ரைட் – விமர்சனம்

நடிப்பு: நட்டி சுப்ரமணியம், அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, மூணார் ரமேஷ், வினோதினி வைத்தியநாதன், தங்கதுரை, ஆதித்யா சிவகுமார், யுவினா பார்த்தவி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சுப்ரமணியன் ரமேஷ்குமார்

வசனம்: ஏ.சி.கர்ணாமூர்த்தி, சுப்ரமணியன் ரமேஷ்குமார்

பாடல்கள்: அபிஷா

ஒளிப்பதிவு: எம்.பத்மேஷ்

படத்தொகுப்பு: நாகூரான் ராமச்சந்திரன்

கலை: தாமு எம்.எஃப்.ஏ

ஸ்டண்ட்: மிரக்கிள் மைக்கேல்

இசை: குணா பாலசுப்ரமணியன்

தயாரிப்பு: ’ஆர்டிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ திருமால் லட்சுமணன் & டி.சியாமளா

பத்திரிகை தொடர்பு: சதீஷ் எய்ம், சிவா

சென்னையில் கம்ப்யூட்டர் மெக்கானிக்காக இருப்பவர் சக்திவேல் பாண்டியன் (அருண் பாண்டியன்). அவருடைய மகன் ஜெய் (ஆதித்யா சிவகுமார்), மரைன் (Marine) கல்லூரியில் பயிலும் மாணவர். ஒருநாள் நண்பர்களை சந்திக்கச் செல்வதாக சொல்லிவிட்டுச் சென்ற ஜெய், வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கமடையும் சக்திவேல் பாண்டியன், ஜெய்யின் நண்பர்களிடம் தன் மகன் குறித்து விசாரிக்கிறார். ஆனால், அந்த நண்பர்களோ பதில் ஏதும் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார்கள்.

இதனால் மேலும் பதற்றமடையும் சக்திவேல் பாண்டியன், தன் மகனை காணவில்லை என்று புகார் கொடுப்பதற்காக போலீஸ் நிலையம் செல்கிறார். அன்று பிரதமர் வர இருப்பதால், அவருக்கான பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விடுவதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராம் (நட்டி சுப்ரமணியம்) அவசரமாக கிளம்பிப் போகிறார். திருமண அழைப்பிதழ் வினியோகிப்பதற்காக பெண் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா (அக்ஷரா ரெட்டி) லீவு போட்டிருப்பதால் அவர் போலீஸ் நிலையம் வரவில்லை. அங்கு இருக்கும் ரைட்டர் செல்லமுத்து (மூணார் ரமேஷ்), “உன் மகன் என்ன சின்னப் பிள்ளையா? வயசு பயல் தானே? குடிச்சுட்டு எங்காவது குப்புற விழுந்து கிடப்பான். கொஞ்ச நேரத்தில் தானா எந்திரிச்சு வீட்டுக்கு வந்துருவான்” என்கிற ரீதியில் அலட்சியமாக சக்திவேல் பாண்டியனிடம் கூறுகிறார். சக்திவேல் பாண்டியன் தொடர்ந்து கெஞ்சிக் கேட்டபிறகு, “சரி, புகார் எழுதி குடுத்துட்டுப் போ” என்கிறார். தன் மகனைத் தேடி கண்டுபிடித்துக் கொடுக்கக் கூடிய போலீஸ் யாரும் அங்கு இல்லையே என்று வேதனைப்படுகிறார் சக்திவேல் பாண்டியன்.

இந்தச் சூழலில், அந்த போலீஸ் நிலையத்திலிருக்கும் ஒரு மடிக்கணினியை (Laptop) எங்கிருந்தோ இயக்கி, அதன் வழியே திடீரெனத் தோன்றும் – அடையாளம் காண முடியாத – ஒரு மர்ம நபர், பயங்கர அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவிக்கிறார். ரைட்டர் செல்லமுத்து அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு அடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது; அதனால் அந்த நாற்காலியை விட்டு அவர் எழக் கூடாது; மீறி எழுந்தால், குண்டு வெடித்து மொத்த போலீஸ் நிலையமும் தகர்ந்துவிடும் என்பது தான் அந்த அதிர்ச்சியூட்டும் தகவல். மேலும், போலீஸ் நிலையத்தில் இப்போது இருப்பவர்களும், இனி உள்ளே வருபவர்களும் உள்ளேயே இருக்க வேண்டும்; வெளியேற முயற்சிக்கக் கூடாது; மீறி முயற்சித்தால் வெடித்து சாக வேண்டியது தான்; காரணம், போலீஸ் நிலையத்தின் அனைத்து வாசல்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் எச்சரிக்கிறார், மடிக்கணினியில் தோன்றிய மர்ம நபர்.

இதைக் கேட்டு போலீஸ் நிலையமே களேபரம் ஆகிறது. இந்த குழப்பத்தைப் பயன்படுத்தி ஒரு குற்றவாளி போலீஸ் நிலையத்திலிருந்து தப்பியோட முயல, வாசலில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து அவர் தூக்கி வீசப்பட்டு, தீக்காயங்களுடன் உயிருக்கு ஊசலாடும் நிலையில் இருக்கிறார். அவரது சிகிச்சைக்காக ஆம்புலன்ஸை வரவழைக்கிறார்கள். போலீஸ் நிலையத்துக்குள் வந்த ஆம்புலன்ஸ் வெளியே செல்ல முடியாது என்பதால் அதில் வந்த டிரைவரும், செவிலியரும் கூட மாட்டிக்கொள்கிறார்கள்.

இப்படியாக, வெடிகுண்டு பொருத்தப்பட்ட நாற்காலி மேல் அமர்ந்திருக்கும் ரைட்டர் செல்லமுத்து, அவருடன் பணியில் இருந்த ஓரிரு போலீஸ்காரர்கள், திருமண அழைப்பிதழ் கொடுக்க மப்டியில் வந்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் மேனகா, மகன் ஜெய்யை காணவில்லை என புகார் அளிக்க வந்திருந்த சக்திவேல் பாண்டியன், ஏற்கெனவே பிடித்துக் கொண்டு வரப்பட்டிருந்த ஒரு திருடர் (தங்கதுரை), குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்த குற்றவாளி, அவரை அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் செவிலியர், கையெழுத்துப் போட வந்த ரவுடி உள்ளிட்டோர் இந்த வெடிகுண்டு விஷ வளையத்துக்குள் சிக்கி தவிக்கிறார்கள்.

பிரதமர் சென்னை வரும்போது போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவல் வெளியே கசிந்தால், பதற்றம் அதிகரித்து நிலைமை மோசமாகிவிடும் என்று அஞ்சும் போலீஸ் உயர் அதிகாரிகள், கமுக்கமாக பிரச்சனையை சமாளிக்க முயலுகிறார்கள். ”உனக்கு என்ன வேண்டும்? உன் கோரிக்கை என்ன?” என்ற கேள்விக்கு, “முதலில் போலீஸ் நிலையத்துக்கு ஒரு நீதிபதியை வரவழைக்க வேண்டும்” என்று கோருகிறார் மர்ம நபர். அதன்படி ஒரு பெண் நீதிபதி (வினோதினி வைத்தியநாதன்) அழைத்து வரப்படுகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? போலீஸ் நிலையத்துக்குள் வெடிகுண்டுகளைப் பொருத்திய மர்ம நபர் யார்? எதற்காக அவர் இப்படி வெடிகுண்டுகளைப் பொருத்தினார்? அவருடைய முக்கிய கோரிக்கை என்ன? அவர் பிடிபட்டாரா? காணாமல் போன சக்திவேல் பாண்டியனின் மகன் ஜெய் கண்டுபிடிக்கப்பட்டாரா? அவர் காணாமல் போனதற்கு என்ன காரணம்? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது ‘ரைட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இக்கதையின் நாயகனாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமாக நட்டி சுப்பிரமணியம் நடித்திருக்கிறார். விவாகரத்து காரணமாக மனைவியையும், மகளையும் பிரிந்து வாழும் அவர், திரைக்கதையில் திருப்பங்களை ஏற்படுத்துபவராகவும், முடிச்சுகளை அவிழ்ப்பவராகவும், கிளைமாக்ஸை தூக்கி நிறுத்துபவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கம்ப்யூட்டர் மெக்கானிக் சக்திவேல் பாண்டியனாக அருண் பாண்டியன் நடித்திருக்கிறார். மகனைக் காணவில்லை என்று பரிதவிக்கும் தந்தை கதாபாத்திரத்தில் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் மகனைத் தேடி கண்டுபிடித்துக் கொடுக்க எந்த போலீசும் முன்வரவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் கோபப்படுவதும், அதனாலேயே அவர் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டுகளைப் பொருத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாவதும் திரைக்கதையை வலிமைப்படுத்தியிருக்கிறது.

திருமண அழைப்பிதழ் கொடுக்க மப்டியில் போலீஸ் நிலையத்துக்கு வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மேனகாவாக அக்ஷரா ரெட்டி நடித்திருக்கிறார். வெடிகுண்டுகள் சூழ்ந்த போலீஸ் நிலையம் அபாயத்தில் இருப்பதைப் புரிந்துகொண்டு, திருமண அழைப்பிதழ் வினியோகிக்கும் தன் சொந்த வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, டூட்டியில் இருப்பது போலவே பரபரப்பாக இயங்கி, நிலைமையை துரிதமாக தன் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.

வெடிகுண்டு பொருத்தப்பட்ட நாற்காலி மீது ’திக் திக்’ என பதற்றத்துடன் அமர்ந்திருக்கும் ரைட்டர் செல்லமுத்துவாக மூணார் ரமேஷ் நடித்திருக்கிறார். மகனுக்கு சீட்டு வாங்க கல்லூரிக்குப் போக வேண்டிய நிலையில் எழுந்து போக முடியாமலும், எழுந்து போக முடியாததால் போனில் மனைவியிடம் திட்டு வாங்கிக்கொண்டும் இருக்கும் சிக்கலான கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார்.

போலீசிடம் சிக்கி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டிருக்கும் திருடராக நடித்திருக்கும் தங்கதுரை, நகைச்சுவை வசனம் பேசி அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.

சக்திவேல் பாண்டியனின் காணாமல்போன மகன் ஜெய்யாக வரும் ஆதித்யா சிவகுமார், அவரது கல்லூரித் தோழி மற்றும் காதலி வர்னிகாவாக வரும் யுவினா பார்த்தவி, போலீஸ் நிலையத்தை நீதிமன்றம் ஆக்கி நீதி விசாரணை செய்யும் பெண் நீதிபதியாக வரும் வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுப்ரமணியன் ரமேஷ்குமார். அதிகாரத் திமிரில் பெண்களுக்கு எதிராக கொடூர குற்றம் இழைக்கும் இளைஞர்களைப் பழி வாங்குவது என்ற கதைக்கருவை மையமாகக் கொண்டு, எந்த இடத்திலும் சஸ்பென்ஸ் வெளிப்பட்டு விடாதபடி இறுக்கமாக திரில்லர் பாணியில் வித்தியாசமாக திரைக்கதை அமைத்து, எதிர்பாராத திருப்பங்களுடன் பார்வையாளர்களை பதற்றத்துடன் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வண்ணம் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் படத்தை திறம்பட நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர்.

குணா பாலசுப்ரமணியன் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

பெரும்பாலான காட்சிகள் ஒரே இடத்தில் (போலீஸ் நிலையத்தில்) நடக்கின்றன என்ற எண்ணமோ, சோர்வோ ஏற்படாதவாறு தன் கேமரா கோணங்களில் புகுந்து விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ்.

நாகூரான் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு, தாமுவின் கலை இயக்கம் உள்ளிட்ட ஏனைய தொழில்நுட்பங்களும் படத்தின் தரத்தை உயர்த்த உறுதுணையாக இருந்துள்ளன.

‘ரைட்’ – பார்வையாளர்களை இருக்கை நுனியில் கட்டிப்போடும் அருமையான, பரபரப்பான சஸ்பென்ஸ் – த்ரில்லர்! அனைத்துத் தரப்பினரும் பார்த்து மகிழலாம்!

ரேட்டிங்: 3.3/5