அந்த 7 நாட்கள் – விமர்சனம்

நடிப்பு: அஜிதேஜ், ஸ்ரீஸ்வேதா, கே.பாக்யராஜ், நமோ நாராயணன், தலைவாசல் விஜய், செம்புலி ஜெகன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: எம்.சுந்தர்
ஒளிப்பதிவு: கோபிநாத் துரை
படத்தொகுப்பு & விஎஃப்எக்ஸ்: முத்தமிழன் ராமு
ஆக்ஷன்: ராகேஷ் ராக்கி
கலை: டி.கே.தினேஷ்குமார்
இசை: சச்சின் சுந்தர்
தயாரிப்பு: ’பெஸ்ட் காஸ்ட் ஸ்டுடியோஸ்’ முரளி கபீர்தாஸ்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
கே.பாக்யராஜ் இயக்கி, நடித்து, 1981ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பேராதரவுடன் சக்கைப் போடு போட்ட வெற்றித் திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. இப்போது அதே தலைப்பில், ஆனால் அந்த படத்துக்கு துளியும் சம்பந்தம் இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட ‘காதல் – த்ரில்லர்’ ஜானரில் உருவாகி வெளிவந்திருக்கிறது இந்த புதிய ‘அந்த 7 நாட்கள்’ திரைப்படம்.
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்கிறது திருக்குறள். எனில், தெய்வத்தாலும் மாற்ற முடியாத ஒரு தலையெழுத்தை, ஒரு காதலன், தனது பரிசுத்தமான காதல் சக்தியால் மாற்ற முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான விடை தேடும் போராட்டமும், முடிவும் தான் இந்த புதிய ‘அந்த 7 நாட்கள்’ திரைப்படம்.
ஆளுங்கட்சியில் வளர்ந்துவரும் ஓர் அரசியல் பிரமுகர் நமோ நாராயணன். வருகிற தேர்தலில் போட்டியிட தனக்கொரு எம்.எல்.ஏ சீட்டு வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையில் அவர் அமைச்சர் கே.பாக்யராஜுக்கு அல்லக்கையாக இருந்து வருகிறார்.
நமோ நாராயணனின் மகன், கதையின் நாயகன் ஆதித்யா (அஜிதேஜ்). சூரியன், நட்சத்திரங்கள் உள்ளிட்ட வானத்து பிரமாண்ட புதிர்களை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் கொண்ட ’விண்வெளி இயற்பியல்’ (Astrophysics) படிக்கும் மாணவர். ஆதித்யாவின் அசாத்திய திறமைகளையும் நற்பண்புகளையும் பற்றி கேள்விப்பட்ட அமைச்சர் பாக்யராஜ், தனது டாக்டர் மகளை ஆதித்யாவுக்கு திருமணம் செய்து வைத்து நமோ நாராயணனை தன் சம்பந்தி ஆக்கிக்கொள்ள விரும்புவதோடு, அவருக்கு கட்சி மேலிடத்தில் சொல்லி எம்.எல்.ஏ சீட்டு வாங்கித் தருவதாகவும் உறுதி அளிக்கிறார். தன் மகனால் தனக்கு கிடைக்கப்போகும் நற்பலன்களை எண்ணி மகிழ்கிறார் நமோ நாராயணன்.
இது தெரியாத ஆதித்யா, ஒருநாள் தன் வீட்டு ஜன்னலருகே டெலஸ்கோப்பை வைத்து, அதன் வழியே உயரே வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். பின்னர் லேசாக டெலஸ்கோப்பைத் தற்செயலாகத் திருப்பியவுடன், அதில் எதிர் மாடிவீட்டு இளம்பெண் தென்படுகிறார். அவர் நாயகி நிலா (ஸ்ரீஸ்வேதா). போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகளான அவர், சட்டக்கல்வியை முடித்துவிட்டு, ஒரு சீனியர் வழக்கறிஞரிடம் ஜூனியர் வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்து வருகிறார், அவரை முதன்முதலாக பார்த்தவுடனே அவர் மீது காதல் கொள்ளும் ஆதித்யா, நிலா பணிபுரியும் அலுவலகத்துக்கே சென்று தன் லவ்வை புரபோஸ் செய்கிறார். அதை முதலில் ஏற்க மறுக்கும் நிலா, விடாமுயற்சியுடன் ஆதித்யா மேற்கொள்ளும் ஒரு சில சந்திப்புகளுக்குப் பின் ஏற்றுக்கொள்ள, இருவரும் காதலர்கள் ஆகிறார்கள்.

இந்நிலையில், 300 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ சூரிய கிரகணம் தற்போது நிகழ இருக்கிறது. ”அந்த முழு சூரிய கிரகணத்தை டெலஸ்கோப் வழியாகப் பார்த்து, கண்காணித்து, வித்தியாசமான கோணத்தில் சிறப்பான ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி சமர்ப்பிக்கும் ஒரு மாணவருக்கு, அமெரிக்காவின் ’நாசா’ விண்வெளி மையத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும்” என்று அறிவிக்கிறார் பேராசிரியர்.
இதனால் ஊக்கம் பெறும் ஆதித்யா, பல்வேறு திறன்கள் கொண்ட பல டெலஸ்கோப்களைப் பரிசோதித்த பின், 300 ஆண்டுகள் பழமையான புராதன டெலஸ்கோப் ஒன்றை வாங்கி வந்து, சென்னை பிர்லா கோளரங்கத்தின் வெட்டவெளியில் வைத்து, அதன் வழியே சூரிய கிரகணத்தைப் பார்த்து ஆராய்ச்சி செய்கிறார். அப்போது சூரிய கிரகணத்திலிருந்து வரும் மர்மமான ஒளிக்கதிர் ஒன்று, அந்த பழமையான டெலஸ்கோப்புக்குள் புகுந்து, ஆதித்யாவின் கண்களுக்குள் ஊடுருவி, அவரது மூளை நியூரான்களுக்குள் நுழைந்து வினை புரிகிறது. விளைவாக, அவருக்கு ஓர் அபூர்வ சக்தி கிடைக்கிறது. அது என்னவென்றால், அவர் யாருடைய கண்களையாவது பார்த்தால், சம்பந்தப்பட்டவர் எப்போது மரணம் அடைவார் என்பது அவருக்கு சட்டென தெரிகிறது. உதாரணமாக, ஒரு நாய் சில நொடிகளில் இறக்கப் போகிறது என்பது ஆதித்யாவுக்குத் தெரிகிறது. அதுபோல் அந்த நாய் உயிரிழக்கிறது. ஆதித்யாவின் அபூர்வ சக்தி கணித்தது போலவே ஒரு நபரும் மரணிக்கிறார்.
இதனால் அஞ்சும் ஆதித்யா, தன் காதலி நிலாவின் மரணம் எப்போது நிகழும் என்பதை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக – அவரது கண்ணைப் பார்க்கக் கூடாது என்பதற்காக – நிலாவை சந்திப்பதையே தவிர்க்கிறார். முதலில் குழம்பும் நிலா, காரணத்தைத் தெரிந்துகொண்ட பிறகு, ”அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா” என்று ஆதித்யாவுக்கு தைரியமூட்டி, தன் கண்ணைப் பார்க்க வைக்கிறார். அவரின் கண்களை ஆதித்யா பார்க்க, இன்னும் 7 நாட்களில் நிலா இறந்துபோவார் என்பது தெரிய வருகிறது. ஆதித்யா பேரதிர்ச்சி அடைகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது? ஆதித்யா நிலாவைக் காப்பாற்ற அந்த 7 நாட்கள் என்ன செய்தார்? எப்படி எல்லாம் போராடினார்? அவரது முயற்சி பலித்ததா, அல்லது தோல்வி அடைந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுத்தும் பதற்றத்துடன் விடை அளிக்கிறது ‘அந்த 7 நாட்கள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக விண்வெளி இயற்பியல் மாணவர் ஆதித்யாவாக அஜிதேஜ் நடித்திருக்கிறார். காதல் சப்ஜெக்ட்டுக்கு ஏற்ற முகவாகு மற்றும் உடல்வாகுடன், துள்ளலும் துறுதுறுப்புமாக தன் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக நடிப்பை வழங்கியிருக்கிறார்.
நாயகியாக, ஜூனியர் வழக்கறிஞர் நிலாவாக ஸ்ரீஸ்வேதா நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் நாயகனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நடித்திருப்பதோடு, கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களை கண் கலங்கச் செய்துவிட்டார்.
நாயகனின் அப்பாவாக வரும் நமோ நாராயணன், அமைச்சராக வரும் கே.பாக்யராஜ், நாயகியின் தந்தையாக – போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர், நாயகனின் நண்பராக வருபவர், பாக்யராஜின் டாக்டர் மகளாக வருபவர் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் எம்.சுந்தர். ஒரு காதல் – த்ரில்லர் கதையை வித்தியாசமாக அறிவியல் ஃபேண்டஸி மூலம் சொல்ல முயற்சித்ததோடு, சமீபத்திய தெருநாய்க்கடி பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் பாதிப்பு ஆகியவற்றை திரைக்கதையில் சேர்த்து அதிர்ச்சியளித்திருக்கிறார். படத்தின் கடைசி அரைமணி நேரம், பார்வையாளர்களின் ஈரக்குலையை நடுங்க வைத்துவிட்டார் இயக்குநர். பாராட்டுகள் இயக்குநர் எம்.சுந்தர்.
இசையமைப்பாளர் சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் காதல் கதைக்கு ஏற்பவும், பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாகவும் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரை காட்சிகளை தரமாக படமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
நாயகன் மற்றும் நாயகி இருவரை சுற்றி மட்டுமே நடக்கும் கதையாக இருந்தாலும், அதை சுவாரஸ்யமாக நகர்த்த உழைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் முத்தமிழன் ராமு.
‘அந்த 7 நாட்கள்’ – புதிய காதல் கதை! புதிய அனுபவம்! அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய படம்!
ரேட்டிங்: 3.5/5.