வட்டக்கானல் – விமர்சனம்

நடிப்பு: துருவன் மனோ, மீனாட்சி கோவிந்த், ஆர்.கே.சுரேஷ், வித்யா பிரதீப், விஜய் டிவி சரத், கபாலி விஸ்வநாத், முருகானந்தம், பாத்திமா பாபு மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: பித்தாக் புகழேந்தி

ஒளிப்பதிவு: எம்.ஏ.ஆனந்த்

இசை: மாரிஸ் விஜய்

தயாரிப்பு: எம்பிஆர் பிலிம்ஸ், ஸ்கைலைன் சினிமாஸ் – ஏ.மதியழகன், வீரம்மாள், ஆர்.எம்.ராஜேஷ்

கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் என்ற பகுதியில் போதை காளான் அதிகம் விளைகிறது. அதை வைத்து வியாபாரம் செய்யும் ஆர்.கே.சுரேஷ், அப்பகுதியில் காளான் அதிகம் விளையும் 200 ஏக்கர் நிலத்தை அடைய நினைக்கிறார். அந்த நிலத்தின் உரிமையாளரான நாயகி மீனாட்சி கோவிந்த், அந்த நிலத்தை தனது எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு செய்கிறார்.

இதற்கிடையே, ஆர்.கே.சுரேஷின் வளர்ப்பு மகனான நாயகன் துருவன் மனோவுக்கும், மீனாட்சி கோவிந்தும் இடையே காதல் மலர்கிறது. தன் மகன் காதலிக்கும் பெண் என்றாலும், நிலத்திற்காக மீனாட்சி கோவிந்தை ஆர்.கே.சுரேஷ் மிரட்டுவதோடு, நிலத்தை கைப்பற்ற பல்வேறு சதிவேலைகளிலும் ஈடுபடுகிறார். இதனால், யார் யாருக்கு எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதே படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் துருவன் மனோ முதல் படம் போல் அல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டவர் கதை தேர்விலும், கதாபாத்திர தேர்விலும் கவனம் செலுத்தினால் நிச்சயம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கலாம்.

நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்த், அழகாக இருக்கிறார். அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலமாக வலம் வருகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் வழக்கம் போல் தனது மிரட்டலான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வினோதினி, ஆர்.கே.வரதராஜ், கபாலி விஷ்வந்த், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், பாத்திமா பாபு, முருகானந்தம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் மாரிஸ் விஜயின் இசையில் பாடல்கள் ஓரளவு கேட்கும்படி இருந்தாலும், பின்னணி இசை காட்சிகளுடன் சுத்தமாக ஒட்டாமல் பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எம்.ஏ.ஆனந்த் கொடைக்கானலை அழகாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, படம் முழுவதையும் பளிச்சென்று படமாக்கி காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் பித்தாக் புகழேந்தி, கொடைக்கானல் போதை காளானை மையக்கருவாக வைத்துக் கொண்டு முழுமையான ஆக்‌ஷன் கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார். போதை காளான் எவ்வளவு ஆபத்தானது என்பதை காட்சி மொழியில் மிக நேர்த்தியாக விவரித்திருப்பவர், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தையும் அளவாக கையாண்டு பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

‘வட்டக்கானல்’ – பார்க்கலாம்!

ரேட்டிங் 3/5