அதர்ஸ் – விமர்சனம்

நடிப்பு: ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், சுமேஷ் மூர், ‘ நண்டு’ ஜெகன், முனீஷ்காந்த், ஆர்.சுந்தர்ராஜன், மாலா பார்வதி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: அபின் ஹரிஹரன்

ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்

படத்தொகுப்பு: ராமர்

இசை: ஜிப்ரான் வைபோதா

ஸ்டண்ட்: பாண்டம் பிரதீன்

நடனம்: சந்தோஷ்

இணை தயாரிப்பு: ஆதிராஜ் புருஷோத்தமன் – UP7 வென்ச்சர்ஸ்

தயாரிப்பு: கிராண்ட் பிக்சர்ஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்), சிவா

வேலை வாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்புக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அனுபவம் நம்மில் பலருக்கு கட்டாயம் இருக்கும். அந்த படிவங்களில் முதலில் விண்ணப்பதாரரின் பெயர் கேட்கப்பட்டிருக்கும். அதையடுத்து, எவ்வகைப் பாலினம் என்பதை தெரிந்துகொள்வதற்காக ‘ஆணா / பெண்ணா / அதர்ஸா’ என்று கேட்கப்பட்டிருக்கும். அந்த ‘அதர்ஸ்’ தான் இந்த திரைப்படத்தின் தலைப்பான ‘அதர்ஸ்’.

இது ’மெடிக்கல் கிரைம் திரில்லர்’ ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம். ’மெடிக்கல் கிரைம் திரில்லர்’ திரைப்படங்கள் என்றாலே வழக்கமாக உடலுறுப்புத் திருட்டு, நோயாளிகளிடம் மோசடியாக பணம் பறித்தல் போன்ற விவகாரங்கள் பற்றிய படங்களாகத் தான் இருக்கும். ஆனால், இந்த படம் அப்படிப்பட்டதல்ல. வழக்கத்துக்கு மாறானது; நாம் யூகிக்க முடியாத, அதிர்ச்சியூட்டும் மருத்துவக் குற்றச் செயலை உள்ளடக்கியது. அதனாலேயே இது தனித்துவமான ‘மெடிக்கல் கிரைம் திரில்லர்’ படமாகத் திகழ்கிறது.

கதை என்னவென்றால், சென்னை புறநகரில், நள்ளிரவு நேரத்தில், சாலை விபத்தில் சிக்கும் வேன் ஒன்று திடீரென வெடித்து, சிதறி, எரிகிறது. அதிலிருந்து மூன்று பெண்களும் ஓர் ஆணும் கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்படுகிறார்கள். பிரேத பரிசோதனையில், அந்த மூன்று பெண்களும் கண்பார்வை இல்லாத மாற்றுத் திறனாளிகள் என்பதும், அவர்களில் ஒரு பெண் விபத்துக்கு முன்பே இறந்திருக்கிறார் என்பதும் தெரியவருகிறது. ஏனைய பெண்களும் கூட கொல்லப்படுவதற்காகவே வேனில் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், கொலைகளை விபத்தாக மாற்றும் முயற்சியே இது என்பதையும் யூகிக்கிறார், இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்படும் காவல்துறை உதவி ஆணையர் மாதவ் (ஆதித்யா மாதவன்).

கொலையுண்டவர்கள் யார்? கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக உதவி ஆணையர் மாதவ், ஒரு பெண் இன்ஸ்பெக்டர் (அஞ்சு குரியன்), ஒரு சப்-இன்ஸ்பெக்டர் (முனீஷ்காந்த்) அடங்கிய தனிப்படை தீவிர புலன்விசாரணையில் ஈடுபடுகிறது. அப்போது அதிர்ச்சியூட்டும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன.

இதனிடையே, உதவி ஆணையர் மாதவ்வின் வருங்கால மனைவியான மது (கௌரி கிஷன்) மருத்துவராக இருக்கிறார். அவர் பணிபுரியும் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில், செயற்கை கருத்தரிப்பு (ஐ.வி.எஃப்) முறையில் பிறந்த குழந்தைகளின் மரபணு அமைப்பில் சில குழப்பங்கள் நிகழ்ந்து, விபரீதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை கண்டுபிடிக்கிறார் மருத்துவர் மது.

இந்த விபரீத மருத்துவப் பிரச்சனை தான் என்ன? செயற்கையாக இப்பிரச்சனையை ஏற்படுத்தும் மர்மக்கும்பல் யார்? எதற்காக இந்த கிரிமினல் வேலையைச் செய்கிறார்கள்? இந்த விவகாரத்துக்கும், மாதவ் விசாரிக்கும் வேன் விபத்துக்கும் என்ன தொடர்பு? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன், பார்வையாளர்களை சீட் நுனியில் திகைப்புடன் அமர வைத்து விடை அளிக்கிறது ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக, காவல்துறை உதவி ஆணையர் மாதவ்வாக ஆதித்யா மாதவன் நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் போல் இல்லாமல், அனுபவம் வாய்ந்த பிரபல நாயக நடிகர்கள் போல் இயல்பாக காக்கி உடைக்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, அதற்குத் தேவையான நடிப்பை, கருமமே கண்ணாக ஒவ்வொரு காட்சியிலும் முதிர்ச்சியாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு திறமையுள்ள ஒரு புது நாயக நடிகர் கிடைத்திருக்கிறார். வெல்கம் ஆதித்யா மாதவன்!

நாயகனின் வருங்கால மனைவியாக, மருத்துவர் மதுவாக கௌரி கிஷன் நடித்திருக்கிறார். நாயகனை அளவோடு பக்குவமாக காதலிக்கும் காட்சிகளிலும், தான் பணிபுரியும் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் நிகழும் விபரீதங்களைக் கண்டறிந்து, ஒரு நேர்மையான மருத்துவராக அவற்றை களையப் போராடும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மற்றொரு நாயகியாக, போலீஸ் இன்ஸ்பெக்டராக அஞ்சு குரியன் நடித்திருக்கிறார். அனுபவ நடிப்பு அவருக்கு கைகொடுத்திருக்கிறது.

எவரும் நடிக்கத் தயங்கும் திருநம்பி வேடத்தில் சுமேஷ் மூர் துணிச்சலாக நடித்திருக்கிறார். பெண்ணாய் பிறந்து, ஆண்தன்மை கொண்டவராக வளர்ந்து, திருநம்பியான பிறகு சமூகத்தின் எள்ளல்களுக்கு ஆளாகி, அதே சமூகத்தைப் பழி தீர்க்க வெறி கொள்ளும் கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். இறுதியில் உருக்கமாக நடித்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் அள்ளிக்கொள்கிறார்.

இவர்களுடன் ‘நண்டு’ ஜெகன், முனீஷ்காந்த், ஆர்.சுந்தர்ராஜன், மாலா பார்வதி உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன். தனது முதல் படத்திலேயே இப்படியொரு வித்தியாசமான கதைக்கருவைக் கையிலெடுத்து, அதை வெற்றிகரமாகக் கையாண்டதற்காக இயக்குநருக்கு நமது பாராட்டுகள். படத்தின் முதல் பாதியை கிரைம் திரில்லருக்கு உரிய விறுவிறுப்புடனும், இரண்டாம் பாதியை – குறிப்பாக அதன் பிற்பாதியை – இப்படியொரு கொடூரக் குற்றம் நிகழ்ந்தால் சமூகம் என்ன ஆகும்? என்ற கேள்வியுடன் போரடிக்காமலும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். வெறுமனே பொழுதுபோக்குப் படமாக மட்டும் இராமல், சிந்திக்கத் தூண்டும் ஆழ்ந்த கருத்துள்ள படமாகவும் இதைப் படைத்திருக்கும் இயக்குநருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

ஜிப்ரான் வைபோதாவின் இசை, அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, ராமரின் படத்தொகுப்பு, பாண்டம் பிரதீனின் சண்டை அமைப்பு, சந்தோஷின் நடன அமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் கதை சொல்லலுக்கும், படத்தின் தரம் மற்றும் நேர்த்திக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.

’அதர்ஸ்’ – பாலின ரீதியில் அனைத்து மானுடர்களும் சமம் என்பதை ’மெடிக்கல் கிரைம் திரில்லர்’ ஜானரில் சிறப்பாக சொல்லியிருக்கும் படம். அனைத்துத் தரப்பினரும் அவசியம் கண்டு களிக்கலாம்

ரேட்டிங்: 3.75/5