அர்ஜுன் தாஸின் ‘பாம்’ திரைப்பட நடிப்பு, அரசுகளின் விருதுகள் பெற தகுதி வாய்ந்தது!

நடிகர் அர்ஜுன் தாஸ் என்றாலே அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது அவரது தனித்துவமான, கம்பீரமான, ஆளுமை மிக்க காந்தக் குரல் தான். தனது அழுத்தமான குரலாலும், சிறப்பான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களை மட்டுமல்ல, தெலுங்கு ரசிகர்களையும் பெருமளவில் கவர்ந்திழுத்து வைத்திருக்கும் இவர், லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, மற்றும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ போன்ற பல படங்களில் வில்லனாகவும், பிஜோய் நம்பியாரின் ‘போர்’, சாந்தகுமாரின் ’ரசவாதி’, வசந்த பாலனின் ‘அநீதி’ போன்ற தரமான சில படங்களில் நாயகனாகவும் நடித்து, தனி முத்திரை பதித்து, திரையுலகில் இன்று மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கப்படும் முன்னணி நடிகர்களில் முதன்மையானவராகத் திகழ்கிறார்.
எவ்வளவு சிக்கலான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பக்குவமாகவும், கச்சிதமாகவும் தன்னைப் பொருத்திக்கொண்டு, அருமையான நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர் என பெயர் பெற்றிருக்கும் அர்ஜுன் தாஸ், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் திரைக்கு வந்திருக்கும் ‘பாம்’ திரைப்படத்தில், கமர்ஷியல் காமெடி ஹீரோவாக முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்து, பேசுபொருள் ஆகியிருக்கிறார். இப்படத்தில் அவர் மாடுகளுக்கு லாடம் கட்டும் தொழில் செய்யும் கிராமத்து இளைஞராக வலம் வருகிறார்…

‘பாம்’ திரைப்படக் கதையின் அவுட்லைன் என்னவென்றால், நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ’எல்லோருக்கும் எல்லாம்’ என்ற சமத்துவ வாழ்க்கை கோலோச்சிய ‘காளக்கம்மாய்பட்டி’ கிராமம், அதன்பின்னர் சாதி, மத பிளவுகளால் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, ‘காளப்பட்டி’ கிராமம் என்றும், ’கம்மாய்பட்டி’ கிராமம் என்றும் இரண்டாக பிரிந்துவிடுகிறது. விளைவாக, தற்காலத்தில் தீண்டாமை மற்றும் மதவாதம் காரணமாக இரண்டு கிராமங்களின் மக்களும் பரஸ்பரம் வெறுப்புடன் தினமும் சண்டை, சச்சரவு என்று நிம்மதியற்று வாழ்ந்து வருகிறார்கள். இது குறித்து வேதனை அடையும் இளைஞர் மணிமுத்துவும் (அர்ஜுன் தாஸ்), அவரது நண்பரும் பகுத்தறிவாளருமான கதிரும் (காளி வெங்கட்) இரு கிராமங்களும் வேற்றுமைகளைக் களைந்து ஒரே ஊராக மாறி விடாதா? என்று ஏங்குகிறார்கள். இந்நிலையில், கதிர் திடீரென இறந்துவிட, உலகில் எங்கும் இல்லாத அதிசயமாக அவரது பிணம் ‘பாம்’ (குசு) போட, இரு கிராம மக்களும் திகைக்கிறார்கள். கதிர் மீது சாமி வந்திருப்பதாகக் கருதி வழிபட ஆரம்பிக்கிறார்கள். இந்த விசித்திர நிகழ்வை கையிலெடுக்கும் மணிமுத்து, அதை பயன்படுத்தி, தனது நண்பர் கதிர் விரும்பியது போல் இரு கிராமங்களையும் புத்திசாலித்தனமாக எப்படி ஒற்றுமைப்படுத்தினார் என்பது தான் ‘பாம்’ திரைப்படத்தின் காமெடியும், கருத்தும் கலந்த மீதிக்கதை.
”பாம் (குசு)’ போடும் பிணம்” என்ற புதுமையான, நகைச்சுவையான ஐடியா மீது முற்போக்கான சமூகக் கருத்துக்களுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த காமெடி படம், ‘குடும்பங்கள் குதூகலமாய் கொண்டாடும் படம்’ என்பதை, இப்படம் திரைக்கு வருவதற்கு முதல் நாள் (செப்டம்பர் 11 அன்று) சென்னை சத்யம் திரையரங்கில் நடத்தப்பட்ட ‘ஃபேமிலி ஷோ’வில் இந்த படத்தைப் பார்த்த குடும்பங்கள் உற்சாகமாகத் தெரிவித்த பாசிட்டிவ் கருத்துகள் நிரூபிக்கின்றன.

இக்கதையின் நாயகனாக, மாடுகளுக்கு லாடம் கட்டும் தொழில் செய்யும் மணிமுத்துவாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் அசத்தியிருக்கிறார். நடை, உடை, பாவனை, பணிவு என அனைத்திலும் எளிமையான, யதார்த்தமான கிராமத்து மனிதரை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். முந்தைய படங்களைப் போல் இல்லாமல், அவர் அதிரடி ஆக்ஷனைத் துறந்து, வலிமையான மூளை கொண்ட சாதுவாக வருவது புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கிறது. குடியடிமையான நண்பர் கதிரை, முகம் சுழிக்காமல் தினமும் ’உப்பு மூட்டை’ போல் முதுகில் சுமந்து செல்லும் காட்சிகள், அவருக்கு பார்வையாளர்களின் அன்பை வாரி வழங்கியுள்ளன. நண்பரை மட்டும் அல்ல, இந்த கதையையும் ஒற்றை ஆளாக தன்னால் தான் சுமக்க முடியும் என்பதையும் அர்ஜுன் தாஸ் நிரூபித்திருக்கிறார். எல்லை மீறாமல் அவர் கண்களால் பேசும் காதல், நிஜம் போலவே இருக்கிறது. ஒரு காட்சியில், “உன் குரலுக்கு, நீ ஒரு குரல் குடுத்து ஒரு அடி முன்னே வச்சா இந்த ஊரே உன்னைப் பாத்து பயப்படும்” என்று இவரிடம் நண்பர் கதிர் சொல்லும்போது, திரையரங்கில் விசில் பறக்கிறது. இரண்டு ஊர்களும் ஒன்றுபட வேண்டும் என்ற கதிரின் நிறைவேறாத ஆசையை, கதிரின் பிணத்தைக் கொண்டே நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்து, சாமி வந்தது போல் ஆடும் அர்ஜுன் தாஸ், முகத்தில் குங்குமத்தை பூசிக்கொண்டு, கைகளில் வளையல் அணிந்துகொண்டு, தனது கம்பீரமான காந்தக் குரலில் குறி சொல்லும்போது திரையரங்கே சிலிர்ப்பில் ‘கப்சிப்’ என்று அமைதியாகி விடுகிறது.
மொத்தத்தில் படம் முழுக்க பார்வையாளர்களை தன்வசப்படுத்தி வைத்துக்கொள்வதில் அர்ஜுன் தாஸ் வெற்றி பெற்றுள்ளார். இப்படத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ள யதார்த்தமான சிறந்த நடிப்புக்கு அரசுகளின் விருதுகள் கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!
வாழ்த்துகள் அர்ஜுன் தாஸ்…!
-ராஜய்யா