அக்யூஸ்ட் – விமர்சனம்

நடிப்பு: உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா கலகேரி, சந்திகா, பவன், தயா பன்னீர்செல்வம், ஸ்ரீதர், பிரபு ஸ்ரீனிவாஸ், பிரபு சாலமன், சங்கர் பாபு, ஜெயகுமார், தீபா, சுபத்ரா, டி.சிவா மற்றும் பலர்

கதை, திரைக்கதை, இயக்கம்: பிரபு ஸ்ரீனிவாஸ்

ஒளிப்பதிவு: மருதநாயகம்.ஐ

படத்தொகுப்பு: கே.எல்.பிரவீன்

இசை: நரேன் பாலகுமார்

தயாரிப்பு: ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன், எம்ஐஒய் ஸ்டுடியோ

தயாரிப்பாளர்கள்: ஏஎல்.உதயா, தயா என் பன்னீர்செல்வம், எம்.தங்கவேல்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

பிரியாணி சமைப்பதில் கைதேர்ந்தவரான கதையின் நாயகன் கனகு (உதயா), சட்டமன்ற உறுப்பினர் குணசேகரை (பவன்) சந்தித்து, பிரியாணிக்கடை வைக்க தனக்கொரு இடம் கொடுத்து உதவுமாறு கேட்டதாகவும், அவரது நச்சரிப்புத் தாங்காமல் அவரை எம்.எல்.ஏ பலரது முன்னிலையில் ஓங்கி அறைந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த கனகு, எம்.எல்.ஏ.வின் பங்களாவுக்குள்ளே புகுந்து அவரை வெட்டி படுகொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கைதி கனகுவை விசாரணைக்காக, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக ஒரு போலீஸ் வேனில் ஏற்றிச் செல்கிறது போலீஸ் குழு. காவலுக்காக உடன் செல்லும் மூன்று பேர் கொண்ட அந்த போலீஸ் குழுவில் கான்ஸ்டபிள் வேந்தனும் (அஜ்மல்) ஒருவர்.

வழியில், சில காரணங்களால், போலீஸ் வேனைக் கைவிட்டுவிட்டு, அரசு பேருந்தில் கனகுவை அழைத்துச் செல்கிறார்கள். அப்போது வெளிமாநில அடியாள் கும்பல் ஒன்று பேருந்துக்குள் புகுந்து, தாக்குதல் நடத்தி, கனகுவை கொலை செய்ய முயலுகிறது. இத்தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழக்கிறார். மற்றொரு போலீஸ்காரர் படுகாயம் அடைகிறார்.

சிறு காயங்களுடன் தப்பி ஓடும் கைதி கனகுவும், கான்ஸ்டபிள் வேந்தனும் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் ரகசியமாகத் தங்குகிறார்கள். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அந்த ஊர் போலீஸ் அதிகாரியோ, ‘என்கவுண்ட்டர்’ என்ற பெயரில் கனகுவை சுட்டுக்கொல்ல முயற்சி செய்கிறார். இதற்கு இடையூறாக இருக்கும் கான்ஸ்டபிள் வேந்தனையும் தீர்த்துக்கட்டும் முடிவில் இருக்கிறார். இச்சதிக்குப் பின்னணியில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இருக்கிறார்.

கனகுவை வெட்டிக்கொல்லத் துரத்தும் அடியாள் கும்பல் ஒருபுறம், போலி என்கவுண்ட்டரில் அவரையும் தன்னையும் போட்டுத் தள்ளத் துரத்தும் அதிகாரி தலைமையிலான போலீஸ் குழு மறுபுறம் என்ற ஆபத்தான நிலையில், அவர்களிடமிருந்து கனகுவை கான்ஸ்டபிள் வேந்தன் காப்பாற்றி, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தன் கடமையை வெற்றிகரமாக செய்து முடித்தாரா, இல்லையா? கனகு உண்மையில் யார்? அவரது பின்னணி என்ன? எம்.எல்.ஏ குணசேகர் கொலை விவகாரத்தில் அவர் சிக்க வைக்கப்பட்டது எப்படி? எம்.எல்.ஏவைக் கொன்ற உண்மையான குற்றவாளிகள் யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதை நாயகன் கனகுவாக உதயா நடித்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட நபர் (அக்யூஸ்ட்) என்ற தன் கதாபாத்திரத்தின் தன்மையை நன்கு புரிந்துகொண்டு, அதற்கேற்ற சோர்வான நடை, அழுக்கு உடை, இறுக்கமான முக பாவனையுடன் கடும் உழைப்பைக் கொட்டி, கனகுவாகவே திரையில் வாழ்ந்திருக்கிறார். காதல், ரொமான்ஸ், சோகம், கோபம் என சகல உணர்வுகளையும் துல்லியமாக பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். இது போல் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால், இருபத்தைந்து ஆண்டுகளாக நடித்துவரும் அவர், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னணி நடிகராக இன்னொரு ரவுண்டு வரலாம்.

கான்ஸ்டபிள் வேந்தனாக அஜ்மல் நடித்திருக்கிறார். ‘அஞ்சாதே’, ‘கோ’ போன்ற படங்களுக்குப் பிறகு படம் முழுக்க வரும் வாய்ப்புள்ள கதாபாத்திரம் அவருக்கு. கான்ஸ்டபிளுக்கு உரிய மிடுக்கான தோற்றத்தில் கம்பீரமாகவும், உயர் அதிகாரிகள் முன் பணிவாகவும் வருகிறார். கைதியை பாதுகாப்பாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்ற கருமமே கண்ணாக, வழியில் வரும் தடங்கல்களைத் தகர்த்தெறியப் போராடுகிறவராக, சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

நாயகனின் காதலி மலராக ஜான்விகா கலகேரி நடித்திருக்கிறார். பார்க்க அழகாக இருக்கிறார். முதலில் நாயகனுடன் ரொமான்ஸ் செய்வது, பின்னர் வேறொருவருக்கு (தயா பன்னீர்செல்வம்) மனைவியாகி தவிப்பது, பெற்ற மகளை காப்பாற்றக் கதறுவது என பன்முக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

லாட்ஜ் உரிமையாளர் ராமாநாயுடுவாக யோகி பாபு நடித்திருக்கிறார். அவர் பேசும் கிண்டலான காமெடி வசனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. அவர் உதயா மற்றும் அஜ்மலுடன் சேர்ந்து பாடி ஆடிக்கொண்டே பிரியாணி சமைத்து சாப்பிடுவது கலகல.

கான்ஸ்டபிள் வேந்தனின் ஜோடி தர்ஷினியாக வரும் சாந்திகா, நாயகி மலரை திருமணம் செய்யும் நாகராஜாக வரும் தயா பன்னீர்செல்வம், கொல்லப்படும் எம்.எல்.ஏ குணசேகராக வரும் பவன், அவரது தம்பி தனசேகராக வரும் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.வின் மனைவியாக வரும் சுபத்ரா, நாயகனின் சகோதரியாக வரும் தீபா, நீதிபதியாக வரும் பிரபு சாலமன், அமைச்சராக வரும் டி.சிவா, ஏ.சி. சரவணனாக வரும் பிரபு ஸ்ரீனிவாஸ், மற்றும் சற்குணமாக வரும் சங்கர் பாபு, கிருபாவாக வரும் ஜெயகுமார் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ். குற்றம் சாட்டப்பட்ட அக்யூஸ்ட்டுக்கும், அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போலீசுக்கும் இடையே, பயணத்தினுடே துளிர்க்கும் நட்பு மற்றும் இடர்பாடுகளை மையமாகக் கொண்டு கதை எழுதி, தேவையான கதாபாத்திரங்களைப் படைத்து சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களை திறமையாக வேலை வாங்கி, படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். பாராட்டுகள்.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ, படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், படம் நேர்த்தியாக வர உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

‘அக்யூஸ்ட்’ – திருப்பங்களுடன் கூடிய விறுவிறுப்பான படம்; கண்டு களிக்கலாம்!

ரேட்டிங்: 3/5.