ரெட்ட தல – விமர்சனம்
நடிப்பு: அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரீஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ், ’கும்கி’ அஸ்வின் மற்றும் பலர்
இயக்கம்: கிரிஷ் திருக்குமரன்
தயாரிப்பு: ’பிடிஜி யுனிவர்சல்’ பாபி பாலச்சந்திரன்
இசை: சாம் சிஎஸ்
ஒளிப்பதிவு: டிஜோ டாமி
படத்தொகுப்பு: அந்தோணி
கலை: அருண்சங்கர் துரை
நடன அமைப்பு: சுரேன் ஆர், பாபி ஆண்டனி
சண்டை அமைப்பு: பி.சி ஸ்டண்ட்ஸ்
பத்திரிகை தொடர்பு: எய்ம் சதீஷ், சிவா
தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்கள் கூட்டத்தையும் வைத்திருக்கும் நட்சத்திர நடிகர் அருண் விஜய். அவர் 2019ஆம் ஆண்டு இரட்டை வேடத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த ‘தடம்’ திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. அதுபோல் அவர் மீண்டும் இரட்டை வேடத்தில் ‘மான் கராத்தே’ படத்தின் இயக்குநர் கிரிஷ் திருமுருகன் இயக்கத்தில் நடித்து, தற்போது திரைக்கு வந்துள்ள ‘ரெட்ட தல’ திரைப்படம் மெகா ஹிட் அடிக்குமா? பார்க்கலாம்…
சிறு வயதில் ஆதரவற்ற நிலையில் சந்தித்துக்கொண்ட நாயகன் காளி (ஒரு அருண் விஜய்), நாயகி ஆந்த்ரே (சித்தி இத்னானி) ஆகிய இருவரும் நட்பாகப் பழகி, வளர்ந்து, காதலர்கள் ஆகிறார்கள். வேலை நிமித்தம் வெளியூர் செல்லும் காளி, சில வருட இடைவெளிக்குப் பிறகு தனது காதலி ஆந்த்ரேயை சந்திக்க புதுச்சேரி வருகிறார். மாடலிங் செய்யும் ஆசை மற்றும் பணத்தின் மீது பேராசை கொண்ட பெண்மணியாக மாறி, அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆந்த்ரே, காளியின் திருமண விருப்பத்தை நிராகரிக்கிறார்.
பெரிய பணக்காரராக இருந்தால் மட்டுமே தன் காதலி ஆந்த்ரேயை கரம் பிடிக்க இயலும் என்பதை புரிந்துகொள்ளும் காளி, தன்னைப் போலவே அச்சு அசலான உருவம் கொண்ட பெரிய கோடீஸ்வரரான உபேந்திராவை (இன்னொரு அருண் விஜய்) தற்செயலாக சந்திக்கிறார். இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். கோவாவைச் சேர்ந்த உபேந்திரா, இரண்டு வாரங்கள் புதுச்சேரியில் தங்குவதற்காக தனியொரு பங்களாவையே விலைக்கு வாங்கியிருக்கிறார் என்கிற அளவுக்கு பெரும் செல்வந்தராக இருக்கிறார். “உன்னைப் போலவே இருக்கும் உபேந்திராவை கொன்றுவிட்டு, நீ தான் உபேந்திரா என்று அவர் இடத்துக்கு நீ வந்தால், அவருடைய பணத்தைக் கொண்டு நாம் இருவருமே ஆடம்பரமாக வாழலாம்” என்று ஆந்த்ரே தூண்டிவிட, அதை ஏற்கும் காளி, உபேந்திராவைக் கொலை செய்து கோடீஸ்வரர் ஆகிறார்.
ஆனால், கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரர் உபேந்திரா, பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்த கொலைக் குற்றவாளி என்பதும், கோவாவில் அவர் பெரிய டான் என்பதும், அவரைக் கொல்ல ஒரு கும்பல் வெறியுடன் தேடி அலைகிறது என்பதும் தெரிய வர, காளியும், ஆந்த்ரேயும் அதிர்ந்து போகிறார்கள்.
தாங்களே தேடிச்சென்று வலிய சிக்கிக் கொண்ட இந்த பிரச்சனை காளியையும், ஆந்த்ரேவையும் என்னவெல்லாம் செய்தது? அவற்றை எதிர்கொள்ள இருவரும் எடுக்கும் அடுத்தடுத்த முடிவுகள் என்ன? இறுதியில் இப்பிரச்சனையிலிருந்து இருவரும் தப்பித்தார்களா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிரடி ஆக்சனுடன் விடை அளிக்கிறது ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் மீதிக்கதை.

காளி, உபேந்திரா ஆகிய இரட்டை வேடங்களில் அருண் விஜய் அட்டகாசமாக நடித்திருக்கிறார். வழக்கம் போல் ஆக்சன் அவதாரத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு, மேனரிசம் ஆகியவற்றில் தனி முத்திரை பதித்துள்ளார்.
பணத்தின் மீது பேராசை கொண்ட ஆந்த்ரே கதாபாத்திரத்தில் சித்தி இத்னானி நடித்திருக்கிறார். அழகாலும்,பேச்சாலும், நடிப்பாலும் வசீகரிக்கிறார். அவரது கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாகவும், தெளிவாகவும் வடிவமைத்திருக்கலாம்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய், வழக்கம் போல் பழங்காலத்து வில்லன் அசோகன் பாணியில் நடித்து இந்தப்படத்திலும் கடுப்பேற்றுகிறார்.
வில்லனின் கும்பலில் வரும் தான்யா ரவிச்சந்திரனை முறையாகப் பயன்படுத்தாமல் வீணடித்திருக்கிறார்கள்.
ஹரீஷ் பெராடி, யோகி சாமி, பாலாஜி முருகதாஸ், ’கும்கி’ அஸ்வின் உள்ளிட்ட ஏனையோர் தத்தமது கதாபாத்திரத்துகுத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். இரட்டை வேடம், கதாநாயகியின் பணத்தாசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் என சுவாரஸ்யமான கதைக்குரிய அம்சங்களை வைத்து பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். இந்த சுவாரஸ்யப் புள்ளிகளை வைத்து அடுத்தடுத்து கட்டமைக்கப்பட வேண்டிய பரபர தருணங்கள் திரைக்கதை பக்கங்களில் காணாமல் போனதுதான் பெருத்த ஏமாற்றம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி, வழக்கமான சினிமாத்தனமான காட்சிகளையும், லாஜிக் மீறல்களையும் குறைத்து பட்டை தீட்டியிருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
புதுச்சேரி மற்றும் கோவாவின் இரவு நேரக்காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி கடுமையாக உழைத்து பிரமிப்பூட்டி இருக்கிறார்.
சாம் சி.எஸ் இசையில் தனுஷ் பாடிய ”கண்ணம்மா” பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஆங்காங்கே காதுஜவ்வுகளைக் கிழிக்கும் அளவுக்கு ஒரே இரைச்சல்மயம்.
ஆண்டனியின் படத்தொகுப்பும், பி.சி ஸ்டண்ட்ஸின் சண்டை அமைப்பும் சிறப்பு.
‘ரெட்ட தல’ – அருண் விஜய்யின் நடிப்புக்காகவும், தொழில்நுட்ப நேர்த்திக்காகவும், அதிரடி ஆக்சன் காட்சிகளுக்காகவும் பார்க்கலாம்.
ரேட்டிங்: 3/5.
