லெவன் – விமர்சனம்

நடிப்பு: நவீன் சந்திரா, அபிராமி, திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், ஷஷாங், அர்ஜய் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: லோகேஷ் அஜில்ஸ்
ஒளிப்பதிவு: கார்த்திக் அசோகன்
படத்தொகுப்பு: ஸ்ரீகாந்த்.என்.பி
இசை: டி.இமான்
தயாரிப்பு: ’ஏஆர் எண்டர்டெயின்மெண்ட்’ அஜ்மல் கான் & ரேயா ஹரி
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
மர்மமான ‘சீரியல் கில்லர்’ பற்றி துப்புத் துலக்கி, கொடூரமான உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் ’சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர்’ ஜானர் கதை இது. கதை சென்னை மாநகரில் நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆங்காங்கே சமவயதிலான இளம் ஆண்களும் பெண்களும் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்படுகிறார்கள். அதேசமயம் சில நிதி நிறுவனங்களைக் குறிவைத்து ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. மாநகர மக்களைப் பதற வைக்கும் இக்குற்றச் சம்பவங்களால் டென்ஷன் ஆகும் போலீஸ் கமிஷனர் ஆடுகளம் நரேன், ’சீரியல் கில்லர்’ பற்றி விசாரிக்கும் பொறுப்பை அசிஸ்டண்ட் கமிஷனர் ஷஷாங்கிடமும், கொள்ளைக் கும்பல் பற்றி விசாரிக்கும் பொறுப்பை அசிஸ்டண்ட் கமிஷனர் நவீன் சந்திராவிடமும் ஒப்படைக்கிறார்.
சீரியல் கில்லர் ‘சைக்கோ கொலையாளி’யாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையில் இறங்கும் அசிஸ்டண்ட் கமிஷனர் ஷஷாங், பயங்கர சாலைவிபத்து ஒன்றில் சிக்கி, படுகாயம் அடைந்து, கோமாவில் விழுந்து, படுத்த படுக்கையாகி விடுகிறார். இதனால் அவர் விசாரித்துவந்த ’சீரியல் கில்லர்’ வழக்கை, கொள்ளைக் கும்பல் பற்றி விசாரிக்கும் அசிஸ்டண்ட் கமிஷனர் நவீன் சந்திராவிடமே கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கிறார் கமிஷனர் ஆடுகளம் நரேன். இவ்வழக்குகளில் நவீன் சந்திராவுக்கு உதவுவதற்காக சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் நியமிக்கப்படுகிறார்.
வழக்கு விசாரணையின்போது, எதிர்பாராத பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நவீன் சந்திராவுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக, கொல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டவர்கள் எல்லாமே இரட்டையராக (ட்வின்ஸாக) பிறந்தவர்களில் ஒருவர் என்பதும், அவருடன் பிறந்த மற்றொருவரே நிர்பந்தத்தின் காரணமாக தன் உடன்பிறப்பைக் கொன்றிருக்கிறார் என்பதும், எல்லாக் கொலைகளும் இவ்விதமே நடந்திருக்கின்றன என்பதும் தெரிய வருகிறது.
தொடர் கொலைகளுக்குக் காரணமான அந்த சீரியல் கில்லர் யார்? அவன் ஏன் இரட்டையராக பிறந்தவர்களைத் தேர்வு செய்து, அவர்களில் ஒருவரை நிர்ப்பந்தித்து, உடன்பிறப்பை அவரது கையாலேயே கொல்ல வைக்கிறான்? இதன் பின்னணி என்ன? சீரியல் கில்லரை அசிஸ்டண்ட் கமிஷனர் நவீன் சந்திரா கண்டுபிடித்தாரா, இல்லையா? அவனை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தினாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘லெவன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, போலீஸ் அசிஸ்டண்ட் கமிஷனராக நவீன் சந்திரா நடித்திருக்கிறார். சீரியஸான மனநிலையை வெளிப்படுத்தும் இறுக்கமான முகம், போலீஸ் அதிகாரிக்கு உரிய விறைப்பான நடை, கொலைகளையும், அவற்றுக்கான பின்னணியையும் ஆராய்வதில் முழு கவனம் ஆகியவற்றுடன் தன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் செய்திருக்கிறார். கொலையாளியை கண்டுபிடிக்கும் காட்சியில் பார்வையாளர்களுக்கு உச்சபட்ச திரில் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்.
வழக்கு விசாரணையின்போது நவீன் சந்திராவுக்கு உறுதுணையாக இருந்து, காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் திலீபன் கவனம் ஈர்க்கிறார்.
‘ட்வின்ஸ் பேர்டு’ பள்ளியின் நிர்வாகியாக அபிராமி நடித்திருக்கிறார். அன்பும், கருணையும் சேர்ந்த கதாபாத்திரத்தில் சிறப்பான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், ஷஷாங், அர்ஜய் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான நடிப்பை பொறுப்புடன் வழங்கியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ். படத்தின் முதல் பாதியில், கொலை செய்யப்படும் நபர்கள் யார்? எப்படி கொலை செய்யப்படுகிறார்கள்? என்ற கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழுப்பி பயணிக்க வைப்பவர், இரண்டாம் பாதியில் கொலையாளி யார்? எதற்காக கொலை செய்கிறான்? என்ற எதிர்பார்ப்போடு பயணிக்க வைத்திருக்கிறார். யாராலும் யூகிக்க முடியாத புதுமையான அம்சங்களை உள்ளடக்கி, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான படமாக இதைக் கொடுத்திருக்கிறார். அதிலும், கொலையாளி யார் என்பதை வெளிப்படுத்தும்போது, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி மூச்சடைக்கச் செய்திருக்கிறார். படத்துக்கு மிகப்பொருத்தமாகவே ‘லெவன்’ என்ற தலைப்பை வைத்திருக்கிறார். பாராட்டுகள்.
டி.இமானின் இசை, கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த்.என்.பி-யின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் படத்தின் தரத்துக்கும், நேர்த்திக்கும் பக்கபலமாக இருந்துள்ளன.
’லெவன்’ – புதுமையான, சுவாரஸ்யமான, புத்திசாலித்தனமான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர்!
ரேட்டிங்: 4/5.