”ரவி மோகன் ஸ்டுடியோஸின் வெற்றி தான் எங்களுடைய கனவு!” – பாடகி கெனிஷா

நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘ஆர்டினரி மேன்’ படத்தின் அறிமுகம், அவரது தயாரிப்பில் இயக்குநர் கார்த்தி யோகியின் “BROCODE” திரைப்பட்த்தின் அறிமுகம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர்.

இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீகௌரி பிரியா, மணிகண்டன், கண்ணா ரவி, அர்ஜுன் அசோக், மாளவிகா மனோஜ், ரித்தீஷ், ஜெனிலியா, பேரரசு என பலர் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.

இவ்விழாவில் பாடகி கெனிஷா பேசும்போது,

”அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு பாடகி, இசை தயாரிப்பாளர், ஆன்மீக சிகிச்சையாளர், தற்போது ரவி மோகன் ஸ்டுடியோஸின் பங்குதாரர். இந்த வாய்ப்பை வழங்கிய ரவி மோகன் அவர்களுக்கு நன்றி. கடவுளுக்கும், பிரபஞ்சத்துக்கும் நன்றி. அம்மா, அப்பா மற்றும் ராஜா அண்ணா அவர்களுக்கு நன்றி. நான் நீண்ட காலமாக தனிமையில் இருந்தேன். இப்போது ரவி அவர்களின் மூலம் இப்படி அழகான மனிதர்கள் கிடைத்துள்ளார்கள்.

நான் மிகவும் கடினமான சூழலில் இருந்து வந்த ஒருவர். ரவி அவர்கள் மிகவும் சிறப்பான ஒரு சூழலில் இருந்து வந்தவர். நாங்கள் இருவரும் இணைந்து, ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை பெரிய அளவில் பிரபலமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். எங்களின் கனவும் அது தான். எங்களுடைய குழு இல்லாமல் இன்றைய நாள் சாத்தியம் ஆகிருக்காது.

ரவி அவர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் வாழ்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையை கடந்து வந்து இருக்கிறார். அவருக்கு என்ன சோகம் இருந்தாலும், வலி இருந்தாலும் வெளியில் அதை காட்டிக் கொள்ளாமல் மற்றவரிடம் பழகுவார். அது சரி தான். ஆனால், நீங்கள் யார் உங்களிடம் வந்தாலும், அவர் இருளில் இருந்தாலும் நீங்கள் அவர் வாழ்கையை வெளிச்சமாக மாற்றி விடுகிறீர்கள். இப்போது என்னிடம் 7 முழு ஸ்கிரிப்ட் உள்ளது. அவ்வளவு திறமையான நீங்கள், உங்களின் அனைத்து திறமைகளையும் இந்த உலகம் பார்க்க வேண்டும். எனக்கு மிகப் பெரும் பேராசை உள்ளது. என்னவென்றால், இந்த உலகத்திலுள்ள அத்தனை மனிதரும் உங்களுக்குள் இருக்கும் கடவுளை பார்க்க வேண்டும். அந்த கடவுளை நான் பார்த்து விட்டேன். வெற்றிக்கான நாட்கள் குறைவாக தான் உள்ளது. அதற்காக நீங்கள் அதிக உழைப்பை கொடுத்துள்ளீர்கள்.

நீங்கள் ஒருநாள் வரலக்ஷ்மி அம்மாவுடன் இருந்தால் தெரியும், ரவி மோகன் அவர்கள் ஏன் இவ்வளவு சிறந்த மனிதராக இருக்கிறார் என்று. இப்படிப்பட்ட ஒருவரை கொடுத்ததற்கு நன்றி அம்மா. இங்கு வருகை தந்திருக்கும் அனைவர்க்கும் நன்றி” என்றார்.