில், ”திமிருக்காரி…” பாடல் ஓகே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு பலத்தைக் கூட்டியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜாவின் உழைப்பில் காட்சிகள் தெளிந்த நீரோடை போல் இயல்பாக இருக்கின்றன.

’காந்தி கண்ணாடி’ – அனைவரும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய படம்!

ரேட்டிங்: 3.5/5.