பல்டி – விமர்சனம்

நடிப்பு: ஷேன் நிகம், சாந்தனு, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், ப்ரீத்தி அஸ்ரானி, பூர்ணிமா இந்திரஜித் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: உன்னி சிவலிங்கம்
வசனம்: டி.டி.ராமகிருஷ்ணன்
ஒளிப்பதிவு: அலெக்ஸ் ஜே.புலிக்கல்
படத்தொகுப்பு: சிவகுமார் வி.பனிக்கர்
கலை: ஆஷிக் எஸ்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ் & விக்கி மாஸ்டர்
இசை: சாய் அபயங்கர்
தயாரிப்பு: ’எஸ்டிகே ஃபிரேம்ஸ்’ சந்தோஷ் டி.குருவில்லா & பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்
தமிழ்நாடு ரிலீஸ்: ஃப்யூச்சர் அப் & ஏஜிஎஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
மலையாள நாயக நடிகர் ஷேன் நிகமின் 25-வது திரைப்படம்; சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் நாயக நடிகர் சாந்தனு மலையாள திரையுலகுக்குள் மறுபிரவேசம் செய்திருக்கும் திரைப்படம்; கபடி விளையாட்டையும், அதிரடி ஆக்சனையும் மையமாகக் கொண்ட ‘ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா’ ஜானரில் உருவாகியிருக்கும் திரைப்படம்; பெரிதும் எதிர்பார்க்கப்படும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் என்பன போன்ற காரணங்களால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பல்டி’. தற்போது தமிழிலும், மலையாளத்திலும் வெளிவந்திருக்கும் இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
படத்தின் ஆரம்பத்திலேயே நாயகர்கள் உதயன் (ஷேன் நிகம்), குமார் (சாந்தனு) மற்றும் இவர்களது இரு நண்பர்கள் சேர்ந்து ஒரு கொலை செய்கிறார்கள். இவர்கள் யார்? இவர்கள் யாரை கொலை செய்கிறார்கள்? ஏன்? என்பன போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கு விடை சொல்லும் வகையில் அடுத்தடுத்த காட்சிகள் நகருகின்றன.
இப்படக்கதை தமிழ்நாடு – கேரளா எல்லைப்பகுதியில் உள்ள ஒரு நகரத்தில் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு உதயன் ஓர் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இந்த பிசினஸ் தவிர்த்து, மற்ற நேரங்களில் தனது நண்பர் குமார் தலைமையிலான ‘பஞ்சமி ரைடர்ஸ்’ கபடி அணியில் சேர்ந்து, நண்பர்களுடன் அவ்வப்போது கபடி விளையாடி வருகிறார். இந்த ’பஞ்சமி ரைடர்ஸ்’ கபடி அணிக்கும், ’பொற்றாமரை’ கபடி அணிக்கும் இடையே நடந்த கடும் போட்டியில், ’பஞ்சமி ரைடர்ஸ்’ அணி வெற்றி வாகை சூடுகிறது.

’பஞ்சமி ரைடர்ஸ்’ அணியினரின் திறமை கண்டு, அவர்களின் கேப்டனான குமாரிடம், ‘ஷோ பாய்ஸ்’ கபடி அணி வைத்திருக்கும் சோடா கம்பெனி முதலாளியான ‘தாதா’ சோடா பாபு (அல்போன்ஸ் புத்திரன்), தங்கள் அணியில் சேர்ந்து விளையாட வருமாறு அழைப்பு விடுக்க, தனது நண்பர்களை கலந்து ஆலோசிக்காமலே சம்மதம் தெரிவித்து விடுகிறார் குமார்.
இது ‘பொற்றாமரை’ கபடி அணி வைத்திருக்கும் ‘தாதா’ பைரவனுக்கு (செல்வராகவன்) தெரிய வருகிறது. அவர் ஏழை-எளியவர்களுக்கு கொடூரமான ஜெட் வட்டிக்கு (அதாவது 20 சதவீதம் வட்டிக்கு) கடன் கொடுப்பவர். கடன் பெற்றவர்கள் தவணை செலுத்தத் தவறினால், அவர்களை அடியாட்களைக் கொண்டு அடித்துத் துவைப்பது, உடுத்தியிருக்கும் துணிமணிகளை அவிழ்த்து அம்மணமாக்கி அசிங்கப்படுத்துவது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுபவர். அவர் மிகப் பெரிய தொகை கொடுத்து, தனது ‘பொற்றாமரை’ அணியில் சேர்ந்து விளையாட அழைப்புக் கொடுக்க, குமார் இப்போதும் தன் நண்பர்களுடன் கலந்து பேசாமல், பணத்தாசையில் பைரவனுக்கு சம்மதம் தெரிவித்து விடுகிறார்.
இதனால் ஆத்திரம் அடையும் சோடா பாபு, பைரவனுக்குச் சொந்தமான விலையுயர்ந்த காரைத் தூக்குகிறார். அந்த கார் தங்களால் தான் போனது என்பதால் குமார், உதயன் உள்ளிட்ட நண்பர்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த சோடா பாபுவிடம் போகிறார்கள். ஆனால் ஆத்திரம் அடங்காத சோடா பாபுவும் அவரது அடியாட்களும் இவர்களைத் தாக்க, இவர்கள் திருப்பியடித்து துவம்சம் செய்து காரை மீட்கிறார்கள்.
இப்படியாக கபடி விளையாட்டு வீரர்களான உதயன், குமார் மற்றும் இவர்களது நண்பர்கள், அடிதடிக்குப் பேர் போன தாதா பாலிடிக்ஸுக்குள் வகையாக சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை எப்படியெல்லாம் தடம் மாறுகிறது? என்னென்ன விபரீதங்கள் நடக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு அதிரடி ஆக்ஷனுடன் ரத்தம் தெறிக்கத் தெறிக்க விடை அளிக்கிறது ‘பல்டி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக உதயன் என்ற கதாபாத்திரத்தில் ஷேன் நிகம் நடித்திருக்கிறார். தனது 25-வது படம் என்பதால் இதற்கு பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். கபடி, நட்பு, ஆக்சன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுவதும் அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து அசத்தியுள்ளார்,
இன்னொரு நாயகனாக குமார் கதாபாத்திரத்தில் சாந்தனு நடித்திருக்கிறார். நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை, பணவரவுக்காக அவசர முடிவுகளை எடுத்து பிரச்சனைகளை இழுத்துவரும் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து, 15 ஆண்டுகளுக்குப்பின் மலையாள திரையுலகுக்கு கம்பேக் கொடுத்துள்ள வாய்ப்புக்கு நியாயம் செய்திருக்கிறார்.
நாயகியாக, உதயனின் காதலி காவேரியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் வெறுமனே படத்தின் காதல் தேவையை பூர்த்தி செய்பவராகக் காட்சி தருபவர், ஒரு கட்டத்தில் கதையின் முக்கியத் திருப்பத்துக்குக் காரணமாக இருந்து ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஜெட் வட்டிக்கு கடன் தரும் இரக்கமற்ற தாதா பைரவனாக செல்வராகவன் நடித்திருக்கிறார். சிரித்துக்கொண்டே வில்லத்தனம் காட்டி மிரட்டியிருக்கிறார்.
இன்னொரு வில்லனாக, தாதா சோடா பாபுவாக அல்போன்ஸ் புத்திரன் நடித்திருக்கிறார். பென்சில் மீசை லுக், ஸ்டைலான உடல்மொழி, அதிரடி ஆக்ஷன் ஆகியவற்றால் கவனம் ஈர்க்கிறார்.
பெண் தாதா ஜீ-மாவாக பூர்ணிமா இந்திரஜித் நடித்திருக்கிறார். அவர் ஆடும் ஆட்டத்தில் நாயகர்கள் உள்ளிட்ட நான்கு நண்பர்களும் சிக்கும் இடம் நல்ல திருப்பம்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் உன்னி சிவலிங்கம். ’அராஜக தாதாக்களுக்கு இடையிலான தொழில் போட்டி, அதில் சிக்கும் சில அப்பாவி கபடி விளையாட்டு வீரர்களின் சீரழியும் வாழ்க்கை’ என்ற கதைக்கருவை வைத்துக்கொண்டு இயக்குநர் உன்னி சிவலிங்கம் அமைத்திருக்கும் திரைக்கதை, மற்றும் காட்சிகள் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றச் செய்கிறது. கபடி விளையாட்டிலும், சண்டைக் காட்சிகளிலும் பயன்படுத்தியிருக்கும் புதிய யுத்திகள் ரசிக்க வைக்கிறது. கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், காட்சிகள் மற்றும் திரைக்கதையை வேகமாக நகர்த்தி சென்ற விதம் என முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் படத்தை ரசிக்கும்படி சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் உன்னி சிவலிங்கம்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கின்றன. பின்னணி இசை, காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பயணித்திருக்கும் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் கபடி போட்டிகள் மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது.
படத்தொகுப்பாளர் சிவகுமார் வி.பனிக்கரின் கடின உழைப்பு படத்தின் விறுவிறுப்பில் தெரிகிறது.
‘பல்டி’ – ஆக்ஷன் ரசிகர்களுக்கு செம விருந்து!
ரேட்டிங்: 3.5/5