பாம் – விமர்சனம்

நடிப்பு: அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, கிச்சா ரவி, பூவையார், சில்வென்ஸ்டென், (எப்புட்ரா) ரோஹன், காவ்யா மற்றும் பலர்

இயக்கம்: விஷால் வெங்கட்

கதை & திரைக்கதை: மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரிசன், விஷால் வெங்கட்

வசனம்: மகிழ்நன் பிஎம்

ஒளிப்பதிவு: பி.எம்.ராஜ்குமார்

படத்தொகுப்பு: பிரசன்னா ஜிகே

இசை: டி.இமான்

தயாரிப்பு: ‘ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ்’ சுதா சுகுமார் – சுகுமார் பாலகிருஷ்ணன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்), சிவா

தமிழ் திரையுலகில் தற்போது மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கப்படும் முன்னணி நடிகர்களில் முதன்மையானவர் அர்ஜுன் தாஸ். தனது கம்பீரமான காந்தக் குரலால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திழுத்து வைத்திருக்கும் இவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாகத் தன்னைப் பொருத்திக்கொண்டு, தனது தனித்துவமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவதில் வல்லவர் என பெயர் பெற்றிருப்பவர். லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டியுள்ள அர்ஜுன் தாஸ், பிஜோய் நம்பியாரின் ‘போர்’, சாந்தகுமாரின் ’ரசவாதி’, வசந்த பாலனின் ‘அநீதி’ போன்ற வித்தியாசமான படங்களில் நாயகனாக ஜொலித்து கவனம் ஈர்த்தவர். அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் வில்லனாகத் தோன்றியபோதிலும், இரட்டை வேடம், ஆட்டம், பாட்டம், ஆக்‌ஷன், நடிப்பு என சகல திறமைகளையும் வெளிப்படுத்தி பாராட்டு பெற்றவர். இப்படி பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து, பாராட்டுகளைக் குவித்து, நாள்தோறும் உயர்ந்து வரும் அர்ஜுன் தாஸ், ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப் புகழ் விஷால் வெங்கட் இயக்கியுள்ள ‘பாம்’ என்ற காமெடி படத்தில் முதல்முறையாக காமெடி கமர்ஷியல் ஹீரோவாக களம் கண்டிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தற்போது திரைக்கு வந்திருக்கும் இந்த ‘பாம்’ எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

தூங்க மறுத்து, கதை சொல்லுமாறு அடம் பிடிக்கும் பேத்திக்கு, பாட்டியின் குரல் சொல்லும் கதையாக இப்படக்கதை ஆரம்பமாகிறது…

”…நூறு வருசத்துக்கு முன்னாடி நடந்த கதை இது. அப்ப, ஒரு மலையடிவாரத்துல ‘காளக்கம்மாய்பட்டி’ன்னு ஒரு கிராமம் இருந்துச்சு. அங்கே வாழ்ந்த ஜனங்களெல்லாம் ஒண்ணுக்கு ஒண்ணு துணையா, ஒத்துமையா சந்தோசமா வாழ்ந்து வந்தாங்க. வருஷத்துல ஒருநாள் அந்த மலை உச்சிக்கு வரும் ஒத்த மயில், வானத்தைப் பாத்து கூவும். அதை நல்ல சகுனமா எடுத்துக்கிட்டு ஊர் ஜனங்க மொத்தமும் கூடி ’சாங்கியம்’ (சடங்குகள்) செய்ய ஆரம்பிக்கும். கடைசி சாங்கியம் செய்யுற அன்னிக்கி அந்த மலை மேல வெளிச்சமா ஜோதி தெரியும். அந்த ஜோதியைப் பாத்து எல்லாரும் பயபக்தியோட கும்பிடுவாங்க. அப்ப நோய் நொடி இல்லாம, எல்லாருக்கும் எல்லாமும் கிடைச்சது. இப்படியே வருசா வருசம் நடந்து வந்துச்சு. ஒருநாள் அந்த மலை மேலே இருந்து ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து, அந்த கிராமத்துல விழுந்து ரெண்டா உடைஞ்சது. ஊர்ஜனங்களும் ரெண்டு கூட்டமா பிரிஞ்சு, பெரிய கல்லை ஒரு கூட்டமும், சின்னக்கல்லை இன்னொரு கூட்டமும் ’சாமி’ன்னு நெனைச்சு கும்பிட ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்குப் பெறகு ஓஞ்சாமி பெருசா, ஏஞ்சாமி பெருசான்னு சண்டை போட ஆரம்பிச்சு, சாதியா ஏற்றத்தாழ்வை வளத்து, தீண்டாமையை கடைப்பிடிக்கத் துவங்கிட்டாங்க. ஒரே ஊரா ‘காளக்கம்மாய்பட்டி’யா இருந்தது, இப்ப “தாழ்ந்தவங்க”ன்னு குத்திக் காட்டப்படுறவங்க வாழ்ற ‘காளப்பட்டி’,
“நாங்க உயர்ந்தவங்க”ன்னு நினைச்சுக்கிறவங்க வாழ்ற ’கம்மாப்பட்டி’ன்னு ரெண்டு ஊராகி, எப்பவும் சண்டையும் சத்தமுமாவே கிடக்கு. இப்பல்லாம் மயிலு, ஜோதி வர்றதில்ல. மனுசர்களும் நோய்வாய்ப் படுறது, பிள்ளையில்லாம போறதுன்னு பெரிய துன்பமா போச்சு…”

தற்காலத்திலும் அந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வும், விரோதமும், தகராறும் மண்டிக் கிடக்கிறது. அவர்களுக்குள் ஒற்றுமையையும் சமாதானத்தையும் ஏற்படுத்த மாவட்ட பெண் ஆட்சியாளர் (அபிராமி) முயலுகிறார். பலனில்லை. ஓர் சுயநல அரசியல்வாதி (நாசர்) இம்மக்களின் அமைதியின்மையைப் பயன்படுத்தி சுயலாபம் அடைய திட்டம் தீட்டுகிறார்.

இந்நிலையில், உழைக்கும் மக்கள் வாழும் காளப்பட்டியைச் சேர்ந்தவர் நாயகன் மணிமுத்து (அர்ஜுன் தாஸ்). மாடுகளுக்கு லாடம் கட்டும் தொழில் செய்து வருபவர். அவரது உயிர் நண்பர் கதிர் (காளி வெங்கட்). கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர். இருவரும் இந்த ஊர்களின் பிரிவினையையும் மூடத்தனங்களையும் வெறுக்கிறார்கள்; வருந்துகிறார்கள். “இவங்களைத் திருத்த முடியாது. வா… வேற ஊருக்குப் போய் பொழச்சுக்கலாம்” என்று அழைக்கிறார் மணிமுத்து. ஆனால் கதிரோ, ”நான் எங்கேயும் வர மாட்டேன். இந்த ரெண்டு ஊரும் முன்ன மாதிரி ஒண்ணா ஒத்துமையா இருக்கணும். அதை நான் பாக்கணும்” என்று பிடிவாதமாகச் சொல்லிவிடுகிறார். மேலும், மனவேதனையில் அவர் குடித்துவிட்டு, கண்ட இடத்திலும் மட்டையாகிக் கிடக்கிறார். அவரை, உயிர் நண்பரான மணிமுத்து தூக்கி, ’உப்பு மூட்டை’ மாதிரி முதுகில் சுமந்துகொண்டு போய், கதிரின் வீட்டில் படுக்க வைப்பதை தினமும் ஒரு வேலையாகவே செய்து வருகிறார். மணிமுத்துவைக் காதலிக்கும் கதிரின் தங்கை பிரபா (ஷிவாத்மிகா ராஜசேகர்), நாள்தோறும் நடக்கும் இந்த சோக நிகழ்வைப் பார்த்து, கையறு நிலையில் துயருறுகிறார்..

ஓரிரவு. குடிபோதை மயக்கம் தெளியாமலே பரிதாபமாக இறந்து போகிறார் கதிர். அவரது உடலை மணிமுத்துவைத் தவிர வேறு யாராலும், எத்தனை பேர் சேர்ந்து தூக்க முயன்றாலும், அசைக்கக் கூட முடியவில்லை. ஏன் இப்படி என்று ஒரே குழப்பம். இந்நிலையில், கதிரின் உறவினர்களும் நண்பர் மணிமுத்துவும் அவரை நல்லடக்கம் செய்வதற்கான வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிரின் உடல் சில நொடிகள் இலேசாய் குலுங்கி பின், “பாம்” (குசு) போடுகிறது! இதை பார்க்கும் மணிமுத்து, “கதிர் சாகலே” என்று தனது அழுத்தமான காந்தக் குரலில் உரக்கச் சொல்ல, இறந்தவர் ”பாம்” போட முடியுமா? என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். இது குறித்து பூசாரியிடம் கேட்க, பூசாரி அருள் வந்து, “கதிரோட உடம்பில் சாமி இறங்கியிருக்கு” என்று கப்ஸா விட, இரண்டு கிராம மக்களும் இதை நம்பி, கதிரின் உடலை நாற்காலியில் உட்கார வைத்து, அவரை சாமியாகவே கும்பிட ஆரம்பித்துவிடுகிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண் கருவுறுவது போன்ற நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நடக்கவே இரண்டு கிராம மக்களும் முழுமையாகவே நம்பிவிடுகிறார்கள்.

இதற்கிடையே, வந்திருக்கிற சாமி எந்த கிராமவாசிகளுக்குச் சொந்தம்? என்ற சர்ச்சை கிளம்ப, மீண்டும் தகராறு வெடிக்கிறது. அதன்பிறகு என்ன நடந்தது? கதிர் உண்மையில் இறந்து விட்டாரா, இல்லையா? இறந்துவிட்டார் எனில், பிணம் “பாம்” போடுகிறதே… எப்படி? கதிர் விரும்பியது போல், இரு கிராமங்களும் இறுதியில் ஏற்றத் தாழ்வைத் துறந்து ஒன்றுபட்டார்களா,? இதற்கு மணிமுத்து எடுத்த முயற்சிகள் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு நகைச்சுவை ததும்ப, சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் விடை அளிக்கிறது ‘பாம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, மாடுகளுக்கு லாடம் கட்டும் தொழில் செய்யும் மணிமுத்துவாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் அசத்தியிருக்கிறார். நடை, உடை, பாவனை, பணிவு என அனைத்திலும் எளிமையான, யதார்த்தமான கிராமத்து மனிதரை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். முந்தைய படங்களைப் போல் இல்லாமல், அவர் ஆக்‌ஷனைத் துறந்து, வலிமையான மூளை கொண்ட சாதுவாக வருவது புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கிறது. குடியடிமையான நண்பரை, முகம் சுழிக்காமல் தினமும் ’உப்பு மூட்டை’ போல் முதுகில் சுமந்து செல்லும் காட்சிகள், அவருக்கு பார்வையாளர்களின் அன்பை வாரி வழங்கியுள்ளன. நண்பரை மட்டும் அல்ல, இந்த கதையையும் ஒற்றை ஆளாக தன்னால் தான் சுமக்க முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார். எல்லை மீறாமல் அவர் கண்களால் பேசும் காதல், நிஜம் போலவே இருக்கிறது. ஒரு காட்சியில், “உன் குரலுக்கு, நீ ஒரு குரல் குடுத்து ஒரு அடி முன்னே வச்சா இந்த ஊரே உன்னைப் பாத்து பயப்படும்” என்று இவரிடம் நண்பர் கதிர் சொல்லும்போது, திரையரங்கில் விசில் பறக்கிறது. இரண்டு ஊர்களும் ஒன்றுபட வேண்டும் என்ற கதிரின் நிறைவேறாத ஆசையை, கதிரின் பிணத்தைக் கொண்டே நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்து, சாமி வந்தது போல் ஆடும் அர்ஜுன் தாஸ், முகத்தில் குங்குமத்தை பூசிக்கொண்டு, கைகளில் வளையல் அணிந்துகொண்டு, தனது கம்பீரமான காந்தக் குரலில் குறி சொல்லும்போது திரையரங்கே சிலிர்ப்பில் ‘கப்சிப்’ என்று அமைதியாகி விடுகிறது. மொத்தத்தில் படம் முழுக்க பார்வையாளர்களை தன்வசப்படுத்தி வைத்துக்கொள்வதில் அர்ஜுன் தாஸ் வெற்றி பெற்றுள்ளார். இப்படத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ள யதார்த்தமான சிறந்த நடிப்புக்கு அரசுகளின் விருதுகள் கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நாயகனின் நண்பராக, நல்லெண்ணம் கொண்ட குடியடிமை கதிராக காளி வெங்கட் நடித்திருக்கிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் தன் அனுபவ நடிப்பால் தனி முத்திரை பதித்துவிடும் இவர், இதிலும் அதைச் செய்யத் தவறவில்லை. முக்கால்வாசி படத்தில் அவர் பொறுமையுடன் சடலமாக நடித்துள்ள போதிலும், அவர் இறப்பதற்கு முன் வரும் காட்சிகளில் உருக்கமாக நடித்து, பார்வையாளர்களின் உள்ளங்களைத் தொட்டுவிடுகிறார்.

கதிரின் தங்கையாக, நாயகனின் காதலி பிரபாவாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, நல்ல நடிப்பையும் பதிவு செய்திருக்கிறார்.

மாவட்ட பெண் ஆட்சியராக வரும் அபிராமி, தீய எண்ணம் கொண்ட அரசியல்வாதியாக வரும் நாசர், மேல்தட்டு மக்கள் வசிக்கும் ஊரின் தலைவராக வரும் சிங்கம்புலி, சப்ஸ்கிரைப்பர்களை அதிகப்படுத்துவதற்காக மெனக்கெடும் யு-டியூப் சேனல் ஆசாமியாக வந்து சிரிக்க வைக்கும் பாலசரவணன், குழந்தை பாக்கியம் இல்லாதவராக வரும் டிஎஸ்கே, அடுத்த ஊர் தலைவரின் அதிகார நாற்காலியில் அமர்ந்து பார்க்க ஆசைப்படும் விடலைப்பையனாக வரும் பூவையார், மற்றும் கிச்சா ரவி, சில்வென்ஸ்டென், (எப்புட்ரா) ரோஹன், காவ்யா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட். இவர் இயக்கிய முந்தைய படமான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்காக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது போல இந்த படத்துக்கும் பாராட்டு பெறுவது மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெறுவார் என்பது நிச்சயம். கற்பனையான கிராமத்தை உருவாக்கி, அங்கு நிலவும் மெய்யான சாதி, மத ஏற்றத் தாழ்வுகளை கேலியோடும், வலியோடும் உருவகமாக சுட்டிக்காட்டி, பார்வையாளர்களை நெளிய விடாமல் காமெடியாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை முற்போக்கு திசையில் நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநருக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள்.

“பாம் போடும் பிணம்’ என்ற புதுமையான, காமெடியான ஐடியாவை எங்கேயோ, எப்படியோ பிடித்து கதை, திரைக்கதை எழுதியிருக்கும் மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரிசன், விஷால் வெங்கட், இயல்பான வார்த்தைகளில் கனமான விஷயங்களைச் சொல்லியிருக்கும் வசனகர்த்தா மகிழ்நன், கதையோடு பயணிக்கும் இசை தந்த டி.இமான், கிராமத்துச் சூழலையும், கிராமிய மனிதர்களையும் பார்வையாளர்களின் நெஞ்சுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து காட்டிய ஒளிப்பதிவாளர் பி.எம்.ராஜ்குமார் உள்ளிட்ட இப்படத்தின் வெற்றிக்கு உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

‘பாம்’ – காமெடி மூலமாகவே ஏற்றத் தாழ்வுகளைத் தகர்க்கும் வெடிகுண்டு! அவசியம் பார்த்து மகிழலாம்!

ரேட்டிங்: 4.25/5.