கூலி – விமர்சனம்

நடிப்பு: ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர்கான் (சிறப்பு தோற்றம்), ரச்சிதா ராம், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர், கண்ணா ரவி, மோனிஷா பிளெஸி, காளி வெங்கட், ரிஷிகாந்த், தமிழ், சார்லி, ஐயப்ப பி சர்மா, லொள்ளு சபா மாறன், திலீபன், பூஜா ஹெக்டே (சிறப்பு தோற்றம்) மற்றும் பலர்

கதை, வசனம், இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

கூடுதல் திரைக்கதை: சந்துரு அன்பழகன்

ஒளிப்பதிவு: கிரீஷ் கங்காதரன்

படத்தொகுப்பு: ஃபிலோமின் ராஜ்

ஸ்டண்ட்: அன்பு, அறிவு

நடனம்: சாண்டி

இசை: அனிருத் ரவிச்சந்தர்

தயாரிப்பு: ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத் & பாரஸ் ரியாஸ்

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகபட்டினம் துறைமுகத்தையும், அங்கு வேலை பார்க்கும் பல்லாயிரக் கணக்கான கூலித் தொழிலாளர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ’தங்கக் கைக்கடிகாரங்கள்’ கடத்தல் தொழிலோடு, அப்பாவி மனிதர்களைக் கொன்று அவர்களின் இதயங்களை எடுத்து, சர்வதேச அளவில் சட்டவிரோதமாக ‘மனித இதயங்கள்’ கடத்தல் தொழிலையும் செய்து வருகிறார், மிகப் பெரிய மாஃபியாவான சைமன் (நாகார்ஜுனா). அவரது விசுவாசியாகவும், இத்தொழில்களில் அவருக்கு வலது கரமாகவும் திகழும் தயாள் (சௌபின் ஷாஹிர்), சைமன் சார்பில் முழு துறைமுகத்தையும், மொத்த கூலித் தொழிலாளர்களையும் ஈவு இரக்கமின்றி, கொடூரமாகக் கட்டி ஆண்டு வருகிறார்.

இங்கு எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு வரை படித்துவிட்டு டிஸ்கண்டின்யூ செய்த பிரீத்தி (ஸ்ருதி ஹாசன்) உள்ளிட்ட மூன்று மகள்களுடன் வசித்து வருபவர் விஞ்ஞானி ராஜசேகர் (சத்யராஜ்). இவர் தீவிர ஆராய்ச்சிகள் செய்து, இறந்த விலங்குகளின் உடல்களை முப்பதே நொடிகளில் எரித்து சாம்பலாக்கிவிடக் கூடிய ‘எலக்ட்ரிக் சேர்’ எனப்படும் ‘மின் தகன நாற்காலி’ ஒன்றை உருவாக்குகிறார். அவரது இந்த கண்டுபிடிப்பை அங்கீகரிக்க அரசாங்கம் மறுத்துவிடுகிறது. இது பற்றி தெரிந்து கொள்ளும் சைமன், இதயங்களுக்காக கொல்லப்படும் மனிதர்கள் மற்றும் தனது கூட்டத்துக்குள் ஊடுருவி விட்டார்கள் என்பதற்காகக் கொல்லப்படும் போலீஸ் உளவாளிகள் ஆகியோரின் பிணங்களை ’மின் தகன நாற்காலி’ மூலம் சடுதியில் எரித்து சாம்பல் ஆக்குவதற்காக, விஞ்ஞானி ராஜசேகரை மிரட்டி, தன்னிடம் பணிபுரிய இணங்க வைத்து, சேர்த்துக்கொள்கிறார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் ராஜசேகரின் உயிர் நண்பராக இருந்தவரும், ராஜசேகரின் தங்கையை மணந்தவருமான தேவா (ரஜினிகாந்த்), இப்போது சென்னை திருவல்லிக்கேணியில், ரூம்களை குறைந்த வாடகைக்குக் கொடுக்கும் ‘தேவா மேன்ஷன்’ என்றொரு மேன்ஷனை நடத்தி வருகிறார். அவருக்கு, விசாகபட்டினத்தில் வசித்த தனது நண்பரும் மைத்துனருமான ராஜசேகர் திடீரென மரணம் அடைந்துவிட்டதாக தகவல் வர, அதிர்ச்சி அடையும் தேவா, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக விசாகபட்டினம் விரைகிறார்.

மாலையும் கையுமாக வரும் தேவாவைப் பார்த்து ஆத்திரப்படும் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி, “நீங்க எதுக்கு வந்தீங்க? போங்க இங்கிருந்து” என்று ஆவேசமாகக் கத்துகிறார். ராஜசேகரின் உடல் மீது தேவா வைத்த மாலையை எடுத்து வீசியெறிந்து அவரை அவமானப்படுத்தி வெளியே அனுப்பி விடுகிறார்.

விஞ்ஞானி ராஜசேகர் கொலை செய்யப்பட்டதாக முதலில் ஒரு பிரேதப் பரிசோதனை அறிக்கையும், பின்னர் அதை மாற்றி, இயற்கையாக இறந்ததாக இன்னொரு பிரேதப் பரிசோதனை அறிக்கையும் தயாரிக்கப்பட்டிருப்பது தேவாவுக்குத் தெரிய வருகிறது. மேலும் ப்ரீத்தி உள்ளிட்ட ராஜசேகரின் மூன்று மகள்களின் உயிருக்கும் ஆபத்து காத்திருப்பதையும் அறிகிறார்.
தனது நண்பர் ராஜசேகரைக் கொன்றது யார்? ஏன்? என்பதைக் கண்டறிவதற்காகவும், அவரது மூன்று மகள்களை காப்பதற்காகவும், ராஜசேகர் பணியாற்றி வந்த மாஃபியா சைமனிடம் வேலையில் சேர்ந்து, அவரது கடத்தல் கூட்டத்துக்குள் நுழைகிறார் தேவா.

அதன்பிறகு என்ன நடந்தது? உண்மையில் தேவா யார்? அவரது பின்னணி என்ன? ராஜசேகர் யார்? அவரது பின்னணி என்ன? ராஜசேகரை கொலை செய்தது யார்? காரணம் என்ன? கொலையாளியை தேவா என்ன செய்தார்? தேவாவை ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி வெறுக்கக் காரணம் என்ன? ப்ரீத்தி பின்னர் மனம் மாறினாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு நிறைய திருப்பங்களுடன் விடை அளிக்கிறது, ‘கூலி’ திரைப்படத்தின் கதை.

கதையின் நாயகன் தேவாவாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அவர் தன்னைப் பற்றி ”இது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பது மாடலு. பல லட்சம் கிலோமீட்டர் ஓடிருச்சு. பார்ட்ஸ் எல்லாம் மாத்திருக்காங்க. ரொம்ப படுத்தினீங்கன்னா பார்ட்ஸ் எல்லாம் கழன்றும்” என்று பகிரங்கமாக கூறியிருப்பதைப் புரிந்துகொண்டு, – இதற்குமுன் இயக்குநர்கள் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், டி.ஜே.ஞானவேல், நெல்சன் ஆகியோர் நவீன தொழில்நுட்பங்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி, ரஜினி வேகமாக நடப்பது போலவும், வேகமாக சண்டை போடுவது போலவும், திறமையாக நடிப்பது போலவும் மாயத் தோற்றத்தை உருவாக்கியது போல – இப்படத்தின் இயக்குநர் லோகேஷும் கவனமாக கையாண்டு, ‘சூப்பர் ஸ்டார்’ இமேஜை ரஜினி தக்க வைத்துக்கொள்ள உதவியிருக்கிறார்.

மெயின் வில்லன் சார்பில் விசாகபட்டினம் துறைமுகத்தைக் கட்டி ஆளும் அவரது வலது கரமான தயாள் கதாபாத்திரத்தில் சௌபின் ஷாஹிர் நடித்திருக்கிறார். படம் முழுவதும் எதிர்மறை கேரக்டரில் வரும் அவர் தான் இப்படத்தில் மிகப் பெரிய சர்ப்ரைஸ். எப்படி இப்படி நடிக்கிறார்… எப்படி இப்படி ஆடுகிறார்… என்று ஒரே ஆச்சரியம். தமிழ் திரையுலகில் மிக விரைவிலேயே நம்பர் 1 வில்லனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

ராஜசேகராக வரும் சத்யராஜ், ப்ரீத்தியாக வரும் ஸ்ருதி ஹாசன், சைமனாக வரும் நாகார்ஜுனா, கலீஷாவாக வரும் உபேந்திரா, தாஹாவாக வரும் அமீர்கான், மற்றும் ரச்சிதா ராம், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர், கண்ணா ரவி, மோனிஷா பிளெஸி, காளிவெங்கட் என ஏராளமாக கேரக்டர்கள் திரையில் உலவினாலும் இவர்கள் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை என்பது பெருங்குறை.

இப்படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காதா என பல திறமையான இயக்குநர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டாரா என்று கேட்டால், இல்லை என்று தான் ஓங்கி குரலெழுப்ப வேண்டியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானதிலேயே ‘லியோ’ தான் ’மொக்கை’யான படம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் தற்போது மிகவும் பலவீனமான திரைக்கதையின் மூலம் ‘படுமொக்கையான’ லோகேஷ் படம் என்ற பெருமையை ‘கூலி’ தட்டிச் சென்றுள்ளது.

அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட். பின்னணி இசை ‘மாஸ்’ காட்சிகளில் மட்டும் கைகொடுத்திருக்கிறது. மற்ற காட்சிகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை.

‘கூலி’ – ஒருமுறை பார்க்கலாம் – இப்படம் ஏன் படுமொக்கை என்பதை தெரிந்துகொள்ள!
ரேட்டிங்: 2/5