“தம்பிகளின் பொறுப்பற்ற வார்த்தைகளால் காயம் அடைகிறேன்”: சீமான் வேதனை!

சமூகவலைத் தளங்களில் இயங்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது முகநூல் பக்கத்தில் வேதனையுடன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அது வருமாறு:

இணையத்தில் இயங்கும் என் ஆற்றல் மிகு தம்பிகளுக்கு…

படித்து ருசித்ததைப் பகிருங்கள்..
கண்டு ரசித்ததை எழுதுங்கள்..
அழகுக்கவிதை ஒன்றை வடியுங்கள்..
அநீதிகளுக்கு எதிராகக் கட்டுரைகளைத் தீட்டுங்கள்..

உங்கள் தனித்திறமையைக் காட்டுங்கள்.

இவை ஏதும் இல்லையேல்..

தினம் ஒரு திருக்குறள் பகிருங்கள்..
தினம் ஒரு பாரதிதாசன் கவிதை பகிருங்கள்..
கட்சியின் செய்திகளைப் பரப்புங்கள்..
நானும் நம் தம்பிகளும் பேசிய காணொளிகளைப் பகிருங்கள்..

அதுவும் செய்யப் பிடிக்கவில்லையா..

அமைதியாகக் கடந்துசெல்லுங்கள்.. எல்லாவற்றிற்கும் கருத்துச் சொல்லவேண்டும்.. நம்மை நோக்கி வரும் எல்லா விமர்சனத்திற்கும் பதில் சொல்லவேண்டும் என்ற உந்துதலிலிருந்து விடுபடுங்கள்.. நிதானித்துக் கவனியுங்கள் அப்பொழுதுதான் நாம் கவனிக்க மறந்த பல விசயங்கள் புரியும் புலப்படும்.. களத்தில் இறங்கி கட்சியைப் பலப்படுத்தும் வேலையைச் செய்யுங்கள்.. உள்ளாட்சித் தேர்தலுக்கான திட்டமிடலை இப்பொழுதே தொடங்குங்கள்..

கருத்தை எழுதும் முன் இது யாருக்கு எதிரானது.. யாரை பாதிக்கும்.. என்று அறிந்து எழுதுங்கள்.. பல நேரம் நீங்கள் கருத்திடுவது எதிராளியைப்  பாதிக்கிறதோ இல்லைவோ.. என்னை வெகுவாகப் பாதிக்கிறது.. உங்கள் கருத்து என் கருத்தாகப் பார்க்கப்படுகிறது.. நான் அதற்குப் பொறுப்பாளனாகிறேன்.. பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.. நான் இதுவரை மேடையில் ஒருமுறை கூட உச்சரிக்காத வந்தேறி என்ற வார்த்தை நான் சொன்ன வார்த்தையாகப் பல்வேறு இடங்களில் பார்க்கப்படுகிறது.. இதுவரை நான் எங்கும் செய்யாத பெரியார் விமர்சனம் என் மீதான குற்றச்சாட்டாக வீசப்படுகிறது..

தம்பிகளின் தன்னலமில்லா உழைப்பைக் கண்டு எந்த அளவிற்கு உள்ளம் மகிழ்கிறேனோ அதே அளவிற்குத் தம்பிகளின் பொறுப்பற்ற வார்த்தைகளால் இந்த அண்ணன் காயமும் படுகிறேன் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்..

கட்சி மக்களிடம் சென்றடைவதற்கு இணையவெளியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி பாலம் அமையுங்கள்..

– உரிமையாடும் அன்போடும்..
உங்கள் அண்ணன்,
சீமான்