சரண்டர் – விமர்சனம்

நடிப்பு: தர்ஷன் தியாகராஜா, லால், சுஜித் சங்கர், முனீஸ்காந்த், பாடினி குமார், அரோல் டி சங்கர், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேஸ்வரன், கௌஷிக், மன்சூர் அலிகான் (சிறப்புத் தோற்றம்) மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: கௌதமன் கணபதி
ஒளிப்பதிவு: மெய்யேந்திரன்
படத்தொகுப்பு: ரேணு கோபால்
இசை: விகாஸ் பதிஷா
தயாரிப்பு: ‘அப்பீட் பிக்சர்ஸ்’ விஆர்வி குமார்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எஸ்2 மீடியா)
தற்காப்புக்காக அரசின் அனுமதி (’லைசென்ஸ்’) பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் வி.ஐ.பி.கள் அனைவரும், தேர்தல் காலத்தில் – தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக – தங்கள் துப்பாக்கிகளை போலீசில் ‘சரண்டர்’ செய்துவிட வேண்டும் என்பது விதி. இதன்படி திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் (திரைப்பட நடிகர் மன்சூர் அலிகானாகவே வருகிறார்) வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன், சென்னை திருமழிசை காவல் நிலையத்துக்கு வந்து தனது துப்பாக்கியை சரண்டர் செய்கிறார். அங்கு ரைட்டராக பணிபுரியும் பெரியசாமி (லால்) அந்த துப்பாக்கியை பெற்று லாக்கரில் வைக்கிறார். “எப்ப திருப்பிக் கொடுப்பீங்க?” என்ற மன்சூர் அலிகானின் கேள்விக்கு, “வாக்கு எண்ணிக்கை முடிந்து ரிசல்ட்டெல்லாம் அறிவிச்ச பிறகு வந்து வாங்கிக்கங்க” என்கிறார் பெரியசாமி. “வாக்குப்பதிவு முடிஞ்சு ரெண்டு மாசம், ரெண்டரை மாசம் கழிச்சி ஓட்டு எண்ணுவீங்க. அது வரைக்கும் என் தற்காப்புக்கு என்ன செய்வது? ஓட்டுப் போட்டுட்டு, அதுக்கான அடையாள மை காயிறதுக்குள்ள கமிஷனரின் ஸ்பெஷல் பெர்மிஷனோடு வருவேன். அப்ப என் துப்பாக்கியை என்கிட்ட கொடுக்கணும்” என்று கறாராக சொல்லிவிட்டுப் போகிறார் மன்சூர் அலிகான். அவரது துப்பாக்கியை ஒருநாள் பெரியசாமி லாக்கரிலிருந்து எடுத்து ஏதோ ஞாபகமாய் ஜன்னலருகே வைக்க, அந்த துப்பாக்கி காணாமல் போய்விடுகிறது. இதனால் இன்னும் ஆறு மாதங்களில் ரிட்டையர் ஆகவிருக்கும் நல்ல போலீசான பெரியசாமிக்குப் பிரச்சனை. வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கே நாட்கள் இருக்கும் நிலையில், பெரியசாமியும், அவரது காவல் நிலையத்துக்கு புதிதாய் வந்திருக்கும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் (தர்ஷன் தியாகராஜா), காணாமல் போன துப்பாக்கியைத் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.

மறுபுறம், ஓர் ஊழல் அமைச்சர், வாக்காளர்களுக்கு முறைகேடாக கொடுப்பதற்காக வைத்திருக்கும் பணத்தை, அனைத்துத் தொகுதிகளுக்கும் ரகசியமாய் அனுப்பி வைக்கும் பொறுப்பை ஐஸ் ஃபேக்டரி நடத்தும் தாதா கனகுவிடம் (சுஜித் சங்கர்) ஒப்படைக்கிறார். சோழிங்கநல்லூர் தொகுதிக்கான ரூ,10 கோடியை போலீஸ் அதிகாரி வில்லியம்ஸிடம் கொடுத்து அனுப்புகிறார் தாதா கனகு. வில்லியம்ஸ் பயணிக்கும் போலீஸ் வாகனம் வழியில் விபத்துக்குள்ளாகி விடுகிறது. காயமடைந்த வில்லியம்ஸ் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரிடம் கொடுத்தனுப்பிய ரூ.10 கோடி காணாமல் போய் விடுகிறது. அது குறித்து தாதா கனகு தரப்பு விசாரிக்கும்போது, விபத்து நடந்தவுடன் மயக்கம் அடைந்துவிட்டதாகவும், கண் விழித்தபோது மருத்துவமனையில் இருப்பதாகவும், பணத்தை எடுத்தது யார் என தெரியாது என்றும் வில்லியம்ஸ் சாதிக்கிறார். அமைச்சருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கும் தாதா கனகு, மாயமான பணத்தை உடனடியாக தேடி கண்டுபிடித்து சோழிங்கநல்லூரில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் அவரும் அவரது ஆட்களும் அந்த பணத்தைத் தேடி அலைகிறார்கள்.
காணாமல் போன துப்பாக்கி, காணாமல் போன ரூ.10கோடி ஆகிய இரண்டு பிரச்சனைகளும் சந்திக்கும் புள்ளி எது? அதன்பின் ஏற்படும் புதிய பிரச்சனைகள் என்ன? அவற்றிற்கு எல்லாம் எவ்விதம் தீர்வு காணப்பட்டது? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘சரண்டர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
’பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த தர்ஷன் தியாகராஜா இப்படத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தியாக நடித்திருக்கிறார். ரைட்டர் பெரியசாமியின் சுகதுக்கங்களில் உள்ளன்போடு பங்கேற்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தூள் பரத்தியிருக்கிறார். தமிழ் திரையுலகில் இவர் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் என்றபோதிலும், இந்த கதைக்கு இவரது இந்த நடிப்பு போதுமானதாகவே இருக்கிறது.
ரைட்டர் பெரியசாமியாக லால் நடித்திருக்கிறார். இவரது கதாபாத்திரம் தான் கதையின் முதுகெலும்பாக அமைந்திருக்கிறது. 32 ஆண்டுகள் நல்ல போலீசாக உழைத்தபோதிலும் அதற்குரிய நல்ல பலன் கிடைக்கவில்லையே என்ற விரக்தி, இன்னும் ஆறு மாதங்களில் ரிட்டையர் ஆக இருக்கும் நிலையில் துப்பாக்கியைத் தொலைத்து, தன் சர்வீஸில் ’கருப்புப்புள்ளி’ வாங்கப் போகிறோமே என்ற ஆற்றாமை, காணாமல் போன துப்பாக்கியை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கம் போன்றவற்றில் தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிடுகிறார்.
ஆளுங்கட்சியின் கருப்புப் பணத்தை தொகுதிகளுக்கு ரகசியமாக அனுப்பும் தாதா கனகுவாக சுஜித் சங்கர் நடித்திருக்கிறார். ஆக்ரோஷம், முகபாவம், உடல்மொழி போன்றவற்றை காட்டுவதில் வழக்கமான வில்லன்களிலிருந்து வித்தியாசமாக தனித்தன்மையுடன் சிறப்பாக நடித்திருக்கிறார். தொலைந்த 10 கோடியை மீட்க அவர் படும்பாடு – அவர் படுத்தும் பாடு – மிரட்டலாக இருக்கிறது.
தாதா கனகுவின் தம்பியாக வரும் கௌசிக், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அரோல் டி சங்கர், பெண் சப்-இன்ஸ்பெக்டராக வரும் ரம்யா ராமகிருஷ்ணன், ரவுடியாக வரும் சுந்தரேசன், ஏழைத்தாயாக வரும் செம்மலர் அன்னம், துப்பாக்கி வாங்க சென்னைக்கு காமெடி பயணம் மேற்கொள்ளும் ‘போஸ்டர் முதலாளி’ சித்தப்பாவாக வரும் முனீஸ்காந்த், மன்சூர் அலிகானாகவே சிறப்புத் தோற்றத்தில் வரும் மன்சூர் அலிகான், உமையாளாக வரும் பாடினி குமார் உள்ளிட்டோர் தத்தமது பங்களிப்பை நிறைவாகச் செய்துள்ளார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கௌதமன் கணபதி. தொலைந்துபோன துப்பாக்கி மற்றும் மாயமான ரூ.10 கோடி ஆகியவற்றை மையமாக வைத்து, கதாநாயகி, காதல், டூயட் இல்லாமல், யதார்த்தத்துக்கு நெருக்கமாக கதை வளர்த்து, பரபரப்பான திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம், முழுமையான ஆக்ஷன் திரில்லர் படத்தை விறுவிறுவிறுப்பாகக் கொடுப்பதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.
இயக்குநர் கௌதம் கணபதியின் சிறந்த திரைக்கதை எழுத்து, பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, நேர்த்தியான காட்சியாக்கம், இசையமைப்பாளர் விகாஸ் பதிஷாவின் அருமையான பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரனின் யதார்த்தமான ஒளிப்பதிவு, இருவேறு டிராக்குகளை அட்டகாடமாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ரேணு கோபாலின் விறுவிறுப்பான படத்தொகுப்பு ஆகிய அனைத்தும் ஒருங்கே இணைந்து பார்வையாளர்களுக்கு பிரமாதமான திரை அனுபவத்தை வழங்கி, நிறைவை ஏற்படுத்துகின்றன.
’சரண்டர்’ – பாமர ரசிகர்கள் முதல் திரைபட பண்டிதர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் நிச்சயம் பிடிக்கும்!
ரேட்டிங்: 3.75/5