டியூட் – விமர்சனம்

நடிப்பு: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, ஹிருது ஹாரூன், பரிதாபங்கள் திராவிட் செல்வம், நேஹா ஷெட்டி, சத்யா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: கீர்த்தீஸ்வரன்

ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி

படத்தொகுப்பு: பரத் விக்ரமன்

இசை: சாய் அபயங்கர்

தயாரிப்பு: ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நவீன் யெர்னேனி & ஒய்.ரவிசங்கர்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

தமிழ் திரைத்துறையில் அதிசய நிகழ்வுகள் அபூர்வமாகத் தான் நிகழும். அத்தகைய அதிசய நிகழ்வுகளில் ஒன்று தான் பிரதீப் ரங்கநாதனின் திரைத்துறை பிரவேசம். ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் ’வெற்றிப்பட அறிமுக இயக்குநர்’ என்ற பெயர் பெற்ற பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய இரண்டே படங்களில் நாயகனாக நடித்து, இளம் தலைமுறை ரசிகர்களை ஏகபோகமாகக் கவர்ந்திழுக்கும் தனது தனித்துவமான அபார நடிப்பு மூலம் வெற்றிகளைக் குவித்து, சினிமா மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் உள்ள முன்னணி நாயகனாகவும், மிகப்பெரிய ‘வசூல் மன்னன்’ ஆகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அவரது ‘டியூட்’ திரைப்படம், இத்தீபாவளியை முன்னிட்டு தற்போது திரைக்கு வந்திருக்கிறது. பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் மூன்றாவதாக உருவாகி வெளிவந்திருக்கும் இந்த ‘டியூட்’ திரைப்படம், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, ஹாட்ரிக் வெற்றியை அவருக்கு பரிசாகக் கொடுக்குமா? பார்க்கலாம்…

சென்னையில் பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கக்கூடிய ஜாலியான நிகழ்ச்சிகளை நடத்தும் ‘ஈவண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் நாயகன் அகன் (பிரதீப் ரங்கநாதன்). காதல் தோல்வியால் தவிக்கும் அவர், தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்குப் போய், மேடையேறி முன்னாள் காதலியைச் சந்தித்து, “உன் கல்யாணத்தைத் தடுக்க நான் இங்கே வரலே. என் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போ. நீ எதுக்காக நம் காதலை பிரேக்-அப் பண்ணினே?” என்று ஆக்ரோஷமாகக் கேட்க, அருகிலிருந்த மணமகன் டென்ஷனாகி அகனுடன் தகராறு செய்ய, கைகலப்பாகி, கல்யாண மண்டபமே களேபரம் ஆகிறது. விழாவுக்கு வந்திருந்த மொத்த ஆட்களும் விரட்டி விரட்டி வெளுக்க, தப்பி ஓடுகிறார் அகன்.

அகனின் தாய்மாமாவும், பால்வளத்துறை அமைச்சருமான அதியமான் அழகப்பனின் (சரத்குமார்) மகளான நாயகி குறளரசி (மமிதா பைஜு), அகனை ஆறுதல்படுத்தி தேற்றுவதோடு, அவர் மீதான தனது காதலையும் ப்ரொப்போஸ் செய்கிறார். ஆனால், குறளரசியின் காதலை நிகாகரிக்கும் அகன், “சிறுவயசுல இருந்து நான் ஃபிரண்டா தான் உன்னோட பழகுறேன். உன்மேல எனக்கு ஜீரோ பிரசண்ட் தான் காதல்” என்று சொல்ல, மனமுடையும் குறளரசி மேற்படிப்புக்காக பெங்களூரு சென்றுவிடுகிறார்.

குறளரசியைப் பிரிந்தபிறகு அவரை அதிகம் மிஸ் பண்ணுவதாக உணர ஆரம்பிக்கிறார் அகன். நாளடைவில் அவருக்கு குறளரசி மீது காதல் ஏற்படுகிறது. இது குறித்து தனது தாய்மாமாவும் அமைச்சருமான அதியமான் அழகப்பனிடம் கூறுகிறார். இந்த நற்செய்திக்காகவே காத்திருந்த அமைச்சர் அதியமான், உடனடியாக தடபுடலாக அகன் – குறளரசி கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கிவிடுகிறார்.

படிப்பு முடிந்து குறளரசி திரும்பி வந்ததும், திருமண விழா நடைபெறுகிறது. அமைச்சரின் இல்லத் திருமண விழா என்பதால் இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பிரபலங்கள் வருகை புரிந்திருக்கிறார்கள். இப்போது மணமேடையில் நின்றுகொண்டிருக்கும்போது, மணமகன் அகனின் காதுகளில் மணமகள் குறளரசி வெடிகுண்டு போன்ற ஒரு தகவலைத் தூக்கி ரகசியமாக வீசுகிறார். “இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்ல. படிக்கப்போன இடத்தில் எனக்கும் வேறொருவருக்கும் (ஹிருது ஹாரூன்) காதல். சாதிவெறி பிடித்த என் அப்பா எங்களை சேத்து வைக்க மாட்டார். விஷயம் தெரிஞ்சாலே எங்களை ஆணவக்கொலை செஞ்சிருவாரு. அதனால் தான் அவர் சொன்ன உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன். நம்ம கல்யாணத்துக்குப் பிறகு, யாருக்கும் தெரியாம நீ தான் என்னை என் லவ்வரோடு சேர்த்து வைக்கணும்” என்று சொல்ல, விவரிக்க வார்த்தைகள் இல்லாத அளவுக்கு அதிச்சி அடைகிறார் அகன்.

அதன்பிறகு என்ன நடந்தது? அகன் என்ன செய்தார்? அகன் – குறளரசி திருமணம் நடந்தா? அல்லது நிறுத்தப்பட்டதா? தொடர்ந்து எழுந்த சிக்கல்கள் என்ன? இறுதியில் ஏற்பட்ட தீர்வுகள் என்ன?” என்பன போன்ற கேள்விகளுக்கான பதிலை நிறைய காமெடியாகவும், கொஞ்சம் எமோஷனலாகவும் சுவாரஸ்யமாகக் கூறுகிறது ‘டியூட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் அகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். வழக்கமான ஹீரோ கதாபாத்திரம் போல் இல்லாமல், அவருக்காகவே வித்தியாசமாக செதுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு அட்டகாசமாக தனது தனித்தன்மையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரம்ப காட்சியில் அவர் இழுத்த இழுப்பில் முன்னாள் காதலியின் கழுத்திலிருந்த புதுத்தாலி கையோடு வந்துவிட, “தாலியை இறுக்கமா கட்டக் கூடாதா ப்ரோ” என்று மணமகனிடம் நக்கலாகக் கேட்டு கலகலப்பூட்டுகிறார் பாருங்கள்… அப்போது தொடங்கும் அத்தகைய கலகலப்பு, படம் முழுக்க நிரவிக் கிடந்து பார்வையாளர்களை குதூகலிக்கச் செய்கிறது. மொபைல் போனை கரகரவென சுழற்றி வீசிப் பிடிப்பது, கைவிரல்களால் கணீரென சொடக்குப் போடுவது உள்ளிட்ட அவரது மேனரிச சேட்டைகள் இளைய தலைமுறையினர் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. கையாளுவதற்கு கஷ்டமான சில சிக்கலான காட்சிகளையும், எமோஷனல் காட்சிகளையும் கூட மிக எளிதாகக் கையாண்டு தெறிக்க விட்டிருக்கிறார். இதுவரை பிரதீப் ரங்கநாதனைப் பிடிக்காதவர்கள் கூட இந்த படத்தைப் பார்த்தால் அவரது ரசிகர்கள் ஆகிவிடுவார்கள் என்பது நிச்சயம். பாராட்டுகள் பிரதீப் ரங்கநாதன்!

நாயகியாக, நாயகனின் தாய்மாமா மகள் குறளரசியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். கதையில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் அருமையான தனது கதாபாத்திரத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, நாயகனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நிறைவாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் தாய்மாமாவாக, நாயகியின் அப்பாவாக, பால்வளத்துறை அமைச்சர் அதியமான் அழகப்பனாக சரத்குமார் நடித்திருக்கிறார். சாதிவெறியில் ஆணவக் கொலை செய்யத் தயங்காத வில்லனாகவும், பேரக்குழந்தைக்கு தன் தந்தை மாடசாமியின் பெயர் சூட்டி கொஞ்சும்போது குழந்தையாகவும் பல பரிமாணங்களில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியின் பெங்களூரு காதலராக ஹிருது ஹாரூன் நடித்திருக்கிறார். நிறைய வசனம் பேசாமல், சின்னச் சின்ன க்யூட் ரியாக்‌ஷன்கள் மூலம் தனது கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளார்.

நாயகனின் அம்மாவாக வரும் ரோகிணி, மற்றும் பரிதாபங்கள் திராவிட் செல்வம், நேஹா ஷெட்டி, சத்யா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தை கலக்கலான காமெடியும், உள்ளத்தைத் தொடும் எமோஷனும் கலந்து எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன். அவர் இதை சுவாரஸ்யமாகவும், ரசிக்கும்படி ஜனரஞ்சகமாகவும் கொண்டு சென்றிருப்பதைப் பார்த்தால், புதுமுக இயக்குநர் போல் தெரியவில்லை. பழுத்த அனுபவம் உள்ள இயக்குநர் போல் புகுந்து விளையாடியிருக்கிறார். இளம் தலைமுறையினரின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்தவராகவும், திரைப்பட வெற்றிக்கான கமர்ஷியல் அம்சங்களை நன்கு அறிந்தவராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், வெறும் கேளிக்கையாளராக மட்டும் இல்லாமல், தனது சமூகப் பொறுப்புணர்வை போகிற போக்கில் ஆங்காங்கே வெளிப்படுத்தியிருக்கிறார். உதாரணமாக, சாதிவெறிக்கும், ஆணவக்கொலைக்கும் எதிராக நாயகன் மூலம் அவர் பேசியிருக்கும் வசனங்கள் சம்மட்டி அடி. பாராட்டுகள் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்! தொடர்ந்து இதுபோன்ற வெற்றிப்படங்களை வழங்க வாழ்த்துகள்!

சாய் அபயங்கரின் இசையில் ”ஊரும் ப்ளட்…”, “சிங்காரி…” ஆகிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஏற்கெனவே ஹிட். அவரது பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு, பரத் விக்ரமனின் படத்தொகுப்பு உள்ளிட்ட ஏனைய தொழில்நுட்பங்கள் ஒரு கமர்ஷியல் வெற்றிப் படத்துக்கான தரத்தையும், நேர்த்தியையும் வழங்கியிருக்கின்றன.

’டியூட்’ – பண்டிகை விடுமுறைக்கு உகந்த செம ஜாலியான படம்! குடும்பத்தோடு போய் பார்த்து, ரசித்து, தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடுங்க!

ரேட்டிங்: 4.25/5