பைசன் (காளமாடன்) – விமர்சனம்

நடிப்பு: துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அருவி மதன், அழகம் பெருமாள், அனுராக் அரோரா, சுபத்ரா ராபர்ட் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: மாரி செல்வராஜ்
ஒளிப்பதிவு: எழிலரசு
படத்தொகுப்பு: சக்தி திரு
ஸ்டண்ட்: திலீப் சுப்புராயன்
கலை: குமார் கங்கப்பன்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பு: ’அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட்’ சமீர் நாயர், தீபக் சாகல் & ’நீலம் புரொடக்ஷன்ஸ்’ பா.இரஞ்சித், அதிதி ஆனந்த்
பத்திரிகை தொடர்பு: குணா, யுவராஜ், சதீஷ் (எய்ம்)
’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ’வாழை’ என தொடர்ந்து நான்கு பிளாக்பஸ்டர்களைக் கொடுத்து, சமூகப் பொறுப்புணர்வும், கமர்ஷியல் வித்தையும் கைவரப் பெற்ற தனித்துவமான இயக்குநர் என கொண்டாடப்படும் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ஐந்தாவது திரைப்படம்; அவருடன் பிரபல நடிகர் விக்ரமின் புதல்வரும், ஒரு வெற்றியைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்ற நிலையில் இருப்பவருமான நடிகர் துருவ் விக்ரம் இணைந்திருக்கும் திரைப்படம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணத்தி கிராமத்தில் பிறந்து, ஜப்பானில் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கபடி விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடி, சாம்பியன் பட்டத்தை வென்று, நாட்டின் உயரிய விருதான அர்ஜுனா விருது பெற்று, தமிழர்களுக்கு பெருமை தேடித்தந்த கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்களையும், வெங்கடேச பண்ணையார் வகையறாவுக்கும், பசுபதி பாண்டியன் வகையறாவுக்கும் இடையே தென் மாவட்டங்களில் நிகழ்ந்த பயங்கர மோதல்களிலிருந்து சில முக்கிய சம்பவங்களையும் எடுத்துக்கொண்டு, இவற்றோடு கற்பனையாக சில கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் புனைந்து மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ள படைப்பு என்ற தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் என்பன போன்ற காரணங்களால், ரசிகர்கள், விமர்சகர்கள், திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துயுள்ள திரைப்படம் ‘பைசன் (காளமாடன்)’. தீபாவளியை முன்னிட்டு தற்போது திரைக்கு வந்திருக்கும் இந்த படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

தென் தமிழகத்தில், 1990-களில், ஒரு சாதியின் பெரிய மனிதரான வேலுச்சாமியின் (லால்) குழுவுக்கும், இன்னொரு சாதியின் பெரிய மனிதரான பாண்டியராஜாவின் (அமீர்) குழுவுக்கும் இடையிலான மோதல்கள் எந்த நேரத்திலும் இரண்டு சாதிகளுக்கு இடையிலான கலவரமாக விஸ்வரூபம் எடுக்கலாம் என்ற அபாயகரமான நிலையின் பின்னணியில் இப்படக்கதை நிகழ்கிறது…
தூத்துக்குடி மாவட்டம், வனத்தி கிராமத்தில், ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் நாயகன் கிட்டான் (துருவ் விக்ரம்). இவருக்கு சிறுவயதில் இருந்தே கபடியில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் கபடியில் ஆர்வம் காட்டிய பலரும் வன்முறையில் இறங்கிவிட்டதால் தன் மகனும் அப்படி ஆகிவிடக் கூடாது என்று அஞ்சுகிறார் கிட்டானின் தந்தை வேலுசாமி (பசுபதி).
கிட்டானின் கனவை நனவாக்க பாடுகிறார் அவரது பி.டி. ஆசிரியர் (அருவி மதன்). இன்னொருபுறம் ஊரில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களான பாண்டியராஜா, கந்தசாமி இருவருக்கும் இடையிலான பகை, ஊர் முழுக்க எதிரொலிக்கிறது.
இந்தப் பகை கிட்டானின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது? தன் முன்னால் இருந்த தடைகள் அனைத்தையும் கடந்து கிட்டான் சாதித்தது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறது ‘பைசன் (காளமாடன்)’ திரைப்பட்த்தின் மீதிக்கதை.
ஒரு பயோபிக் படத்தைப் பொறுத்தவரை அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்தேதான் ஆடியன்ஸ் அந்தப் படத்தை பார்க்க வருவர். அதையும் தாண்டி அவர்களை திருப்திப்படுத்தி வெளியே அனுப்பும் படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் ஜெயித்திருக்கிறார். தான் எடுத்துக் கொண்ட களத்தை ஒரு பயோபிக் என்ற அளவில் மட்டும் கையாளாமல் 90-களில் தென் மாவட்டங்களில் நடந்த நிஜ சம்பவங்களை மையப்படுத்தி, அதை மிக நுணுக்கமாகவும் நேர்மையாகவும் கையாண்டிருக்கிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக ஜப்பானில் இருக்கும் துருவ் விக்ரமின் நினைவலைகளில் இருந்து படம் நம் கண் முன்னே விரியத் தொடங்குகிறது. நாயகனின் பள்ளிப் பருவம், பி.டி ஆசிரியரின் உத்வேகத்தால் மெல்ல அவர் கபடியில் ஆர்வம் செலுத்தத் தொடங்குவது, அவரின் குடும்பப் பின்னணி, சாதி அரசியலுக்கு இடையே சிக்கித் தடுமாறும் அவரது லட்சியம் என நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதை நம்மை எங்கும் நகர விடாதபடி இழுத்துக் கொள்கிறது.
பேருந்தில் ஒரு ஆடு எதிர் தரப்பினரின் காலில் சிறுநீர் கழித்த விவகாரம் ஒரு நிமிடத்தில் எப்படி மிகப் பெரிய வன்முறையாக மாறுகிறது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதுதான் தனக்கு முதல் படம் என்று துருவ் விக்ரம் சொன்னது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. ஆனால், அவர் அப்படி சொன்னதற்கான காரணம், இந்தப் படத்தை பார்க்கும்போது விளங்குகிறது. டபுள் ஹீரோ படங்கள், ரீமேக் என நடித்தாலும் அவருடைய முழு நடிப்புத் திறமையையும் முந்தைய படங்கள் வெளிக்கொண்டு வரவில்லை. அதை சாத்தியமாக்கி இருக்கிறது ‘பைசன்’. கோபம், எமோஷனல், சோகம் என நடிப்பில் ஒரு பக்கம் மிளிர்ந்தாலும், இன்னொரு பக்கம் கபடிக்காக உடலளவிலும் கடுமையாக அவர் உழைத்திருப்பது கண்கூடாக திரையில் தெரிகிறது. நல்ல இயக்குநர், நல்ல திரைக்கதை, நல்ல கதாபாத்திரம் கிடைத்ததால் நடிப்பில் தானொரு பலம் பொருந்திய ‘பைசன்’ என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்திருக்கிறார் துருவ் விக்ரம்.
வழக்கம் போல இந்தப் படத்தில் மாரி செல்வராஜின் கதாபாத்திர தேர்வு வியக்க வைக்கிறது. துருவ் விக்ரமின் தந்தையாக பசுபதி வரும் ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதை உணர்த்தி அப்ளாஸ் பெறுகிறார். குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முன்பாக போலீஸிடம் தன் மகனுக்காக அவர் கெஞ்சும் காட்சியில் அவரது நடிப்பு கல் நெஞ்சையும் கரைத்து விடும். அமீர், லால், ரஜிஷா விஜயன், அருவி மதன் என நல்ல நடிகர்கள் யாரையுமே வீணடிக்காமல் செவ்வனே பயன்படுத்தி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரனும் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு நியாயம் செய்யும் வகையில் நல்ல நடிப்பை தந்துள்ளார்.
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும், எழிலரசுவின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. காளமாடன் கானம், தென்னாடு பாடல்கள் சிறப்பு. கபடி தொடர்பான காட்சிகளில் எடிட்டர் சக்தி திரு தனித்து தெரிகிறார்.
ரத்தமும் சண்டையும் அன்றாடம் ஆகிப் போன ஒரு மண்ணில் இருந்து தன் முன்னால் இருந்த அத்தனை தடைகளையும் உடைத்து ஒருவர் எப்படி முன்னேறிச் சென்றார் என்ற கதையை நேர்த்தியாகவும், அழுத்தமாகவும் சொல்லி மீண்டும் ஒரு புறக்கணிக்க முடியாத வெற்றியை பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ். அறிவியல், தொழில்நுட்பம் முன்னேறிய ஏஐ காலத்திலும் கூட சாதிய ஒடுக்குமுறைகளும் ஆணவக் கொலைகளும் மலிந்து கிடக்கும் சூழலில் ‘பைசன் (காளமாடன்)’ போன்ற படங்கள்தான் அதிகம் தேவை.
’பைசன் (காளமாடன்)’ – மாரி செல்வராஜின் அருமையான இயக்கத்துக்காகவும், துருவ் விக்ரமின் அர்ப்பணிப்பு மிக்க நடிப்புக்காகவும் அனைவரும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய முற்போக்கான ‘ஸ்போர்ட்ஸ் டிராமா’!
ரேட்டிங்: 4.25/5