பிரம்மாண்டமாக தொடங்கிய ’ரவி மோகன் ஸ்டுடியோஸ்’: திரை பிரபலங்கள் வாழ்த்து!

நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘ஆர்டினரி மேன்’ படத்தின் அறிமுகம், அவரது தயாரிப்பில் இயக்குநர் கார்த்தி யோகியின் “BROCODE” திரைப்படத்தின் அறிமுகம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர்.

இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீகௌரி பிரியா, மணிகண்டன், கண்ணா ரவி, அர்ஜுன் அசோக், மாளவிகா மனோஜ், ரித்தீஷ், ஜெனிலியா, பேரரசு என பலர் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பேசும்போது,
”இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம்முடைய கனவை திரையில் கொண்டு வரக்கூடிய மிகவும் பொறுப்பு மிகுந்த விஷயம். ரவிமோகனை எனக்கு அவ்வளவாக தெரியாது. நான் சார் என்று தான் கூப்பிடுவேன். சினிமா துறையில் அவர் என்னைவிட சீனியர்.
’பராசக்தி’ படத்தின்போது தான் அவருடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நல்ல மனிதர். அவருடைய படங்களை பார்த்து, அவர் இப்படித்தான் இருப்பார் என்று நமக்கு ஒரு எண்ணம் இருக்கும். அவர் அப்படியேதான் இருக்கிறார். இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மட்டுமில்லாமல் நேற்று எனக்கு போன் செய்து, நாளைக்கு நிச்சயம் வந்துருங்க ப்ரோ என்று நினைவுபடுத்தினார்.
இங்கு வந்து பார்த்த பிறகு அவருக்குள் இருக்கும் அத்தனை கனவுகளும் ஒரு நடிகராக, தயாரிப்பாளராக பொறுப்பேற்று என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து இருக்கிறார். ப்ரோ கோட் படத்தின் புரோமோவை திருட்டுத்தனமாக நான் பத்து நாட்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இயக்குனர் கார்த்திக் யோகி எனக்கு காண்பித்தார். எனக்கு மிகவும் பிடித்த ஜானர். அப்போதே, முதல் பாதியை காண்பித்து விட்டீர்கள், அடுத்த பாதியை எப்போது காட்டப் போகிறீர்கள் என்று கேட்டேன். அந்த அளவிற்கு மிகவும் நகைச்சுவையாக இருந்தது. ப்ரோ கோட் என்ற பெயரே சூப்பர். பெயரிலேயே அனைத்தும் வந்துவிட்டது. ரவி மோகன் ஸ்டுடியோஸில் நடிகராக நீங்கள் பணியாற்றி இருக்கும் ப்ரோ கோட் படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.
அடுத்து, யோகி பாபு சாருக்கு வாழ்த்துகள். அவருடைய நகைச்சுவைக்கு அவர் எப்போதும் எல்லை வகுத்துக் கொண்டதே கிடையாது. ஆர்டினரி மேன் உடைய வாழ்க்கை ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி பயணமாக இருக்கும் என்பதை கூறுவது தான் இந்த படம். அதுக்கு பொருத்தமானவர் யோகி பாபு தான். ஆனால் அவரிடம் கேட்டால், குரு, நான் காமெடி நடிகன் என்பார். ஆனால், அவருக்குள் ஒரு ஹீரோ இருக்கிறார் என்பதை படத்தை பார்த்தால் தெரியும்.
ஒரு நடிகர் இயக்குனர் ஆவது சாதாரண விஷயம் அல்ல. சிறு வயது முதலே சினிமாவில் பயணித்ததால் அந்த நம்பிக்கை அவருக்கு வந்திருக்கிறது. எல்லோருக்கும் இயக்குனராக வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால், எல்லோராலும் ஒரு படத்தை இயக்கி விட முடியாது. அதேபோல், எல்லா நடிகர்களுக்கும் இயக்குனராகும் தகுதி வந்து விடாது. ஆனால், ரவி மோகனுக்கு இருக்கிறது. அடுத்து கார்த்தியும் படம் இயக்குவார் என்று நம்புகிறேன். அவருக்குள்ளும் இயக்குனர் இருக்கிறார். அதேபோல், மணிகண்டனும் விரைவில் இயக்குனர் ஆகி விடுவார் என்று நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.
இப்படத்தின் ப்ரோமோ பார்க்கும்போது நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிகிறது. ரவி மோகன் இயக்கும் ஆர்டினரி மேன் படமும் வெற்றியடைய வாழ்த்துகள்.
அடுத்து காக்கி ஸ்குவாட். இப்படத்தின் டீசர் பார்த்தேன். நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. கண்ணா ரவியுடைய மண்டேலா, குருதி ஆட்டம், இப்போது கூலி வரைக்கும் அவருடைய நடிப்பை பார்த்து வருகிறோம். அதேபோல் இந்த படத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் சக்தியையும் எனக்கு தெரியும். இதற்கு முன்பு மூன்று படம் இயக்கி இருக்கிறார். எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் ஆகவும் இருக்கிறார். எப்படி இரண்டு வேலைகளையும் செய்கிறார் என்று தெரியவில்லை.
இப்போது ரவி மோகன் ஸ்டுடியோ என்று இன்னொரு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது. தைரியமாக ஒரு கதையை நாம் தேர்வு செய்யலாம். நானும் அது போல ஒரு சில படங்களை அளித்துக் கொண்டிருக்கிறேன். இதுபோல இன்னும் ஒரு 15 தயாரிப்பு நிறுவனங்கள் வந்துவிட்டால், நிறைய நல்ல விஷயங்களை வெளிக்கொண்டு வர முடியும். எங்கள் மீது படும் வெளிச்சம் அதன் மீதும் பட்டால் இதுவரை மக்கள் எங்களுக்கு கொடுத்த இடத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தி இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மூன்று படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மூன்று படங்களின் வெற்றி விழாவிற்கும் அழையுங்கள். கண்டிப்பாக வந்து கலந்து கொள்வேன்.
நான் கல்லூரியில் படிக்கும்போது ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ படம் வந்தது. ஜெனிலியாவை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஜெனிலியா மற்றும் ரவி மோகனின் நடிப்பை பார்த்ததும் கல்லூரி நாட்கள் நினைவிற்கு வந்தது. இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்.
ரவி மோகன் தயாரிப்பில் அல்லது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். தயாரிப்பில் அவரை விட நான் சீனியர். ஆகையால் ரவி மோகன் சார், உங்களுக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் என்னிடம் தாராளமாக கலந்து கொள்ளலாம்.
’பராசக்தி’ படத்தில் நானும் ரவி மோகன் சாரும் நடித்ததை பற்றி கூறுவதற்கு நிறைய இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கூறுகிறேன்.
சிவராஜ் சாரை எங்க பார்த்ததில் மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் டாக்டர் சிவராஜ்குமார் பேசும்போது,
”ஜெயம் படத்தில் இருந்து இப்போது வரைக்கும் ரவி மோகனின் வளர்ச்சி அற்புதமான வளர்ச்சியாக இருக்கிறது. அவரை எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லை. ஆனாலும் அவர் படங்களை நான் பார்த்திருக்கிறேன். எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்வார்.
’சகலகலா வல்லவன்’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் சென்னை என்னுடைய ஊர். எனக்கு எப்போதும் சென்னை வருவது பிடிக்கும்.
சேகர் மற்றும் விஜய் பிரசாத் இருவரும் என்னுடைய பால்ய நண்பர்கள். 45 வருடங்களாக நாங்கள் நண்பர்கள். அவர்களுடன் இங்கு வந்திருக்கிறேன்.
’ஆர்டினரி மேன்’ என்று இப்படத்திற்கு அழகாக பெயர் வைத்திருக்கிறார்கள். சுருக்கமாக ஓம் என்று அழைக்கப்படும் இப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும். ஏனென்றால், ஓம் என்றாலே நேர்மறையான அதிர்வலைகள் தான் அங்கு இருக்கும்.
ரவி மோகனுடன் நான் இணைந்து நடித்தால், அண்ணனாகவோ நண்பனாகவோ – மெதுவாக இருந்தாலும் – நேர்மறையான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன்.
ரவி மோகனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். கார்த்திக் சாருக்கு நன்றி” என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது,
”என் நண்பன் ரவி தயாரிப்பாளராக ஆகும்போது ஒரு நண்பனாக நான் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்து பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தயாரிப்பு நிறுவனத்தை இவ்ளோ பெரிய விழாவாக நடத்தியதில்லை.
அது மட்டுமில்லாமல், அவர் ஏன் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்று கூறியபோது மிகவும் பெருமையாக இருந்தது. இப்போது தன்னை கை கொடுத்து தூக்கி விட மாட்டார்களா என்று பல திறமையான இயக்குனர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரவிக்கு அப்பா இருந்தார், அண்ணன் இருந்தார். ஆனால், அனைவருக்கும் நான் இருக்கிறேன் என்று ரவி கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. ப்ரோ கோட் என்பதை கேட்கும்போது புதுசாக இருக்கிறது. ஆர்வமாக இருக்கிறது.
ரவியை நான் முதன்முதலாக பார்த்தது எப்போது என்று கூற ஆசைப்படுகிறேன். நான் சினிமாவுக்கு வரும்போது சண்டை பயிற்சி வகுப்பிற்கு சென்றேன். அங்கு தான் ரவி அண்ணனை சந்தித்தேன். சாதாரணமாக நாங்கள் மூன்று அடியில் குதித்தால் ரவி அண்ணன் 10 அடியில் குதிப்பார். ஐயையோ, சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று பயந்தேன். பிறகு எங்களை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி கொடுப்பார். காசு கொடுத்தால், நீங்க எல்லாம் சின்ன பசங்க, காசு குடுக்க கூடாது என்று அவரே கொடுப்பார். சிறிது காலத்திற்கு பிறகு தான் அவர் என்னைவிட சின்ன பையன் என்று தெரிந்தது. அதன் பிறகு அண்ணா என்று கூப்பிட்டால் அடி விழும் என்று ரவி என்று கூப்பிட ஆரம்பித்தேன். பிறகு அவருடைய முதல் படத்தை பார்த்த பிறகு அவருடைய உடைகள் போன்று எல்லா விஷயங்களையும் பேசுவோம். அப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது.
’பொன்னியின் செல்வன்’ படத்தில் ரவியை பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன். ஏனென்றால் இந்தியாவிலேயே, தமிழ்நாட்டிலேயே ராஜாவாக நடிக்கப் போவது யார் என்ற ஒரு கேள்வி இருந்தது. தாய்லாந்தில் படப்பிடிப்பில் அவர் ராஜாவாக உக்கார்ந்திருந்ததை பார்த்தபோது ராஜாவுக்கு உரிய அனைத்து லட்சணங்களும் அவரிடம் இருந்தது. அதைவிட அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்றால் மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி. அதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.
இரவு உணவு நேரத்தில் எனக்கு ஒரு கதையை சொன்னார். அதை கேட்டதும் ஜிம் கேரி அளவிற்கு இருந்தது. அவருடைய ஒரு பக்கம் மட்டும் தான் நமக்கு தெரியும். ராஜா அண்ணா கூட திரையில் இன்னும் அதை காட்டவில்லை, யோகி பாபுவை வைத்து இயக்கும் படத்தில் அதை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ரவி எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார் என்று தான் நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவருக்குள் சீரியஸ் ஆன ஒரு மனிதர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. உலக சினிமா அனைத்தையும் அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு படத்தொகுப்பும் மிக நன்றாக தெரியும். அதாவது ஒருவன் படிக்காதது போன்று இருக்கும். ஆனால், நல்ல மார்க் எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?! அது போல் தான் ரவியும்”என்றார்.
இயக்குனர் ராஜா மோகன் பேசும்போது,
”ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும்போது அவனுக்கு 11 வயது. அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது இவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டி கொண்டிருந்து அவனை அண்ணார்ந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணார்ந்து பார்க்கிறேன்.
’புதுப்பேட்டை’ படத்தில் ஒரு வசனம் வரும். அது போல, இவ்வளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாயா? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. முதல் படத்தில் இருந்து இப்போது வரை நான் சொன்னதை கேட்டு இயக்குனரின் நடிகராக இருந்திருக்கிறான். இப்போது இயக்குனராக நிச்சயம் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ரவி நன்றாக இருக்க வேண்டும் என்று தான் மனதார நினைக்கிறார்கள். இவ்வளவு பேரை அவன் சம்பாதித்து வைத்திருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
நடிகர் யோகி பாபு பேசும்போது,
”கோமாளி’ படத்தில் பணியாற்றும்போது ரவி, நான் படம் இயக்கினால் நீங்கள் தான் ஹீரோ என்று கூறினார். ஆறு வருடம் கழித்தும் அதை மறக்காமல் இன்று நிறைவேற்றி இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.
இயக்குனர் கார்த்திக் யோகி பேசும்போது,
”இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஏனென்றால், தேதியும் கொடுத்து, காசும் கொடுத்து, படமும் கொடுத்து தயாரிப்பது என்பதை நான் ஆசீர்வாதமாக நினைக்கிறேன். முதலில் இந்த கதையை அண்ணா நம்பினார். பிறகு இத்தனை பேர் இந்த கதையை நம்பி இந்த படத்திற்காக வந்தது மிகவும் மகிழ்ச்சி. நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி. மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து இப்படத்தை மாபெரும் வெற்றி படமாக உருவாக்க எல்லாவித முயற்சிகளையும் எடுப்பேன்” என்றார்.
இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசும்போது,
”முதலில் ரவி மோகன் சார் கதை கேட்க சொன்னார். கார்த்திக் சார் வந்து கதை சொன்னார். கதை கேட்டதுமே பிடித்து விட்டது. இப்போது வரும் படங்களில் குடும்பத்துடன் சந்தோஷமாக பார்க்கக்கூடிய காதலோடு நகைச்சுவையோடு உணர்வுபூர்வமான பயணத்தை இன்றைய சினிமா இழந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அம்சத்தில் இந்த படம் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. ப்ரோ கோட் என்கிற விஷயம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும். ரவி மோகன் ஸ்டுடியோஸ் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அதிலும் முதல் படமாக இது வருவது நல்ல விஷயம். கதை கேட்டதும் பிடித்திருந்தால் உள்ளே குதித்து விடுவேன். கதைப் பிடித்து இருக்கிறது என்று ரவி சாரிடம் கூறினேன். அதன் பிறகு ஒவ்வொரு வேலையாக ஆரம்பித்து இன்று பூஜை வரை வந்திருக்கிறது. பெரிய நடிப்பு பட்டாளங்கள் இப்படத்தில் இருக்கிறார்கள்” என்றார்.
ரித்தீஷ் தேஷ்முக் பேசும்போது,
”என்னுடைய கல்யாணத்திற்கு ரவி மோகன் மற்றும் ராஜா மோகன் கொடுத்த வரதட்சணை தான் ’சந்தோஷ் சுப்பிரமணியம்’. ஏறத்தாழ 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து இயக்குனராக அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி மற்றும் அவருடைய எல்லா படங்களும் வெற்றி அடைய வாழ்த்துகள். மேலும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ சிங்கம். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சிங்கம் போல் வெற்றி பெற்று கர்ஜிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகை ஜெனிலியா ரித்தேஷ் பேசும்போது,
”சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் பார்த்த ரவியை, இன்று தயாரிப்பாளராக இயக்குனராக பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எப்போதும் அன்பாக ஆத்மார்த்தமாக பழகக் கூடியவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேசும்போது,
”இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த ரவி மோகன் சாருக்கு நன்றி. ரவி மோகன் ஸ்டுடியோஸின் முதல் படம் மட்டுமல்ல, இனி வரும் அடுத்தடுத்த எல்லா படங்களும் வெற்றியாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதற்காக எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்வோம். இப்படத்தின் பிரமோ படப்பிடிப்பிற்காக எஸ்.ஜே.சூர்யாவை பார்த்தபோது மிகவும் வியந்தேன். படப்பிடிப்பில் அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பேன். எஸ்.ஜே.சூர்யா சாரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
இப்படக்குழு அனைவருக்கும் நன்றி . இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் மீடியா அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் நன்றி” என்றார்.
நடிகை மாளவிகா மனோஜ் பேசும்போது
”அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி, ரவி மோகன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி. இப்படம் மிகப் பெரிய வெற்றியடையும் என்ற நம்புகிறேன்” என்றார்.
அர்ஜுன் அசோக் பேசும்போது
”மிகப்பெரிய தருணம் இது. இந்த வாய்ப்பைக் கொடுத்த ரவி மோகன் சார் அவர்களுக்கு நன்றி. எஸ் ஜே சூர்யா சார், கார்த்திக் அனைவருக்கும் நன்றி. மிகப்பெரிய பொறுப்பு இது. இப்படம் வெற்றி பெற சிறப்பாக பணியாற்றுவேன்” என்றார்.
ஸ்ரீ கௌரி பிரியா பேசும்போது,
”இந்த அரங்கத்திற்கு வந்த உடனே மிகவும் நேர்மறையான அதிர்வலைகள் உணர்ந்தேன். ரவி மோகன் சார் ஸ்டுடியோவில் பணியாற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். ரவி மோகன் சார், உங்களுடன் ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறேன். இதை நான் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி. நாம் அனைவரும் சேர்ந்து தட்றோம், கலக்குறோம், தூக்குறோம்” என்றார்.
நடிகர் கண்ணா ரவி பேசும்போது,
”சக்தி சாருக்கு மிகவும் நன்றி ஏனென்றால் நான் இவ்வளவு பெரிய விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் பார்த்து ரசித்து பணியாற்றிய அனைத்து நடிகர்கள் முன்னிலையில் நான் செய்த ஒரு சிறிய புரோமோ இன்று வெளியாவதில் மிகவும் மகிழ்ச்சி.
ரவி அண்ணா ஒவ்வொரு படத்திலும் அவருடைய கதாபாத்திரம் நல்லவராகவே இருக்கும். கார்த்தி சார் கூறியது போல அவர் மிகவும் நல்ல மனிதர். அதை நான் ஒரு சில நிமிடங்களிலேயே உணர்ந்து கொண்டேன். என்னுடைய குடும்பமே அவருடைய ரசிகர்கள் தான். முக்கியமாக என்னுடைய அப்பா அம்மா ரவி படம் வந்திருக்கு வா பார்க்கலாம் என்று கூப்பிடுவார்கள். அவர் நல்ல நடிகர், சமூக பொறுப்பு மிகுந்த மனிதர். அவர் ஒரு படம் எடுக்கும்போது சமூகத்தை சார்ந்து தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த படத்தில் என்னுடைய பங்கும் இருப்பதில் மகிழ்ச்சி” என்றார்.
இயக்குனர் சக்திவேல் பெரியசாமி பேசும் போது,
”நான், ஷியாம் மற்றும் ரவி சார் மூவரும் ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் அப்போது ஒரு நாள் நான் ஒரு கதை சுருக்கத்தை அனுப்பினேன். அதை படித்துவிட்டு நிச்சயம் செய்யலாம் என்றார். என் மீது நம்பிக்கை வைத்து படத்தை கொடுத்ததற்கு நன்றி. நான் கொடுத்த கதை சுருக்கத்தை விட படம் மிகவும் நன்றாகவே வரும். அதே போல் ஆர்டினரி மேன், ப்ரோ கோட் குழுவினருக்கும் நன்றி, ஏனென்றால், மூன்று படங்களில் இணைந்து நானும் பணியாற்ற போகிறேன். எல்லோருக்கும் நன்றி” என்றார்.